[X] Close

தன்னம்பிக்கைக்கு கபில், ஆட்டத்தின் மீதான பற்றுதலுக்கு சச்சின், தோனிக்கும், கோலிக்கும் என்ன?- ஸ்ரீகாந்த் சுவாரஸ்ய பேட்டி


  • kamadenu
  • Posted: 22 Apr, 2019 15:16 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

கிரிக்கெட்டில் தன்னம்பிக்கைக்கு கபில்தேவ், கிரிக்கெட் மீதான பற்றுதலுக்கு  சச்சின் டெண்டுல்கர் என்று புகழ்ந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், கோலி, தோனி குறித்து சுவாரஸ்யமாக தெரிவித்துள்ளார்.

இந்திய அணி முதன் முதலில் கபில்தேவ் தலைமையில் 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றபோது அணியில் இடம் பெற்றவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். 2011-ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றபோது, அந்த அணியை தேர்வு செய்த தேர்வுக்குழுவின் தலைவராக இருந்தவர் ஸ்ரீகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

யுனிசெப் சார்பில் ஐசிசியுடன் இணைந்து நியூயார்க்கில் குழந்தைகளுக்காக ஒருநாள் எனும் நிகழ்ச்சியை நடத்தியது. அதில் இந்தியஅணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் இடையே ஸ்ரீகாந்த் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மிகச்சிறந்த கேப்டன் விராட் கோலி நமது அணிக்கு கிடைத்திருக்கிறார், இவரின் கேப்டன்ஷிப் அனைத்து அணிகளுக்கும் உதாரணமாக இருக்கிறது. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், அனைத்து விஷயங்களிலும் கூச்சப்படாமல் தாமாகவே முன்வந்து பொறுப்புக்களை ஏற்று விராட்கோலி செயல்படுகிறார். ஆதலால், "கூல்" தோனியுடன் இணைந்து, கிங் கோலி சிறப்பாக செய்படுவார் என்று நம்புகிறேன்.

உலகக் கோப்பைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அனைத்து தகுதிகளையும், திறன்மிக்க வீரர்களையும் கொண்டிருக்கிறது. கிரிக்கெட்டில் பற்றுதல், அமைதி, களத்தில், திறமை ஆகியவற்றை ஒருங்கே கொண்ட சிறப்பான வீரர்கள் இருக்கிறார்கள். எந்தவிதமான புறஅழுத்தங்களையும் மனதில் ஏற்றிக்கொள்ளாமல், தன்னம்பிக்கையுடன் இந்திய வீரர்கள் விளையாட வேண்டும்.

அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒவ்வொரு சிறப்புத் தகுதி இருக்கிறது. தன்னம்பிக்கை குறித்து கேட்டால் கபில்தேவைக் குறிப்பிடலாம், கிரிக்கெட்டில் பற்றுதல் என்றால் சச்சின் டெண்டுல்கர்தான், விராட் கோலியை ஆக்ரோஷம் மற்றும் உற்சாகத்திற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம், அமைதிக்கும் உறுதிக்கும் தோனியையும் குறிப்பிடலாம்.

கிரிக்கெட் என்பது மிகப்பெரிய ஒற்றுமைக்குரிய காரணி, இது பலபாடங்களை நமக்குக் கற்றுக்கொடுக்கும். உங்கள் ஆளுமை, வாழ்க்கைக்கு தேவையான திறமைகள், அழுத்தங்களை எவ்வாறு கையாள்வது, தலைமைப்பண்பு, தகவல்தொடர்பு, பேச்சுக்கலை, குழுவாக செயல்படு என அனைத்தையும் கற்றுக்கொள்ள முடியும்.

விளையாட்டு என்பது ஒருவிதமான கல்விதான். இப்போதுள்ள நிலையில், புத்தகப்புழுவாக மட்டும் யாரும் இருக்க முடியாது. குழந்தைகள் படிப்புடன் விளையாடவும் செய்தால்தான் ஆரோக்கியமாக இருக்க முடியும். வாழ்க்கையில் மனிதர்களாக வாழவிரும்பினால் பள்ளிப்படிப்பில் விளையாட்டு மிகமுக்கியமானதாக இருக்க வேண்டும். வாழ்வில் அனைத்தையும் கிரிக்கெட் கற்றுக்கொடுக்கும்

இவ்வாறு ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close