[X] Close

தோனி வந்தார்; சிஎஸ்கே மீண்டும் முதலிடம் : 47 ரன்களுக்கு 8 விக்கெட்: டெல்லி மோசமான தோல்வி


47-8

  • kamadenu
  • Posted: 02 May, 2019 10:41 am
  • அ+ அ-

-போத்திராஜ்

தோனியின் பேட்டிங், ஸ்டெம்பிங், கேப்டன்ஷிப் திறமை, ரெய்னாவின் பேட்டிங், தாஹீர், ஜடேஜாவின் பந்துவீச்சு ஆகியவற்றால் சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 50-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இதன் மூலம் 13 ஆட்டங்களில் 9 ஆட்டங்களில் வெற்றியும், 4 தோல்வியும் அடைந்து, 18 புள்ளிகளுடன் சிஎஸ்கே முதலிடத்தில் உள்ளது. 13 போட்டிகளில் 8 வெற்றி, 5 தோல்விகள் என 16 புள்ளிகளுடன் டெல்லி 2-ம் இடத்தில் உள்ளது. இரு அணிகளும் ப்ளே-ஆஃப் சுற்றை உறுதிசெய்துள்ளன.

dhoni.jpg 

மும்பையால் முடியும்

இப்போதுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியால் மட்டுமே டெல்லி அணியின் 2-ம் இடத்தை பறிக்க முடியும். இன்னும் மும்பைக்கு 2 போட்டிகள் இருக்கும் நிலையில் அதில் வென்றால், மும்பை 2-வது இடத்துக்கு முன்னேறும். டெல்லி அணி மீதமுள்ள ஒருபோட்டியில் வென்றாலும் 18 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கும், ரன்ரேட் அடிப்படையில் இரு அணிகளின் தரம் நிர்ணயிக்கப்படும்.

முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. 180 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 16.2 ஓவர்களில் 99 ரன்களுக்கு அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்து 80 ரன்களில் தோல்வி அடைந்தது.

தோனியால் உற்சாகம்

கடந்த இரு போட்டிகளாக தோனி இல்லாத நிலையில், சிஎஸ்கே அணி தார்மீகரீதியான பலத்தை இழந்திருந்தது. ஆனால், நேற்று தோனி களத்தில் இறங்கியவுடன் வீரர்களுக்கு உற்காசம் தொற்றிக்கொண்டது, ரசிகர்களுக்கும் தோனியைக் கண்டவுடன் மகிழ்ச்சி அடைந்தனர்.

2019-ம் ஆண்டு பிறந்தத்தில் இருந்து தோனி தன்னைப் பற்றி தவறாகக் கணிப்பவர்களின் கருத்தை எல்லாம் பேட்டிங் மூலம் மாற்றி வருகிறார். ஆஸ்திரேலியத் தொடர், ஐபிஎல் தொடர் அதற்கு சிறந்த உதாரணம்.

பேட்டிங்கில் இழந்த ஃபார்மை மீட்டுள்ள தோனி, உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு மிகச்சிறந்த தூணாகவும், எதிரணிகளுக்கு சிம்ம சொப்னமாகவும் இருப்பார் என்பதில் துளியும் சந்தேகமில்லை. தோனி ஆட்டமிழக்காமல் இருக்கும்வரை எதிரணிக்கு நிச்சயம் "கிலி" யாகத்தான் இருக்கும்.

dhoni ste.jpg 

தோனி இந்தப்போட்டியில் மெதுவாக தனது ஆட்டத்தைத் தொடங்கினாலும், கடைசியில் தனது அதிரடியால் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். 22 பந்துகளைச் சந்தித்த தோனி 3 சிக்ஸர்ஸ 4 பவுண்டரிகளுடன் 44ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். போல்ட் வீசிய கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள், பவுண்டரிஎன மொத்தம் 21 ரன்கள் குவித்தார் தோனி. இரண்டு மின்னல்வேக ஸ்டெம்பிங்குகள், ஒரு கேட்ச் என ஜொலித்த தோனி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

டெத் ஓவர்களை திறமையாக ஆடி ரன் சேர்ப்பதில் தோனி வல்லவர் என்பதை நேற்று தோனி நிரூபித்தார். ஐபிஎல் போட்டிகளில் டெத் ஓவர்களில் மட்டும் தோனி இதுவரை 46 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் இருந்து வருகிறார். இதுவரை வேறு எந்த வீரரும் இந்த சாதனையைச் செய்யவில்லை.

திணறவைக்கும் பந்துவீச்சு

ரெய்னா 37 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். டி20 போட்டிகளில் 50-வது அரைசதத்தையும், ஐபிஎல் போட்டியில் 37-வது அரைசதத்தையும் அடித்து சாதனைச் செய்தார்.

பந்துவீச்சில் "பராசக்தி எக்ஸ்பிரஸ்" இம்ரான் தாஹிர், ரவிந்திர ஜடேஜா இருவரும் சேர்ந்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி டெல்லி அணியின் சீர்குலைவுக்கு காரணமாக அமைந்தனர்.

