[X] Close

சிஎஸ்கேவை முந்தமுடியாமல் 2-ம் இடம் பிடித்த டெல்லி: இசாந்த், மிஸ்ரா அபாரம்: மோசமான தோல்வியுடன் வெளியேறியது ராஜஸ்தான்


2

  • kamadenu
  • Posted: 04 May, 2019 21:49 pm
  • அ+ அ-

-போத்திராஜ்

இசாந்த் சர்மா, அமித் மிஸ்ரா ஆகியோரின் திணற வைக்கும் பந்துவீச்சு, ரிஷப் பந்தின அதிரடி அரைசதம் ஆகியவற்றால், டெல்லியில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் ராஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

இந்த வெற்றிமூலம் 14 போட்டிகளில் 9 ஆட்டங்களில் வெற்றி, 5 தோல்விகளுடன் 18 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தைப் பிடித்துள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி. கடந்த 2012-ம் ஆண்டுக்குப் பின் ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் டெல்லி அணி செல்கிறது.

இன்றைய போட்டியின் இலக்கான 116 ரன்களை 10 ஓவருக்குள் சேஸிங் செய்திருந்தால், ரன்ரேட் அடிப்படையில் முதலிடத்தைப் பிடித்திருக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணி. ஆனால், திடீர் விக்கெட் சரிவு, மந்தமான ஆடுகளம் ஆகியவற்றால், 2-ம் இடத்தையே பிடிக்க முடிந்தது. நாளை நடக்கும் ஆட்டத்தில் மும்பை அணியை கொல்கத்தா வீழ்த்தும் பட்சத்தில் டெல்லி அணி 2-வது இடத்தை தக்க வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், ராஜஸ்தான் அணி 14 ஆட்டங்களில் 5 வெற்றி, 8 தோல்வி என 11 புள்ளிகளுடன் 6-வது இடத்தைப் பிடித்தது. இன்றைய ஆட்டம் முக்கியமானது எனத் தெரிந்திருந்தும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் சிறிது கூட பொறுப்பில்லாமல் விளையாடியது தோல்விக்கு முக்கியக்காரணம்.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 9 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் சேர்த்தது. 116 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 16.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

இசாந்த் கலக்கல்

டெல்லி அணியைப் பொறுத்தவரை அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா இரு போட்டிகள் ஓய்வுக்குப்பின் மீண்டும் அழைக்கப்பட்டார். சிஎஸ்கே அணியிடம் 80 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோற்றதை உணர்ந்தும், ரபாடா இல்லாத நிலையில் இசாந்த் சர்மா இல்லாத வெற்றிடத்தை நினைத்து டெல்லி அணி இந்த போட்டிக்கு அவரை மீண்டும் அழைத்துக்கொண்டது.

அதைசரி என நிரூபித்த இசாந்த் சர்மா, முதல் 5 ஓவர்களில் 3 முக்கிய விக்கெட்டுகளை கழற்றி ராஜஸ்தான் அணிக்கு அதிர்ச்சி அளித்தார். அதன்பின் இந்த அதிர்ச்சியில் இருந்து ராஜஸ்தான் அணி கடைசிவரை மீளவில்லை.

ஆட்டநாயகன் மிஸ்ரா

இதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா, 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் அணியின் சீர்குலைவுக்கு காரணமாகி ஆட்டநாயகன் விருது வென்றார்.

b58fbf10-39ae-4856-8915-e11e3195be4d.jpg 

பந்த் அரைசதம்

பேட்டிங்கில் பிரித்வி ஷா இந்த முறையும் ஏமாற்றினார். கடந்த 14 போட்டிகளில் சொல்லிக்கொள்ளும்படியாக 4 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார் பிரித்வி ஷா மற்ற ஆட்டங்களில் எல்லாம் பவர்ப்ளேயைக் கூட தாண்டியதில்லை. மிகவும் அவசரப்பட்டு ஆடி அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை குலைத்து வருகிறார் பிரித்வி ஷா.

