[X] Close

‘ஆயிரக்கணக்கான சாதனைகள், லட்சக்கணக்கான நினைவுகள்’ -  ‘கிரிக்கெட் கடவுள்’ சச்சினுக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்


  • kamadenu
  • Posted: 24 Apr, 2019 16:17 pm
  • அ+ அ-

கிரிக்கெட் கடவுள் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் 46வது பிறந்த தினமான இன்று அவருக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

 

1973, ஏப்ரல் 24ம் தேதி சச்சின் டெண்டுல்கர் மும்பையில் பிறந்தார்.  கிரிக்கெட் பேட்டிங்கில் ஒரு முழுநிறைவடைந்த பேட்ஸ்மென் என்று சச்சின் டெண்டுல்கர் நிபுணர்களால் விதந்தோதப்பட்டவர். அருமையான பேலன்ஸ், கச்சிதமான முன் கால், பின் கால் உத்தி, வித்தியாசமான கிரிப், அதிரடி ஆக்ரோஷம், நிதான தடுப்பாட்டம், பவுலரின் கையைப் பார்த்தே கண நேரத்தில் என்ன வீசப்போகிறார் என்று துல்லியமாக கணிக்கும் ஜீனியஸ். இவருக்குப் பிறகு ஸ்விங் பிட்ச்களில் ஆஃப் ஸ்டம்பில் பிட்ச் ஆகி வெளியே ஸ்விங் ஆகும் பந்துகளை ஸ்லிப் பீல்டர்களை கேலி செய்யும் விதமாக மிட்விக்கெட்டில் அடிக்கும் அபார ஜீனியஸ் இன்னமும் பிறக்கவில்லை. சச்சினை ஒப்பிடுகையில் விராட் ஒரு ‘ஆர்த்தடாக்ஸ்’ வீரர்தான்.

 

சச்சின் டெண்டுல்கர் ஒரு பந்துக்கு 2-3 ஸ்ட்ரோக்குகளை வைத்திருப்பவர், ஒரே பந்தை ஆஃப் திசையில் பேக்ஃபுட் பஞ்ச் செய்வார், அதே பந்தை மிட்விக்கெட்டிலும் அடிப்பார், அதே போல் முன்னால் வந்து பந்தை ரன்னர் ஸ்டம்பை உரசும் விதமாக ஆடும் நேர் டிரைவ்களின் துல்லியம்... சச்சின் பேட்டிங் ஒரு கண்கொள்ளாக் காட்சி.  ஏகப்பட்ட நினைவுகள்...

உலகக்கோப்பை போட்டிகளின் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மென், 2003 உலகக்கோப்பையில் பாகிஸ்தானின் வக்கார், வாசிம், ஷோயப் அக்தர் ஆகியோரை வாங்கு வாங்கென்று வாங்கியதை மறக்க முடியுமா? இது போன்று ஏராளமான நினைவுகள்.. ஆண்ட்ரூ கேடிக், தில்ஹாரோ பெர்னாண்டோ ஆகியோர் வேகப்பந்துகளை மைதானத்துக்கு வெளியே அடித்தது, கார்ட்னி வால்ஷ் பவுன்சரை ஃபைன் லெக்கில் ரசிகர்களுக்கு இடையே சிக்ஸ் தூக்கி தன் சதத்தை நிறைவு செய்தது.. இன்னும் எத்தனை எத்தனையோ மறக்க முடியாத கணங்கள்... நினைவுகள் சச்சினுக்குரியது, சச்சின் ரசிகர்களுக்கு உரியது, இந்திய, உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு உரியது.

உலகின் சிறந்த ஸ்பின்னரான ஷேன் வார்னை எல்லா பிட்ச்களிலும் எல்லா விதத்திலும் ஆடிக்காட்டியவர். மேலேறி வந்து லெக் திசையில், நேராகத் தூக்குவது, இன்சைடு அவுட் ஷாட்டில் ஆஃப் திசையில் ஆடுவது, ஸ்வீப், ஸ்லாக் ஸ்வீப், விக்கெட் கீப்பர் பின்னால் ஸ்கூப், அதே இடத்தில் துடுப்பு ஷாட் என்று ஷேன் வார்னுக்கு அனைத்து ஷாட்களையும் ஆடிக்காட்டியவர் சச்சின் டெண்டுல்கர்.

எதிர்கொண்ட சிறந்த பவுலர்கள்... ஜாண்ட்டி ரோட்சை கதறவிட்டதும்..

இவர் காலத்தின் சிறந்த பவுலர்களைப் பட்டியலிட்டோமானால் இன்றைய ‘கிரேட்’கள் கிரேட்கள் அல்ல என்பது புரியவரும். வக்கார் யூனிஸ், வாசிம் அக்ரம், இம்ரான் கான், ஷோயப் அக்தர், கிளென் மெக்ரா, ஜேசன் கில்லஸ்பி, ஷேன் வார்ன், முரளிதரன், ஆண்ட்ரூ கேடிக், பிளிண்டாஃப், நியூஸிலாந்தின் நாஷ், தென் ஆப்பிரிக்காவின் மெரிக் பிரிங்கிள், மெக்மில்லன், ஆலன் டோனால்ட், கிரெய்க் மேத்யூஸ், ஷான் போலாக், டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்கெல், ஆம்புரோஸ், வால்ஷ், பிரெட் லீ, சக்லைன் முஷ்டாக், முஷ்டாக் அகமது... என்று சச்சின் பதம்பார்த்த பவுலிங் திறமைகளை கூறிக்கொண்டே போகலாம்.

