[X] Close

பட்லர் இல்லேனா... பேர்ஸ்டோ: பாகிஸ்தானின் இமாலய இலக்கை துவம்சம் செய்த இங்கிலாந்துக்கு 2-வது வெற்றி


2

  • kamadenu
  • Posted: 15 May, 2019 11:14 am
  • அ+ அ-

-போத்திராஜ்

ஜானி பேர்ஸ்டோ, ஜேஸன் ராய் ஆகியோரின் காட்டடி ஆட்டத்தால் பிரிஸ்டனில் நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

சவுத்தாம்டன் நகரில் நடந்த கடந்த ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு ஜோஸ் பட்லரின் அதிரடி சதம் காரணம் என்றால், இந்த போட்டியில் ஜானி பேர்ஸ்டோவின் காட்டடி சதம் முக்கியக் காரணமாக அமைந்தது.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் சேர்த்தது. 359 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 31 பந்துகள் மீதம் இருக்கையில் 4 விக்கெட்டுகளை இழந்து 359 ரன்கள் சேர்த்து அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணி சேஸிங் செய்ததில் இரண்டாவது அதிகபட்சம் இதுவாகும். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் இருக்கிறது.

இங்கிலாந்து அணி சொந்தமண்ணில் தொடர்ச்சியாக பெறும் 15-வது வெற்றி . இந்த 15 போட்டிகளின் வெற்றிகளில் பெரும்பாலனவை தொடக்க ஆட்டக்காரர்களின் சிறப்பான பேட்டிங்கால் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக இங்கிலாந்து அணி டாஸ்வென்றால் முதலில் பேட் செய்வதையே விரும்பும். ஆனால், உலகக்கோப்பை நெருங்கும் வேளையில் புதியஅனுபவத்துக்காக கேப்டன் மோர்கன் சேஸிங் செய்ய விரும்பி அதில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு ஜானி பேர்ஸ்டோவின் அதிரடி சதமும், அவருக்கு துணையாக பேட் செய்த ஜேஸன் ராயும்தான் காரணம். பேர்ஸ்டோ தனது தனது 7-வது சதத்தை பதிவு செய்தார்.

34 பந்துகளில் அரைசத்ததையும், 74 பந்துகளில் சத்தையும் பேர்ஸ்டோ நிறைவு செய்து, 93 பந்துகளில் 128 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகள் அடங்கும்.

eng.jpg 

இவருக்கு துணையாக ஆடிய ஜேஸன் ராய் 55 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்தார். இதில் 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும். ஜேஸன் ராய் 21 ரன்கள் சேர்த்திருந்தபோது, பாகிஸ்தான் வீரர் ஷாகின் ஷா அப்ரிடி கேட்சை நழுவவிட்டார். அந்த வாய்ப்பை பயன்படுத்திய ராய், அதிரடியாக ஆடி 76 ரன்கள் குவித்தார்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை இங்கிலாந்து அணியில் வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், டாம் கரன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். இருவரும் உலகக்கோப்பைக்கான அணியில் இருந்தாலும், ரன்குவிப்பை கட்டுப்படுத்தும் வகையில் பந்துவீசவில்லை என்ற குறைபாடு இருந்து வருகிறது.

உலகக் கோப்பை நெருங்கும் வேளையில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அருமையான ஃபார்மில் இருக்கிறார்கள். குறிப்பாக பேர்ஸ்டோ, பட்லர், ராய், மோர்கன், ரூட் ஆகியோர் நிச்சயம் அனைத்து அணிகளுக்கும் பெரும் சவாலாக இருப்பார்கள் என்பதில் சந்தேமில்லை.

eng1.jpg 

அதேசமயம் பாகிஸ்தான் அணியில் இமான் உல் ஹக் தவிர்த்து மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பேட் செய்யவில்லை. பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி படுமோசமாக இருக்கிறது. இந்த அளவுக்கு மோசமான பந்துவீச்சோடு உலகக் கோப்பைக்கு சென்றால், லீக் சுற்றோடு அடிவாங்கி வெளியேறுவது உறுதியாகும். பந்துவீசிய 7 வீரர்களும் சராசரியாக ஓவருக்கு 9 ரன்களை வாரி வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தது. முதலில் பாகிஸ்தான் பேட் செய்தது. பாகிஸ்தான் தரப்பில் இமாம் உல் ஹக் சிறப்பாக பேட் செய்து சதம் அடித்து 131 பந்துகளில் 151 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 55 பந்துகளில் அரைசதத்தையும், 97 பந்துகளில் சதத்தையும் , 128 பந்துகளில் 150 ரன்களையும் இமாம் உல் ஹக் எட்டினார்.

27 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இமாம் இல் ஹக் அடிக்கும் 6-வது சதம் இதுவாகும். முன்னாள் கேப்டன் இன்சமாம உல் ஹக்கின் தங்கை மகன் இமாம் உல்ஹக் என்பது குறிப்பிடத்தக்கது.  இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

imam.jpg 

கடந்த போட்டியில் சதம் அடித்த பக்கர் ஜமான்(2), பாபர்ஆசம்(15) ரன்களில் ஆட்டமிழந்தனர். இவருக்கு துணையாக ஆசிப் அலி(52), ஹாரிஸ் சோஹைல்(41) மட்டுமே ஆடினார்கள் மற்றவர்கள் விளையாடவில்லை. அதிரடியாக பேட் செய்த ஆசிப் அலி 39 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.

5-வது விக்கெட்டுக்கு ஆசிப் அலி, இமாம் சேர்ந்து 125 ரன்கள் சேர்த்தனர்.  மற்ற வீரர்களான சர்பிராஸ் அகமது(27), இமாத்வாசிம்(22) பாஹிம் அஸ்ரப்(13) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஹசன் அலி 18 ரன்னிலும், ஜூனைத்கான் ரன் ஏதும் சேர்க்காமலும் களத்தில் இருந்தனர். 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் சேர்த்தது பாகிஸ்தான் அணி.

359 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஜேஸன் ராய், பேர்ஸ்டோ நல்ல தொடக்கம் அளித்து, சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு இருவரும் 159 ரன்கள் சேர்த்தனர். ஜேஸன் ராய் 76 ரன்களில் ஆட்டமிழந்தார்.

2-வது வந்த ஜோய் ரூட், பேர்ஸ்டோவுடன் இணைந்தார்.இருவரும் சேர்ந்து நிதானமாக ரன்களைச் சேர்த்தனர். சதம் அடித்த பேர்ஸ்டோ 128 ரன்கள் சேர்த்து ஜூனைத்தான் வேகத்தில் போல்டாகி ஆட்டமிழந்தார். . 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 75 ரன்கள் சேர்த்தனர்.  

அரைசதம் நோக்கிமுன்னேறிய ரூட் 43 ரன்களில் இமாத் வாசிம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் அடுத்து வந்த பென்ஸ்டோக்ஸ் 37 ரன்களில் வெளியேறினார்.

5-வது விக்கெட்டுக்கு மொயின் அலி, கேப்டன் மோர்கன் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். மோர்கன் 17 ரன்னிலும், மொயின் அலி 46 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 44.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் சேர்த்து இங்கிலாந்து அணி 6 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் தரப்பில் ஜூனைத்கான், இமாத் வாசிம், அஷ்ரப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close