[X] Close

உத்தப்பாவின் ‘உத்தம’ பேட்டிங்.. கோலிக்கு வீசிய ‘நெட்’ பவுலிங்.. மோசமான பீல்டிங்.. தரமான கிரிக்கெட்டா ஐபிஎல்?


  • kamadenu
  • Posted: 20 Apr, 2019 16:34 pm
  • அ+ அ-

-நட்சத்திரேயன்

ஐபிஎல் கிரிக்கெட் ஒரு கார்ப்பரேட் கிரிக்கெட் என்பதற்கேற்ப நிறைய நாடகீயங்கள் நடக்கிறதே தவிர நல்ல தரமான கிரிக்கெட் ஆட்டத்தை லென்ஸ் வைத்துத்தான் தேட வேண்டியுள்ளது. சில வேளைகளில் ஆட்டம் விறுவிறுப்பாக உள்ளது. ஆனால் விறுவிறுப்பு வேறு தரமான கிரிக்கெட் வேறு.

 

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் நான்குகளுக்கும் ஆறுகளுக்கும் வருவதில்லை.. மட்டைக்கும் பந்துக்கும் சரிசம விகித போட்டி இருக்க வேண்டும், ஆட்டத்தின் போக்கிலேயே ஏற்படும் திருப்பங்கள் அதனால் ஏற்படும் விறுவிறுப்புகள், வேகங்கள் இதைத்தான் ரசிகர்கள் எந்த ஒரு வடிவத்திலும் எதிர்பார்க்கின்றனர். விராட் கோலி போன்ற ஒரு டாப் பேட்ஸ்மெனை எப்படிக் கட்டுப்படுத்துகிறார்கள் அதை அவர் எவ்வாறு முறியடிக்கிறார் என்பதே கிரிக்கெட் ஆர்வத்தைத் தூண்டும் தரநிலையாகும்.

 

ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டில் என்ன நடக்கிறது? ஏதோ மெகா சீரியல் போல் ஒரே நாடகம்.. ரியால்டி ஷோ-வில் எதற்கெடுத்தாலும் அழுவார்களே அது போல் அழுகைகள், நடுவர் நோ-பால் கொடுக்கவில்லை என்றால் உடனே கேப்டன் களத்தில் இறங்கி நடுவர்களை மிரட்டுவது, டெட் பாலுக்கு ஓவர் த்ரோ 4 ரன்களை அம்பயரிடம் அழுது வாங்குவது, மன்கட் அவுட் செய்வது, அணிகளுக்கு விட்டுக் கொடுப்பது என்று பலவிதமான பின்புலத்தில் ஐபிஎல் கிரிக்கெட் நடைபெறுகிறது. 2000, 4000 என்று டிக்கெட் விலை கொடுத்து வருபவர்கள் பாவம்! இந்த நாடகத்தையா பார்க்க வருகிறார்கள்? ஐபிஎல் கிரிக்கெட் நடத்தப்படும் விதத்தைப் பார்த்தால் ஏதோ தொலைக்காட்சி டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க நடத்தும் ‘சீப்’ நாடகக் காட்சி போல் அல்லவா தெரிகிறது.. நிற்க.

 

நேற்று கோலியின் ஆட்டத்தைப் பார்ப்போம். 2வது ஓவரில் சுனில் நரைன் பந்தின் திசையைத் தவறாகக் கணித்து கால்காப்பில் வாங்கி அம்பயர் உதவியுடன் தப்பினார்.  பந்து வெளியே செல்வதாக ரீப்ளேயில் தெரிந்தாலும் களநடுவர் அவுட் என்று கூறியிருந்தால் அது அவுட் என்றே தீர்ப்பளித்திருப்பார்கள். ஆகவே இங்கேயே தொடங்கி விட்டது. கோலி அடித்த முதல் பவுண்டரியே ஷுப்மன் கில் மிஸ்பீல்டில் வந்தது. பிறகு குர்னி பந்தில் பீட்டன் ஆனார் கோலி. 6வது ஓவரில் பிரசீத் கிருஷ்ணாவுக்கு லக் இல்லை,  பந்தை சரியாகக் கணிக்காமல் லெக் திசையில் பிளிக் ஆட முயன்றார் கோலி ஆனால் அது நல்ல பந்து எட்ஜ் ஆகி ஆஃப் திசையில் பவுண்டரி சென்றது.

