[X] Close

வேகப்பந்து வீச்சை எப்படி ஆட வேண்டும் என்று எங்களுக்குக் கற்றுக் கொடுத்த குரு மொஹீந்தர் அமர்நாத்: சுனில் கவாஸ்கரின் பெருந்தன்மையான ஒப்புதல்


  • kamadenu
  • Posted: 14 May, 2019 16:54 pm
  • அ+ அ-

-இரா.முத்துக்குமார்

அச்சமூட்டும் வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்ட மே.இ.தீவுகளுக்கு எதிரான தன் முதல் அறிமுகத் தொடரில் 774 ரன்கள் (1971) எடுத்து உலக சிறந்த வீரர்களெல்லாம் யார் இவர் என்று மூக்கின் மேல் விரலை வைக்கச் செய்தவர் சுனில் கவாஸ்கர். ஆனால் இவர் தங்களுக்கு வேகப்பந்து வீச்சை எப்படி ஆடுவது என்பதை மொஹீந்தர் அமர்நாத் கற்றுக் கொடுத்தார் என்று பெருந்தன்மையாகக் கூறியுள்ளார்.

சியட் கிரிக்கெட் விருதுகளின் தலைமை தீர்ப்பாளரான சுனில் கவாஸ்கர், ‘வாழ்நாள் சாதனையாளர்’ சியட் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட மொஹீந்தர் அமர்நாத்திற்கு இவ்வாறு ஒரு புகழாரம் சூட்டியதில், இப்போதைய கிரிக்கெட் வெற்று சலசலப்புகளுக்கிடையே மறக்கப்பட்ட மொஹீந்தர் அமர்நாத்தை இவ்வாறு கூறியிருப்பது முக்கியமானதாகும்.

தன்னுடைய வெளிப்படையான நேர்மையான கருத்துகளினால் அடிக்கடி அணியிலிருந்து நீக்கப்பட்டும் மீண்டும் சேர்க்கப்பட்ட விதத்தில் மொஹீண்டர் அமர்நாத் போல் அதிகமுறை தண்டிக்கப்பட்ட வேறொரு வீர்ர் இருக்க முடியாது. 1983 உலகக்கோப்பை இறுதிப் போட்டி ஆட்ட நாயகன் மொஹீந்தர் அமர்நாத்.

1979-80-ல் பாகிஸ்தானுக்கு எதிரான 6 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அபாரமான சதங்களுடன், இம்ரான் கான், சர்பராஸ் பெரிய பார்மில் இருந்த தருணத்தில் 584 ரன்களைக் குவித்தவர் மொஹீந்தர். அந்தத் தொடரில் இம்ரான் கானின் இன்ஸ்விங்கரை ஆட இந்திய அணியில் ஒருவரும் இல்லை அமர்நாத்தைத் தவிர சுனில் கவாஸ்கரும் அந்தத் தொடரில் 3 சதங்களை எடுத்தார். ஆனால் இம்ரான் வீசும் போது ‘சைட் ஸ்க்ரீன்’ நடுவில் இருந்தால் தேவலாம் என்று இம்ரானை நகைச்சுவையாகப் புகழ்ந்தது அப்போதைய பெரிய ஸ்டேட்மெண்ட் ஆகும். நடுவர்கள் படுமோசமாக தீர்ப்புகளை பாகிஸ்தானுக்குச் சாதகமாக வழங்கிய அந்தத் தொடரில், நோ-பால்களையே பார்க்காத நடுவர்களாக பாக். நடுவர்கள் இருந்தத் தொடரில் அமர்நாத்தின் 584 ரன்கள் 1000 ரன்களுக்குச் சமமானதாகும். மேலும் தாம்சன், லில்லி என்று ஆஸி.பவுலர்களையும் வெளுத்துக் கட்டியிருக்கிரார் மொஹீந்தர் அமர்நாத். இவரைப்போன்று ஹூக் ஷாட்டை ஆடிய வேறொரு இந்திய வீரரை இன்றளவும் பார்க்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

amrnath hook.jpg 

இதோடு அல்லாமல் இதற்கு அடுத்தபடியாக பயங்கர வேகப்பந்து வீச்சாளர்களான ராபர்ட்ஸ், ஹோல்டிங், மால்கம் மார்ஷல், கார்னர் அடங்கிய மே.இ.தீவுகள் அணியை அவர்கள் கோட்டையில் சந்தித்த மொஹீந்தர் அமர்நாத் 5 டெஸ்ட் போட்டிகளில் 598 ரன்களை கடினமான சூழ்நிலைகளில் எடுத்ததும் பெரிய சாதனையே. கிளைவ் லாய்ட் கேப்டன்சியில் அதுவரை எந்த ஒரு அயல்நாட்டு பேட்ஸ்மெனும் மே.இ.தீவுகளில் ஒரு தொடரில் 600 ரன்கள் பக்கம் நெருங்கியதில்லை. களத்தில் பல வீரதீரக் காயங்களை உடலில் சாட்சியாகச் சுமந்திருப்பவர் மொஹீந்தர் அமர்நாத். 11 டெஸ்ட் போட்டிகளில் 1082 ரன்களை இந்த இரு தொடர்களில் அவர் எடுத்தார்.

 

mohinder.jpg 

இந்நிலையில் சுனில் கவாஸ்கர் கூறும்போது,

“கூச் பேஹார் ட்ராபி காலத்திலிருந்தே இருவரும் சேர்ந்து ஆடியுள்ளோம், நீண்ட தூரம் சென்றிருக்கிறோம்.  80களின் மத்தியில் மொஹிந்தர் அமர்நாத் தான் இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மென்.

இம்ரான் கான் 40 விக்கெட்டுகள் எடுத்த தொடரில் மொஹீந்தர் 584 ரன்களை எடுத்தார். இதனை தொடர்ந்து மே.இ.தீவுகளுக்கு எதிராக அதிவேக பந்து வீச்சாளர்களுக்கு எதிரான தொடரில் 598 ரன்கள் விளாசினார்.

ஜிம்மி அமர்நாத்தை விட வேறு ஒருவரும் வேகப்பந்து வீச்சை இவ்வளவு நன்றாக ஆடியதாக எனக்கு நினைவில் இல்லை. அவர்தான் எங்களுக்கு வேகப்பந்து வீச்சை எப்படி ஆட வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்த குரு.”

இவ்வாறு கூறினார் சுனில் கவாஸ்கர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close