பாரிஸ் ஒலிம்பிக் செல்லும் வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடல்


பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய ஆடவர் ஹாக்கி அணி மற்றும் துப்பாக்கி சுடுதல் அணியினருடன் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி. படம்: பிடிஐ

புதுடெல்லி: பாரிஸ் ஒலிம்பிக் போட்டி வரும் 26-ம் தேதி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணியினர் மற்றும்21 பேரை உள்ளடக்கிய துப்பாக்கி சுடுதல்அணியினர் கலந்து கொண்டனர். இவர்களுடன் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பங்கேற்றனர். ஏனெனில் இவர்கள் 3 பேரும் ஒலிம்பிக் போட்டிக்காக வெளிநாடுகளில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுடன் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: ஒலிம்பிக்கின் பிரம்மாண்டத்தில் தொலைந்துவிடாதீர்கள். ஏனெனில் அது உங்களது கவனத்தை உடைக்கக்கூடும். நமது திறமை மீது நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும், அதில் கவனம் செலுத்த வேண்டும், அது முடிவுகளைத் தரும். நீங்கள் பதக்கங்களைப் பெறுகிறீர்களோ இல்லையோ, எந்த பிரச்சினையும் இல்லை, உங்களுடைய 100 சதவீத திறனை வெளிப்படுத்துங்கள். அதுதான் முக்கியம்.

விளையாட்டு உலகில் பயிற்சி மற்றும் நிலைத்தன்மை முக்கியம், ஆனால் அதே அளவிலான முக்கியத்துவம் தூக்கத்துக்கும் கொடுக்கப்பட வேண்டும். விளையாட்டு அல்லது வேறு எந்த துறைக்கும் நல்ல தூக்கம் என்பது மிகவும் முக்கியமானது. மன அழுத்தமும் இல்லாமல் தூங்குவது முக்கியம், தூக்கத்தில் சமரசம் செய்யாதீர்கள். நாங்கள் உங்களுக்கு சிறந்த வசதிகளை வழங்க முயற்சித்துள்ளோம். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் பாரிஸிலிருந்து திரும்பிய பிறகு செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் அழைக்க முயற்சிப்பேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளமான எக்ஸ் பதிவில், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக பாரிஸ் செல்லும் நமது குழுவினருடன் கலந்துரையாடினேன். நமது விளையாட்டு வீரர்கள், தங்களது சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி இந்தியாவை பெருமைப்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்களின் வாழ்க்கைப் பயணமும், வெற்றியும் 140 கோடி இந்தியர்களுக்கு நம்பிக்கை அளிக்கும்” என தெரிவித்துள்ளார்.

‘சுர்மாவை மறந்துடாதீங்க’ - கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அப்போது அவர், வீட்டில் தயாரிக்கப்பட்ட பலகாரமான சுர்மாவை (ஹரியாணாவில் பிரபலமான இனிப்பு பலகாரம்) கொண்டு வந்து தருவதாக பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்திருந்தார்.

நேற்றுமுன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இதை நினைவூட்டிய பிரதமர், நீரஜ் சோப்ராவிடம் தாங்கள் கூறிய வார்த்தையை காப்பாற்றவில்லை என தெரிவித்தார். இதற்கு நீரஜ் சோப்ரா கூறும்போது, “இந்த முறை உங்களுக்காக சுர்மா கொண்டு வருகிறேன். கடந்த முறை டெல்லியில், சர்க்கரையில் தயாரிக்கப்பட்ட சுர்மா வாங்கினேன். ஆனால், இம்முறை ஹரியாணாவில் இருந்து நெய் மற்றும் வெல்லம் ஆகியவற்றை கொண்டு செய்யப்பட்ட சுர்மாவை கொண்டு வருவேன்” என்றார்.

அதற்கு பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி, இல்லை நான் உங்கள் அம்மா வீட்டில் செய்த சுர்மாவை சாப்பிட விரும்புகிறேன் என்று பதிலளித்தார்