[X] Close

தீபக் ஹூடா ‘நியாயமற்ற ரன் அவுட்’?- அப்பீலை வாபஸ் வாங்க ரிஷப் பந்த் கடுமையாக மறுப்பு


  • kamadenu
  • Posted: 09 May, 2019 17:27 pm
  • அ+ அ-

-நட்சத்திரேயன்

ஐபிஎல் கிரிக்கெட் இளைஞர்களின் பெருந்தன்மை, ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட் ஆகியவற்றை காலி செய்து அவர்களை கிரிக்கெட் விளையாடும் எந்திரமாகவும் பணம் சம்பாதிக்கும் உபகரணமாகவும் மாற்றி வருகிறது என்பதற்கு நடப்பு ஐபிஎல் கிரிக்கெட்டில் மற்றுமொரு உதாரணமே நேற்றைய ஆட்டத்தில் நிகழ்ந்த இன்னொரு சம்பவம்.

 

மைதானத்தில் கேப்டனே புகுந்து நடுவரை மிரட்டுவது, நியாயமற்ற முறையில் மன்கட் அவுட் செய்வது, அல்லது தொடர்ந்து செய்யப் பார்ப்பது.. நோ-பால் போன்ற மனிதனின் இயல்பானத் தவறுகளுக்காக நடுவரை வசைபாடி பேட்டி கொடுப்பது, அவரை திட்டித் தீர்த்து அவரைக் கோபப்படுத்தி அவர் போய் நடுவர் அறைக்கதவை உடைத்து அபராதம் கட்டுவது போன்ற நிகழ்வுகள் கிரிகெட் ஆட்டத்தை தவறான பாதைகளுக்கு இட்டுச் செல்கின்றன.

 

உலகம் முழுதும் படு மோசமான அயோக்கியத் தனமான ‘ஆஸ்திரேலிய பாணி’ ஆட்டம் என்ற ஒரு ரவுடித்தனமான போக்கு ஏதோ, ‘கிரிக்கெட் ஆட்டத்தைக் கடினமாக ஆடுவது’ ‘ஆட்டத்தின் மீதான பற்றுதலுடன் ஆடுவது’ ‘நத்திங் ராங்’ என்றெல்லாம் உயர்த்திப் பிடிக்கப்படுவதோடு, புனிதமாக்கப் படுகிறது. இதைச்செய்பவர்கள்தான் தேசபக்தி மிக்கவர்கள், நாட்டுக்காக செய்கிறார்கள், அணிக்காகச் செய்கிறார்கள் என்று பெரிய ஆளுமையாக்கும் வேலைகளை ஐபிஎல் கிரிக்கெட்டும் பணக்கொழிப்பு ஊடகங்களும் ஊட்டி வளர்த்து வருகின்றன.

 

இதே மனநிலையை வளர்த்து விட்டுத்தான் ஆஸ்திரேலிய அணி இன்று மிகப்பெரிய மோசடியில் சிக்கி பால்டேம்பரிங் என்ற அவமானத்தில் போய் மாட்டி தங்கள் வீரர்களை பலர் முன்னிலையில் அழவைத்து கடைசியில் தடையில் போய் முடிந்து அதன் பிறகு அணியில் பிளவு ஏற்பட்டு, தோல்விகள் ஏற்பட்டு தற்போது மீண்டு எழுந்து வருகின்றன.

 

எனவே ஐபிஎல் கிரிக்கெட்டில் இத்தகைய நிகழ்வுகள், இத்தகைய மனநிலையை வீரர்களிடத்தில் வளர்ந்தால் நிச்சயம் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணி சந்தித்த பேரவமானத்தை விரைவில் சந்திக்கும்.

 

கேப்டன் விராட் கோலிக்கெல்லாம் இவ்வளவு வானளாவிய அதிகாரத்தைக் கொட்டிக் கொடுத்து களத்தில் அவரது கோணங்கித் தனங்கள், அருவருக்கத்தக்க சேட்டைகளையெல்லாம் ஏதோ ‘ஆக்ரோஷம்’, அவர் ‘பாடி லாங்குவேஜ் உறுதி’ என்றெல்லாம் ஊதிப்பெருக்கி அழகுபார்ப்பது பேராபத்துதான். ஸ்மித் வார்னரை இப்படி வளர்த்து ஆஸி. ‘அழகு’ பார்த்ததுதான் இன்று அந்த அணி உலக அளவில் பேரவமானத்தைச் சந்தித்துள்ளது. ஏற்கெனவே கோலி தனது எல்லையற்ற அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அனில் கும்ப்ளே போன்ற ஒரு உச்சபட்ச ஜெண்டில்மேனையே பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து அகற்றியுள்ளார், என்பது சாதாரண நிகழ்வல்ல. நிற்க.