விக்கெட்டுகள் ஒருபக்கம் வீழ்ந்தாலும் ரிஷப் பந்த் அதிரடியாக ஆடிய அணியின் வெற்றிக்கு காரணமாகினார். 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 38 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார் ரிஷப்பந்த்.

நட்சத்திர வீரர்கள் இல்லை

ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை இந்த ஆட்டம் முக்கியமானது எனத் தெரிந்திருந்தும் கேப்டன் ரஹானே முதல் கடைசி வீரர்கள் வரை பொறுப்பில்லாமல் பேட் செய்து ஆட்டமிழந்ததை என்னவென்று சொல்வது. முக்கியமான நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் பட்லர், ஸ்மித், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் இல்லாத நிலையில் ராஜஸ்தானின் பலவீனம் தெரிந்துவிட்டது.

8 வீரர்கள் ஒற்றை இலக்கம்

முதல் 30 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள், அடுத்த 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள், அடுத்த 50 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை ராஜஸ்தான் அணி இழந்தது. ராஜஸ்தான் அணியில் லிவிங்ஸ்டோன், கோபால், பராக் ஆகியோரைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்திலேயே ரன் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

பராக் சாதனை

இந்த ஆட்டத்தில் ஆறுதலான சம்பவம், 17-வது வீரர் ரியான் பராக் அரைசதம் அடித்ததாகும். ஐபிஎல் போட்டியில் குறைந்தவயதில் அரைசதம் அடித்த வீரர் எனும் பெருமையை பாரக் பெற்றுள்ளார். மற்ற வகையில் ராஜஸ்தான் அணியில் சொல்லிக்கும் கொள்ளும் விதமாக ஏதும் இல்லை.

தவண், ஷா ஏமாற்றம்

116 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தவண், பிரித்வி ஷா அதிரடியாகத் தொடங்கினார்கள். தாமஸ் வீசிய 3-வது ஓவரில் தவண் இரு பவுண்டரியும், பிரித்வி ஷா ஒருபவுண்டரியும் அடித்தனர்.

ஈஸ் சோதி வீசிய4-வது ஓவரில் தவண் 16 ரன்னிலும், பிரித்வி ஷா 8 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அதன்பின் ஸ்ரேயாஸ் அய்யர், பந்த் கூட்டணி சேர்ந்தனர்.

சோதி வீசிய 6-வது ஓவரில் அய்யர் இரு சிக்ஸர்களையும், பந்த் பவுண்டரியும் விளாசினர். பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 42ரன்கள் சேர்த்தது டெல்லி அணி. பராக் வீசிய 7வது ஓவரில் பந்த் 2 சிக்ஸர்களை அடித்தார். கோபால் வீசிய 8-வது ஓவரில் அய்யர் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். 10 ஓவர்களி்ல 3 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் சேர்த்திருந்தது டெல்லி அணி.

இங்ராம், பந்த் நிதானமாக பேட் செய்துவந்தனர். சோதி வீசிய 14-வது ஓவரில் இங்ராம் 12ரன்னில் வெளியேறினார். அடுத்து ரூதர்போர்ட் வந்தார். ஆரோன் வீசிய 15-வது ஓவரில் ரிஷப்பந்த் சிக்ஸர் , பவுண்டரி அடித்து ரன் வேகத்தை கூட்டினார்.

சிக்ஸருடன் முடித்த பந்த்

bcc75b7b-8581-46ca-80ef-4657b45bbcdb.jpg 

கோபால் வீசிய 16-வது ஓவரில் பந்த் சிக்ஸரும், ரூதர் போார்ட் சிக்ஸரும் அடித்தனர். அதே ஓவரில் ரூதர்போர்ட் 11ரன்னில் ஆட்டமிழந்தார். வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்டது. சோதி வீசிய 17-வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார் பந்த். பந்த் 53 ரன்னிலும், படேல் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

ராஜஸ்தான் அணித் தரப்பில் சோதி 3 விக்கெட்டுகளையும், கோபால் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close