 

sachin1.jpg 

தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணி பயணம் மேற்கொண்ட புதிதில் ஜாண்ட்டி ரோட்ஸ் பாயிண்டில் பெரிய பீல்டர், அப்போதுதான் 3ம் நடுவர் ரன் அவுட் கொடுக்கும் முறை அறிமுகமானது, ஒரு டெஸ்ட் போட்டியில் சச்சின், பந்தை பாயிண்டில் அடித்து விட்டு ஒரு ரன்னுக்காக அரை அடி கூட எடுத்து வைத்திருக்க மாட்டார், ரோட்ஸ் அங்கிருந்து நேராக ஸ்டம்பைப் பெயர்க்க சச்சின் அதிர்ந்தார், 3ம் நடுவர் தீர்ப்பில் முதல் ரன் அவுட் வீரர் சச்சின் ஆனார். ஆனால் இதற்கு அடுத்த டெஸ்ட் போட்டியில் ஜாண்ட்டி ரோட்ஸின் பீல்டிங் பலத்தை தனது சக்தி வாய்ந்த கட் ஷாட்களினால் கடுமையாகச் சோதித்தார், அவர் கைகளில் சிக்காமல் பந்துகள் பவுண்டரிக்குப் பறக்க, ஒருவிதமான ஈகோ சச்சினுக்கும் ரோட்ஸுக்கும் இடையே ஏற்பட, சச்சினின் சக்தி வாய்ந்த ஷாட்டை வீம்புக்குக் கையை வைத்து ரோட்ஸ் காயமடைந்து விடுவார் என்று பயந்த கேப்டன் ஹான்சி குரோனியே ரோட்ஸை பாயிண்டிலிருந்து நகர்த்தி ஸ்கொயர்லெக்கிற்கு மாற்றினார். தன்னை வீழ்த்தும் பவுலர்களை மட்டுமல்ல தனக்கு சவாலாகத் திகழும் பீல்டர்களையும் சச்சின் அதே அளவுக்கு சவாலுக்கு அழைத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டோனல்ட் ஒருமுறை சச்சின் பற்றி கூறும்போது, ‘ஒரு முறை வீழ்த்திய அதே பந்து வீச்சு முறையில் இன்னொரு தடவை சச்சினை வீழ்த்த முடியாது’ என்றார். வந்த புதிதில் ஷார்ஜாவில் ஒரு போட்டியில் அப்போதைய டெரர் பவுலர் வாசிம் அக்ரமை ஸ்வீப் ஷாட் போல் ஒரு சிக்ஸ் அடித்தது மறுநாள் தி இந்து ஆங்கிலம் நாளிதழ் ஸ்போர்ட்ஸ் பேஜை அலங்கரித்த மிக முக்கியமான அரிதான புகைப்படம்.

 

இந்தியாவில் முதல் போட்டியில் சென்னையில் ஆடுவதற்கு முன்பாக பாகிஸ்தான், நியூஸிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தொடர்களில் கலக்கி விட்டு வந்தார். டான் பிராட்மேன் தன் மனைவியிடம் சச்சின் பேட் செய்வதைக் காட்டி இவர் என்னைப்போல் ஆடுகிறார் என்று கூறியதையடுத்து ஆஸ்திரேலியாவில் சச்சின் புகழ் ஓங்கத் தொடங்கியது, சிலர் தங்கள் குழந்தைகளுக்கு டெண்டுல்கர், சச்சின் என்றெல்லாம் பெயர் வைக்கத் தொடங்கிவிட்டனர்.

 

16 வயதில் தன் முதல் டெஸ்ட் போட்டியை ஆடியக் கணம் முதல் இந்திய நாட்டின் ஒவ்வொரு வீட்டின் செல்லக் குழந்தையாகி விட்டார் சச்சின். அவருக்கு இன்று 46வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார். 1989ம் ஆண்டு ஸ்ரீகாந்த் கேப்டன்சியில் பால் மணம் மாறா குழந்தையாகக் களமிறங்கியது இப்போதுதான் கடந்து சென்றது போல் இருக்கிறது... இன்று 46 வயது என்கிறார்கள்... ஈடு இணையற்ற ஒப்பில்லா சச்சின் டெண்டுல்கருக்கு நாமும் வாழ்த்துக்களை பகிர்வோம்.

 

ட்விட்டரில் ஒரு நெட்டிசன் இவ்வாறு பதிவிட்டுள்ளார்:

 

1 Man

24 Yrs

664 Matches

782 Innings

74 Not outs

34357 Runs

48.52 Average

50816 Ball Faced

248* High Score

164 50s

28 90s

100 100s

25 150s

6 200s

76 M.O.M

20 M.O.S

4076 4s

264 6s

 

Thousands Of Records

Millions Of Memories

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close