 

நேற்றைய ஐபிஎல் பிளே ஆஃப் சுற்று ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் இன்னிங்ஸின் கடைசி பந்துக்கு முதல் பந்து, அதாவது 19.5வது ஓவர். கீமோ பால் பந்தில் மொகமது நபி அவுட் ஆக, 5வது பந்தில் தீபக் ஹூடா இறங்குகிறார், பந்து வைடு, எதிர்முனை ரஷீத் கான், ஹூடாவை அழைக்கிறார், ஹூடா  ஒரு சிங்கிள் ஓட கிரீசை விட்டு புறப்படுகிறார்.

 

பந்து ரிஷப் பந்த்திடம் வருகிறது அவர் எடுத்து ரன்னர் முனைக்கு அடிக்கிறார். பந்து நேரடியாக ஸ்டம்பில் அடிக்கிறது. ஆனால் இடையில் ஓடி வந்த ஹூடா பவுலருடன் மோதி நிலைகுலைகிறார், ரீச் செய்ய முடியாது. முடியவில்லை... ரன் அவுட்.

 

டெல்லி கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் இதனைப் பார்த்து சில விநாடிகள் ஹூடாவை மீண்டும் பேட் செய்ய அழைக்கலாமா என்று பரிசீலித்தார்.  ஆனால் ரிஷப் பந்த் அவரசம் அவசரமாக அய்யரிடம் வந்து வேண்டாம், முறையீடு இருக்கட்டும் என்று வாதிட்டார். அய்யர் திருப்தியடைய ஹூடா பெவிலியன் நோக்கி நடையைக் கட்ட வேண்டியதாயிற்று.  ஹூடா முறைப்படி அவுட் தான், பவுலர் அவர் பாதையை வேண்டுமென்றே மறைக்கவில்லை, பந்தை பிடிக்கத்தான் பவுலர் முயற்சி செய்கிறார், எல்லாம் சரி. இருந்தாலும் இன்னும் ஒரு பந்துதான் இருக்கும் சூழ்நிலையில் ஹூடா என்ன பெரிய சேதத்தை ஏற்படுத்தி விட முடியும், அய்யர் ரீ-கால் செய்யலாம் என்றால் கூட இளம் வீரர் ரிஷப் பந்த் வேண்டாம் என்று தீவிரமாக வாதிட்டதைப் பார்க்க முடிந்தது.

 

ஏன் இப்படி? கிரிக்கெட் ஆட்டம் அதன் ஆக்ரோஷம், போட்டி மனப்பான்மை போன்ற திறமை மோதல்களுடன் கூடியது என்ற போதிலும் பெருந்தன்மை, ஆட்ட உணர்வு, போட்டி உணர்வைத் தாண்டிய ஓர் நல்லுணர்வு ஆகியவற்றையும் வளர்த்தெடுப்பதுதான். ஆம் கிரிக்கெட் என்பது ஒரு விதத்தில் ‘Self-Fashioning' தான். சுய உருவாக்கம்தான். ஆனால் வெறும் போட்டியாக அது குறுக்கப்படும் போது அதன் மீதுள்ள மரியாதை, ஆட்டத்தின் கலைத்திறன், கவிதாம்சம் போன்ற அழகியல் அம்சங்கள் அடித்து நொறுக்கப்படும்.

 

வீரர்களுக்கு நல்ல கவுன்சலிங்கை பிசிசிஐ செய்வது அவசியம் என்று இந்தச் சம்பவம் மட்டுமல்ல நடப்பு ஐபிஎல் கிரிக்கெட்டில் ஏகப்பட்ட இத்தகைய நிகழ்வுகள் இந்திய கிரிக்கெட்டுக்கு உகந்ததல்ல என்பதையே பறைசாற்றுகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close