 

பிறகு ரஸல் ஓவரில் ஒரு கட் ஷாட்டில் கோலி அடித்த ஷாட்டுக்கு ராணா அடித்த டைவ்  விரயமானது, அது பிடித்திருந்தால் அபாரமான கேட்ச் ஆகியிருக்கும், என்னவாயிற்று கோலிக்கு? ஒரே தடுமாற்றம், எட்ஜ்.  ரஸல் வீசிய ஷார்ட் பிட்ச் பந்த் ஒன்று ஃபைன் லெக்கில் இவரால் சரியாக அடிக்க முடியாமல் போக பிரசீத் கிருஷ்ணாவுக்கு அருகில் பந்து கேட்ச் போல் சென்று விழுந்தது. பிறகு குல்தீப் வந்த பிறகு கோலிக்கு ‘வலைப்பந்து வீச்சு’ ஆரம்பமானது, 2 பவுண்டரிகளை இந்த இன்னிங்சில் ஒரு உறுதியுடன் அடித்தார்.

11வது ஓவரின் கடைசி பந்தில் மொயின் அலிக்கு ஒரு மெலிதான எட்ஜ், ஒருவரும் கவனிக்கவில்லை. 40 பந்துகளில் 50 ரன்கள். பொதுவாக இந்த மாதிரி இன்னிங்ஸ்கள் ஒரு அணிக்கு நல்லது செய்யாது. ஆனால் விராட் கோலிக்கு அதன் பிறகு வீசப்பட்ட வலைப்பயிற்சிப் பந்து வீச்சுதான் அவருக்கும் சதத்தைப் பெற்றுக் கொடுத்தது, அணியையும் வெற்றி பெறச் செய்தது.  குர்னி வீசிய 17வது ஓவரில் 19 ரன்கள் வந்தது, அதில் லெக் ஸ்டம்பில் ஆக மெதுவான ஒரு பந்தை பவுண்டரி அடித்தார் கோலி. மீண்டும் லெந்த்தில் ஆகச் சுலபமான ஒரு பந்தை சிக்ஸ் தூக்கினார். நரேனை பின் காலில் சென்று லாங் ஆனில் அடித்த சிக்ஸ் தவிர எல்லாமே நெட் பவுலிங்கில் அடித்ததுதான்.

படுமோசமான பந்து வீச்சு, உலகக்கோப்பைக்கு முன் கோலி டச்சுக்கு வருவதற்காக ஐபிஎல் போட்டியையே வலைப்பயிற்சியாக மாற்றி விட்டனர்.  மொத்தத்தில் ஒரிஜினல் கோலி இன்னிங்ஸ் போல் இல்லை அது. ஏனெனில் நிறைய டைமிங் மிஸ் ஆன ஷாட்கள், சிலபல ஷாட்கள் பீல்டருக்கு முன்னேயும் சிலது பீல்டருக்கு கொஞ்சம் நெருக்கமாக பின்னாலும் விழுந்தது. மோசமான நெட் பவுலிங் மற்றும் தரமற்ற பீல்டிங்கினால் கோலி என்ற தரமான வீரரின் பேட்டிங்கும் தரமற்றதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.

 

ராபின் உத்தப்பாவின் ’உத்தம’  பேட்டிங்..

 

சுனில் நரைன் காட்டடி 18 ரன்கள் அடித்து வெளியேறுவதற்கு முன்பும் வெளியேறிய போதும் ஷுப்மன் கில் லொட்டு வைத்து 6 பந்துகளில் 2 ரன்களையே எடுத்திருந்தார். கடைசியில் 11 பந்துகளில் 9 ரன்களில் ஸ்டெய்ன் பந்தில் வெளியேறினார், ஆனால் இவரது ஆட்டம் தடுமாற்றமானதாக இருந்தது

 

uthappa.jpg 

 

