[X] Close

பால் டாம்பரிங் சர்ச்சைக்குப் பிறகு ஏற்பட்ட கருச்சிதைவு: டேவிட் வார்னர் மனைவி உருக்கம்


ball-tampering-candice-warner-miscarried

சிட்னியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் டேவிட் வார்னர், கேண்டிஸ் வார்னர் | கோப்புப் படம்

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 24 May, 2018 12:29 pm
  • அ+ அ-

டேவிட் வார்னர் மனைவி கேண்டிஸ் வார்னர், பால் சேத சர்ச்சை தொடர்பான தனது கணவரின் பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பிறகு தனக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாகக் கூறியுள்ளார். 

கடந்த மார்ச் மாதம், கேப்டவுனில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், கேமரூன் பேன்க்ராஃப்ட் ஆகியோர் பால சேத சர்ச்சையில் சிக்கினர். தொடர்ந்து மூவர் மீதும் விசாரணை நடத்தப்பட்டு விளையாட தடைகளும் விதிக்கப்பட்டன.

ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பிய மூவரும் பத்திரிகையாளர்களை சந்தித்தும் தங்கள் செயலுக்கு மன்னிப்புக் கோரினர். டேவிட் வார்னர் கண்ணீர் விட்டு அழுத பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பிறகு மன அழுத்தம் காரணமாகவும், தென்னாப்பிரிக்காவிலிருந்து ஓய்வின்றி பயணம் செய்த காரணமாகவும் தனக்கு கருச்சிதைவு ஏற்ப்பட்டது என டேவிட் வார்னர் மனைவி கேண்டிஸ் தற்போது கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய பெண்கள் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் கேண்டிஸ் கூறியதாவது:

"முதல் டெஸ்ட் போட்டியின் போது தென்னாப்பிரிக்க வீரர் டி காக் என்னைத் தகாத வார்த்தைகளால் ஏசினார். அதுதான் எல்லா பிரச்சினைகளுக்கும் தொடக்கமானது. கேப்டவுனில் இருக்கும்போது தான் நான் கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரியவந்தது. 

பால் சேத சர்ச்சையின் போது எனது இரண்டு குழந்தைகளுடன் நான் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நடப்பதைப் பார்த்து மனமுடைந்து போனேன். இதற்கும் மேல் என்னால் வலி தாங்க முடியுமா என்று யோசித்தேன்.

தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித், பேன்க்ராஃப்ட் ஆகியோருடன் நாங்களும் ஆஸ்திரேலியா திரும்ப நேரிட்டது. ஆனால் அவர்கள் இருவரும் வேறு விமானத்திலும், நாங்கள் வேறு விமானத்திலும் பயணப்பட்டோம். எங்களுக்குக் கிடைத்த விமானம் தான் இருப்பதிலேயே நீண்ட பயண நேரம் கொண்டது. கடினமான பயணமும் கூட. நான் கர்ப்பமாக இருந்தது யாருக்கும் தெரியாது. மேற்கொண்டு நான் சிரமப்பட்டால் அது கருவை பாதிக்கும் என்பதால் எனது பாதுகாப்புக்காக டேவ் தன்னால் முடிந்ததை எல்லாம் செய்தார்.  

சிட்னியில் வந்து இறங்கியதும் நாங்கள் எந்தத் தொந்தரவுமின்றி அமைதியாக வீட்டுக்குத் திரும்பலாம் என்று சொல்லப்பட்ட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை. 23 மணி நேர பயணம், நான் கருவுற்றிருப்பது யாருக்கும் தெரியாது, இந்த நிலையில் சிட்னி விமான நிலையத்தில் ஊடகங்களைப் பார்த்ததும் நான் மேலும் வருத்தமடைந்தேன். 

வீட்டுக்குச் சென்றோம். நான் டேவை பாத்ரூமுக்கு அழைத்து எனக்கு ரத்தப்போக்கு இருப்பதாகச் சொன்னேன். எனக்கு கருச்சிதைவு ஏற்படுகிறது என்பது எனக்குத் தெரிந்திருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு அழுதோம். 
டெஸ்ட் தொடரின் மோசமான அனுபவங்களுக்குப் பிறகு இந்த கருச்சிதைவு இன்னும் எங்களை மனமுடையச் செய்தது".

- பிடிஐ

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close