[X] Close

ஆசிய தடகள போட்டியில் இந்தியாவுக்கு 4-வது இடம்


4

  • kamadenu
  • Posted: 26 Apr, 2019 09:16 am
  • அ+ அ-

ஆசிய தடகள போட்டியில் 17 பதக்கங்களுடன் இந்தியா 4-வது இடத்தை பிடித்தது.

23-வது ஆசிய தடகள போட்டி கத்தார் நாட்டில் உள்ள தோஹா நகரில் நடைபெற்றது. இதன் கடைசி நாளான நேற்று முன்தினம் இந்தியாவுக்கு மேலும் 4 பதக்கங்கள் கிடைத்தது. மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் பி.யூ.சித்ரா பந்தய தூரத்தை 4 நிமிடங்கள் 14.56 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.

இந்தத் தொடரில் இந்தியா பெற்ற 3-வது தங்கப் பதக்கம் இதுவாக அமைந்தது. 800 மீட்டர் ஓட்டத்தில் கோமதியும், குண்டு எறிதலில் தஜிந்தர் பால் சிங்கும் ஏற்கெனவே தங்கம் வென்றிருந்தனர். கடந்த 2017-ம் ஆண்டு தொடரிலும் சித்ரா தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பஹ்ரைனை சேர்ந்த டைஜஸ்ட் காஷா (4:14.81) வெள்ளிப் பதக்கமும், வின்பிரட் யாவி (4:16.18) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

ஆடவருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் அஜெய் குமார் சரோஜ் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர், பந்தைய தூரத்தை 3 நிமிடங்கள் 43.18 விநாடிகளில் கடந்தார். பஹ்ரைனின் கிப்சிர் ரோட்டிக் (3:42.85) தங்கம் வென்றார்.

மகளிருக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பிராச்சி, பூவம்மா, சரிதாபென் கெய்க்வாட், விஷ்மயா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 3 நிமிடங்கள் 32.21 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது. பஹ்ரைன் அணி (3:32.10) தங்கப் பதக்கம் வென்றது.

மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் டூட்டி சந்த் பந்தய தூரத்தை 23.24 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் பெற்றார். பஹ்ரைனின் சல்வா நாசர் (22.74) தங்கப் பதக்கமும், கஜகஸ்தானின் ஓல்கா சாப்ஃரோநோவா (22.87) வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

4 நாட்கள் நடைபெற்ற இந்தத் தொடரில் இந்தியா 3 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்கள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது. கடந்த 2017-ம் ஆண்டு புவனேஷ்வரில் நடைபெற்ற தொடரில் இந்திய அணி 12 தங்கத்துடன் 29 பதக்கங்கள் குவித்து முதலிடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை பஹ்ரைன் 11 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலத்துடன் மொத்தம் 22 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. சீனா 10 தங்கம், 13 வெள்ளி, 7 வெண்கலத்துடன் 2-வது இடத்தையும் ஜப்பான் 5 தங்கம், 4 வெள்ளி, 9 வெண்லகத்துடன் 3-வது இடத்தையும் பிடித்தன.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close