பொறுப்பற்ற பேட்டிங்

டெல்லி அணியைப் பொறுத்தவரை பிரித்வி ஷா, ரிஷப் பந்த் இன்னும் முதிர்ச்சியற்ற பேட்ஸ்மேன்களாகவே இருக்கிறார்கள். களத்தில் பொறுமையின்றி, வந்தோம், அடித்தோம், சென்றோம் என்ற ரீதியில் இருப்பது பேட்டிங் வரிசையை பலவீனப்படுத்தும்.

தொடக்க வரிசை பலமாக இருந்து குறைந்தபட்ச பவர்ப்ளே வரை விக்கெட்டை காப்பாற்றினால்தான் ஸ்கோர் செய்ய முடியும், அதை பிரித்வி ஷா தவறிவிடுகிறார்.

ரிஷப்பந்த் நேற்று தேவையில்லாமல் ஒரு ஷாட் அடித்து விக்கெட்டை பறிகொடுத்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் மட்டுமே நேற்று ஓரளவுக்கு நிலைத்து பேட் செய்தார். மற்ற வீரர்கள் எல்லாம் ஏதோ பெவிலியனில் வேலை இருப்பதுபோன்று ஆட்டமிழந்து வேகமாகச் சென்றனர். கடைசி 33 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை டெல்லி இழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஐபிஎல் சீசனில் ஒரு அணி சேர்த்த மிக குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் சேர்த்திருந்த டெல்லி அணி அடுத்த 40 ரன்களில் மீதமிருந்த 8 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது வேதனையாகும்.

dho.jpg 

180 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி களமிறங்கியது. பிரித்வி ஷா, தவண் ஆட்டத்தைத் தொடங்கினர். பிரித்வி ஷா ஒரு பவுண்டரி அடித்த நிலையில் சாஹரின் முதல் ஓவரிலையே ஆட்டமிழந்தார்.

அதன்பின் ஸ்ரேயாஸ் அய்யர், தவணுடன் சேர்ந்தார். இருவரும் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து ஸ்கோரை உயர்த்தியதால், நல்ல ரன்ரேட்டில் டெல்லி அணி சென்றது. ஹர்பஜன் சிங் வீசிய 6-வது ஓவரில் தவண் 19 ரன்களில் போல்டாகினார். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்தனர். இந்த கூட்டணிக்கு பின் வந்த எந்த பேட்ஸ்மேன்களும் நிலைக்கவில்லை. 8 பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். 10 ஓவர்களில் 80 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த டெல்லி அணி, அடுத்த 19 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்தது.

இம்ரான் தாஹிர் வீசிய 12-வது ஓவரில் படேல்(9), ரூதர்போர்ட்(2) இருவரும் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஜடேஜா வீசிய 12-வது ஓவரில் ஸ்ரேயாஸ் அய்யர் 44 ரன்னிலும், மோரிஸ் ரன் ஏதும் சேர்க்காமல் தோனியால் மின்னல் வேக ஸ்டெம்பிங்கிற்கு ஆளாகினர். கடைசி 33 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது டெல்லி அணி. 16.2 ஓவர்களில் 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது டெல்லி அணி.

சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் இம்ரான் தாஹிர் 12 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 9 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

வாட்ஸன் ஏமாற்றம்

முன்னதாக டாஸ்வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. வாட்ஸன், டூப்பிளசிஸ் களம்கண்டனர். 8 பந்துகளைச் சந்தித்தும் வாட்ஸன் ரன் சேர்க்காமல் டக்அவுட்டில் வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு ரெய்னா, டூப்பிளசிஸ் ஜோடி நிதானமாக பேட் செய்தனர். ப்வர்ப்ளே ஓவரில் சிஎஸ்கே அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 27 ரன்களும் 10 ஓவர்களில் 51 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.

raina.jpg 

அரைசதம் ரெய்னா, அதிரடி தோனி

2-வது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். டூப்பிளசிஸ் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தோனி, ரெய்னாவுடன் சேர்ந்தார். நிதானமாக பேட் செய்த ரெய்னா ஐபிஎல் போட்டியில் தனது 37-வது அரைசதத்தை நிறைவு செய்து 59 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகள் அடங்கும்.

அடுத்து வந்த ஜடேஜா, தோனியுடன் சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடினர். ஜடேஜா 2 சிக்ஸர், 2பவுண்டரிகள் அடித்து 10 பந்துகளில் 25ரன்கள் சேர்த்து  ஆட்டமிழந்தார். தோனி 44 ரன்களிலும், ராயுடு 5 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி 10 ஓவர்களில்தான் பெரும்பாலான ரன்கள் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதிலும் தோனி களத்துக்கு வந்தபின் கடைசி ஓவர்களில் மட்டும் 70 ரன்களுக்கு மேல் சேர்க்கப்பட்டது. 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது சிஎஸ்கே. டெல்லி அணித் தரப்பில் சுசித் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close