[X] Close

எங்கே போட்டாலும் அடிக்கிறார், எப்படி பந்துவீசுவதென்றே தெரியலை: மிரண்டுபோன பாக். பயிற்சியாளர்


  • kamadenu
  • Posted: 12 May, 2019 13:40 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

எங்கே பந்துவீசனாலும் வெளுத்து வாங்குகிறார், எப்படி வீசுவதென்றே எங்கள் பந்துவீச்சாளர்களுக்குத் தெரியவில்லை என்று பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் மிரண்டுபோய் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைப் போட்டி தொடங்கும் முன், இங்கிலாந்து அணி சூப்பர் ஃபார்மில் இருக்கிறது. குறிப்பாக பட்லர், மோர்கன், பேர்ஸ்டோ, ரூட் ஆகியோர் நிச்சயம் எதிரணிகளுக்கு சவலாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமும் இல்லை. இதை நிரூபிக்கும் விதமாக நேற்றைய பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் பட்லர் அடித்த காட்டடியே சாட்சி.

3 விக்கெட் இழப்புக்கு 373ரன்கள் சேர்த்தது இங்கிலாந்து. 373 ரன்களை விரட்டிய பாகிஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

32 பந்துகளில் அரைசதத்தை எட்டிய பட்லர், அடுத்த 18 பந்துகளில் 50 ரன்கள் அடித்து 50 பந்துகளில் சதம் அடித்தார். 129 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பட்லர் அடித்த 8-வது சதம் இதுவாகும். ஒருநாள் போட்டியில் சராசரியாக 42 ரன்கள் வைத்துள்ள பட்லர் 3,497 ரன்கள் சேர்த்துள்ளார்.

eng.jpg 

அதுமட்டுமல்லாமல் ஒருநாள் போட்டிகளில் ஸ்ட்ரைக் ரேட்டையும் சிறப்பாக பட்லர் வைத்துள்ளார். 119.88 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள பட்லர், ரஸல்(130), மேக்ஸ்வெல் (121) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் எதிரணிகளை கதிகலங்கச் செய்யும் பேட்ஸ்மேன்களில் இன்னும் பலரின் கருத்துக்களில் முதலிடம் பெறுபவர் முன்னாள் மே.இ.தீவுகள் வீரர் விவியன் ரிச்சார்ட்ஸ். 187 போட்டிகளில் விளையாடிய ரிச்சார்ட்ஸ் 11 சதங்கள், உள்பட 6,721 ரன்கள் சேர்த்துள்ளார். இவரின் சராசரி 47 இருந்தபோதிலும், கடந்த 1979-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 138 ரன்களை ரிச்சார்ட்ஸ் விளாசியது இன்றும் வரலாற்றில் மறக்க முடியா நிகழ்வாக இருக்கிறது. பட்லரின் இந்த ஆட்டம் ரிசர்ட்ஸ் ஆட்டத்துக்கு இணையாக பார்க்கப்படுகிறது.

Mickey-Arthur-1024.jpg 

பட்லரின் பேரடி பேட்டிங் குறித்து பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் கூறுகையில், " உண்மையில் ஜோஸ் பட்லர் அடித்த ஷாட்களை மறக்க முடியாது. இப்படி அடித்தால் எங்கு பந்துவீசுவது, எங்கள் பந்துவீச்சாளர்கள் எந்த பக்கம் பந்துவீசுவது எனத் தெரியாமல் சிறிதுநேரம் குழம்பிவிட்டனர். என்னாலும் பதில் சொல்லமுடியவில்லை, எவ்வாறு பட்லரை ஆட்டமிழக்கச் செய்யப்போகிறோம் எனவும் தெரியவில்லை.ஆனால், ஆட்டமிழக்கச் செய்ய முயற்சித்தோம் பயனில்லை " எனத் தெரிவித்தார்.

இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் கூறுகையில், " நிச்சயமாக பட்லர் அடிக்கும் ஷாட்களுக்கு ஈடாக என்னால் அடிக்க முடியாது. எங்களின் அணியின் ஸ்கோரை உயர்த்தும் டாப் கியர் பட்லர்தான். பட்லரின் ஆட்டத்தை ரசித்துப் பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும். இரு அணிகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை பட்லர் வெளிப்படுத்திவிட்டார் " எனத் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close