[X] Close

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை உளவியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்திய மும்பை இந்தியன்ஸ்: 5-வது முறையாக ஐபிஎல் இறுதியில் நுழைவு


5

  • kamadenu
  • Posted: 08 May, 2019 07:09 am
  • அ+ அ-

-இரா.முத்துக்குமார்

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் முதல் பிளே ஆஃப் சுற்றுப் போட்டியில் மீண்டுமொரு முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய மும்பை  இந்தியன்ஸ் நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. சென்னைக்கு இறுதியில் நுழைய இன்னொரு வாய்ப்பு உள்ளது.

 

பந்துகள் திரும்பும் இன்னொரு ‘குழி பிட்சில்’, குழி பிட்ச் தாதா கணிப்பாளரான தோனி டாஸ் வென்று முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியை பேட் செய்ய அழைக்காமல் தானே பேட் செய்ய முடிவெடுத்தது ஏன்? அதுவும் தங்கள் அணியின் சொதப்பலான வயதான பேட்டிங் அணியை வைத்துக் கொண்டு ஏன் முதலில் பேட் செய்ய வேண்டும்? என்ற கேள்விகள் எழுகின்றன. முதலில் பேட் செய்து அறுவையான ஒரு பேட்டிங் ஆட்டத்தில் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது.

 

தொடர்ந்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியும் கொஞ்சம் திக்குமுக்காடி, ஆனால் சென்னையை விட ஓரளவுக்கு நன்றாக பேட் செய்து 18.3 ஓவர்களில் 132/4 என்று வெற்றி பெற்று 6வது முறையாக ஐபிஎல் இறுதிக்கு முன்னேறியுள்ளது.

 

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியை 3 முறை வீழ்த்தியுள்ளது. சேப்பாக்கத்தில் 6வது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கேவை வீழ்த்தியுள்ளது. ஒருவிதத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் உளவியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.  மீண்டுமொரு குழிபிட்சில் சிஎஸ்கே போலவே மும்பை இந்தியன்ஸ் அணியும் லெக் ஸ்பின், ஆஃப் ஸ்பின், இடது கை ஸ்பின் என்று களம் கண்டது.

 

இரு இன்னிங்ஸ்களிலும் சூரியகுமார் யாதவ் ஆடியது போல் வேறு ஒருவரும் ஆட முடியவில்லை.

 

 ‘சூப்பர் கிங்ஸ்’ பவர் ப்ளேயில்  ‘டூப்பர்’ கிங்ஸ்

 

இந்த சீசன் முழுதும் பவர் ப்ளேயில் மோசமாக ஆடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்றும் அதே நிலையை தொடர்ந்தது. மற்ற அணிகளை விட பவர் ப்ளேயில் சிஎஸ்கே படுமோசமாக ஆடிவருகிறது.

 

பவர் ப்ளேயிலேயே ஜெயந்த் யாதவ், ராகுல் சாஹர், குருணால் ஆகியோரைப் பயன்படுத்திய ரோஹித் சர்மா, இதன் மூலம் டுபிளேசிஸ் (6), ஷேன் வாட்சன் (10), சுரேஷ் ரெய்னா (5) ஆகியோர் விக்கெட்டைக் கைப்பற்ற சிஎஸ்கே 32/3 என்று சரிவு கண்டது. அனைத்தும் பொறுப்பற்ற ஷாட்கள்.

 

rahul chahar.jpg 

 

முரளி விஜய், அம்பதி ராயுடு சேர்ந்தனர், கடினமான பிட்ச்தான் ஆனால் முரளி விஜய், ராயுடு ஜோடி எதுவும் முயற்சி செய்யாமல் மந்தமாக ஆடி 36 பந்துகளில் 33 ரன்களையே சேர்த்தனர். 3 பவுண்டரிகள் அடித்து 26 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த முரளி விஜய், ஒரு பத்ரிநாத் ரக இன்னிங்ஸில் சாஹர் பந்தில் பிளைட், பந்தின் போக்கு எதையும் கணிக்காமல் குருட்டுத் தனமாக் இறங்கி வந்து பந்தைக் கோட்டை விட தோனி ஸ்டம்பிங்கை முடித்தார்.  விஜய் அவுட் ஆகும் போது ஸ்கோர் 12.1 ஒவர்களில் 65/4.

 

தோனியினால் ஓரளவுக்கு உயர்ந்த ரன் விகிதம்:

 

தோனியும் ராயுடுவும் இணைந்தனர். இருவரும் ஜெயந்த் யாதவ் ஓவரில் ஆளுக்கு ஒரு சிக்ஸ் அடித்தனர்.  ஹர்திக் பாண்டியா ஓவரில் 8 ரன்கள் வந்தது. ஆனால் ஸ்பின்னர்களிடத்தில் ரிஸ்க் எடுக்காமல் ஏனோதானோ என்று தோனியும், ராயுடுவும் ஆட குருணால் பாண்டியா, சாஹர் வீசிய கடைசி ஒவர்களில் வெறும் 8 ரன்கள்தான் வந்தது. 17வது ஓவர் முடிவில் ஸ்கோர் 99/4 என்று ஆமை வேகம் காட்டியது.

 

வழக்கம் போல் தோனிதான் கடைசி 3 ஒவர்களில் 32 ரன்கள் வரக் காரணமாக இருந்தார். லஷித் மலிங்கா ஓவரில் காலை விலக்கி கொண்டு இரண்டு மடத்தனமான லெந்த் பந்துகள் கிடைக்க லாங் ஆனில் சிக்ஸருக்குத் தூக்கினார் தோனி.  ஆனால் பும்ராவை அடிக்க வேண்டுமெனில் தோனி இன்னொரு பிறவிதான் எடுக்க வேண்டும். 