ஆனால் உத்தப்பா ஆட்டம் தான் ஒரு வேளை உஷ் கண்டுக்காதீங்கவாக இருக்குமோ என்ற ஐயத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. ஏனெனில் அவர் 20 பந்துகளில் வெறும் 9 ரன்களையே எடுத்தார். அடிக்கப்போய் பந்து சிக்காமல் இருந்தால் அது ஒரு வகை, ஆனால் இவர் நன்றாகக் காலைப்போட்டு மிக அருமையான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார், சுனில் கவாஸ்கர் நிச்சயம் உத்தப்பாவின் தடுப்பாட்ட உத்தியைப் பார்த்து தன் கண்களில் எட்டிப்பார்க்கும் கண்ணீரை மோதிர விரலால் துடைத்து சுண்டி விட்டிருப்பார். ஓரிருமுறை பீட்டன் ஆனார். ஒரு கட்டத்தில் 11 பந்துகளில் வெறும் 3 ரன்களே. ஒருமுறை ரன் ஓடாமல் ராணாவை ரன் அவுட் ஆகச் செய்திருப்பார் உத்தப்பா. கடைசியில் பார்வையாளர்களுக்கு வலி கொடுத்த அந்த இன்னிங்ஸை ஸ்டாய்னிஸ் முடிவுக்குக் கொண்டு வர 20 பந்துகளில் 9ரன்கள் என்று உத்தப்பா ‘நன்றாக’ கேகேஆர் அணியை வைத்துச் செய்து விட்டார்.

உத்தப்பா இறங்கும் போது ஓவருக்கு 11 ரன்களுக்கும் மேல் தேவைப்பட்டது உத்தப்பா ஆட்டமிழக்கும் போது 16.22 என்று அதிகரித்தது.  இந்த இன்னிங்ஸுக்கு முன்னர் ராபின் உத்தப்பா ஸ்ட்ரைக் ரேட் 119.56 ஆக இருந்தது. அவர் பந்துகளை தடுத்து ஆடிய விதம், அந்த அணுகுமுறை டி20 ஆட்டத்துக்கு ஒவ்வாதது என்பதால் அவர் திடீரென ஏன் அப்படி ஆடினார் என்பது சந்தேகத்தைக் கிளப்புவதாக அமைந்தது.

 

அதே போல் ஆர்சிபி அணியின் கடைசி கட்ட பந்து வீச்சு படுமோசம்.  கடைசி 6 ஒவர்களில் கொல்கத்தா வெற்றிக்கு 113 ரன்கள் தேவை எந்த கிரிக்கெட்டிலாவது இதனை நெருங்க முடியுமா? ஆனால் கேகேஆர் ரஸலுக்கு வீசிய சில வலைப்பந்து வீச்சினால் 10 ரன்கள் இடைவேளியில் கொல்கத்தா தோற்றது. 25 பந்துகளி 9 சிக்சர்கள்... எந்த கிரிக்கெட்டில் இது நடக்கும்? லீக் கிரிக்கெட்டில் நடக்குமா? தெரு கிரிக்கெட்டில் கூட கொஞ்சம் கடினம்தான். ஒருகட்டத்தில் வெற்றி பெற்று விடும் நிலைக்கே வந்து விட்டது கொல்கத்தா. 6 ஓவர்களில் 113 ரன்கள் என்பது சாத்தியமா? ஆனால் 100 ரன்கள் வரை விளாசப்பட்டது.

 

ஆஸி.யில் நடைபெறும் பிக் பாஷ் லீக், பாகிஸ்தான் பிரிமியர் லீக், வங்கதேச டி20 லீக், கரீபியன் பிரிமியர் லீக், இங்கிலாந்து டி20 எங்கு எதிலும் இது சாத்தியமல்ல.. ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டில் 6 ஓவர் 113 ரன்கள் சாத்தியமாகும் சூழ்நிலை உள்ளது. இது தரமான கிரிக்கெட்டா? அல்லது நாடகமா? என்ற கேள்வியை இந்தத் தருணத்தில் எழுப்ப வேண்டியுள்ளது. அன்று கெய்ரன் பொலார்ட் கடைசி 10 ஒவர்களில் 133 ரன்களை அனாயசமாக வெல்கிறார்.. இது கிரிக்கெட்டுக்கும் நல்லதல்ல, இதில் விளையாடும் இளம் இந்திய, அயல்நாட்டு வீரர்களுக்கும் நல்லதல்ல. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் வயதானவர்களை வைத்து ஆடிக்கொண்டு ஆட்டத்தின் சுவாரஸ்யத்தை குழிபிட்ச் போட்டு பாழாக்குகின்றனர்.

 

ஐபிஎல் கிரிக்கெட்டில் தரநிர்ணயத்தை பிசிசிஐ உறுதி செய்வது நல்லது, இல்லையெனில் அதற்கு இருக்கும் வரவேற்பு நிச்சயம் படிப்படியாகக் குறைந்து விடும்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close