 

rayudu-dhoni.jpg 

 

கடைசி ஓவரின் முதல் பந்தில் தோனி பும்ராவிடம் ஆட்டமிழந்தார், ஆனால் அது நோ-பால் என்று தெரியவந்தது, ஆனாலும் தோனியினால் ஃப்ரீ ஹிட்டை பெரிதாக அடிக்க முடியவில்லை. தோனி 29 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 32 ரன்களையும் ராயுடு 37 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 42 ரன்களையும் எடுத்து நாட் அவுட்டாகட் திகழ ஸ்கோர் 131/4 என்று முடிந்தது. வெறும் 4 விக்கெட்டுகளையே இழந்ததற்கு சிஎஸ்கே இன்னும் 15-20 ரன்களையாவது கூடுதலாக அடித்திருக்க வேண்டும்.

 

மும்பை தரப்பில் சாஹர் 4 ஒவர் 14 ரன் 2 விக்கெட். குருணால் பாண்டியா 4 ஒவர் 21 ரன் 1 விக்கெட். ஜெயந்த் யாதவ் 3 ஓவர் 25 ரன் ஒரு விக்கெட்.

 

2 தொடக்க விக்கெட்டுகளுக்குப் பிறகு சூரியகுமார் யாதவ் அபார பேட்டிங்:

 

132 ரன்கள் என்பது எந்தப் பிட்ச் ஆனாலும், எவ்வளவு விக்கெட்டுகளைப் பறிகொடுத்தாலும் வெற்றி பெறக்கூடிய ரன் எண்ணிக்கைதான். ஆனால் ரோஹித் சர்மாவை தீபக் சாஹர் தன் அவுட்ஸ்விங்கரில் எல்.பி.முறையில் வீழ்த்த ஹர்பஜன் சிங் பந்தை லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்து குவிண்டன் டி காக் வெளியேறினார்.

 

suryakumar.jpg 

 

ஆனால் சூரிய குமார் யாதவ், இஷான் கிஷன் சேர்ந்து 10 ஓவர்களில் 80 ரன்களைச் சேர்த்தனர், காரணம் மும்பை இந்தியன்ஸ் ஸ்பின்னர்கள் போல் அடிப்பதற்கு கடினமான லெந்த்களை சென்னை ஸ்பின்னர்கள் வீசவில்லை, ஃபுல் லெந்த், ஷார்ட் பிட்ச் என்று வீசினர். இஷான் கிஷன் முதலில் ஹர்பஜன் சிங் பந்தை அது திரும்பும் திசைக்கு எதிர்த்திசையில் ஸ்லாக் ஸ்வீப் செய்து ஒரு கில்கிறிஸ்ட் பாணி மிட்விக்கெட் சிக்ஸரைத் தூக்கினார். இம்ரான் தாஹிரை சூரிய குமார் யாதவ் 2 பவுண்டரிகள் விளாசினார். சூரியகுமார் மிக அபாரமாக தோனியின் களவியூகத்தையே கேலிக்குள்ளாக்குமாறு இடைவெளியில் பந்தைச் செலுத்தி ஆடினார்.

 

ஒரு கட்டத்தில் ஹர்பஜன் சிங்குக்கு பந்துகள் திரும்பியதையடுத்து தோனி 2 ஸ்லிப்களை நிறுத்திப் பார்த்தார், ஆனால் பந்து கையில் சிக்காமல் சென்றது சூரியகுமாருக்கு முரளி விஜய்  மிட் ஆனில் கேட்சை விட்டார், இஷான் கிஷன் ஒரு பந்தை எட்ஜ் செய்ய ஸ்லிப் திசையில் வைடாக சென்றது. இதனைப் பயன்படுத்திய சூரியகுமார் யாதவ் மிக அருமையாக ஸ்பின்னர்களை ஆடினார், அதுவும் 2 தேர்ட்மேன் ‘டச்’பவுண்டரிகள் அபாரம். இந்தப் பிட்சில் இப்படித்தான் ஆட வேண்டும். 37 பந்துகளில் அரைசதம் கண்டார் சூரிய குமார்.

 

இஷான் கிஷன் 31 பந்துகளில் 28 ரன்கள் எடுத்த நிலையில் இம்ரான் தாஹிர் பந்தில் பவுல்டு ஆக, அடுத்த பந்தே குருணால் பாண்டியா, இம்ரான் தாஹிரிடமே கேட்ச் ஆகி வெளியேறினார். சூரிய குமார் யாதவ்வும் அவுட் ஆகியிருப்பார், ஆனால் ஸ்லிப்பில் ஷேன் வாட்சன் முயன்றும் பந்து கையில் சிக்கவில்லை. ஹர்திக் பாண்டியா 11 பந்துகளில் 13 ரன்களை எடுக்க சூரிய குமார் யாதவ் 54 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ மும்பை இந்தியன்ஸ் 18.3 ஓவர்களில் 132/4 என்று வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 3 ஸ்பின்னர்கள் சேர்ந்து 12 ஓவர்களில் 76 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைபப்ற்றினர்.  ஆட்ட நாயகனாக சூரிய குமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.

 

ஆனால் ஒரு விதத்தில் இந்தப் போட்டி ஆடப்பட்ட விதத்தைப் பார்க்கும் போது ‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது, எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்’ என்று மனதில் தோன்றியதைத் தவிர்க்க முடியவில்லை.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close