[X] Close

ஒரே ஓவரில் 27 ரன்: குல்தீப் யாதவை கண்ணீர்விட்டு அழ வைத்த மொயின் அலி


27

  • kamadenu
  • Posted: 20 Apr, 2019 11:05 am
  • அ+ அ-

கொல்கத்தாவில் நேற்று நடந்த ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ஓவர்களுக்கு 59 ரன்களை வாரி வழங்கியதால் மனமுடைந்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் உடைந்து அழுதார்.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டம் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு  213 ரன்கள் சேர்த்தது. 214 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் சேர்த்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் ஆர்சிபி அணி பேட்ஸ்மேன் மொயின் அலி 28 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். களத்துக்கு வந்தது முதலே மொயின் அலி அதிரடியாக பேட் செய்தார். அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்துகளையும் சிக்ஸருக்கும், பவுண்டரிகளுக்கும் விளாசினார்.

ஆனால், அதில் ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் பந்துவீச்சை மட்டும் நேற்று மொயின் அலி சற்று கூடுதலாக நொறுக்கி அள்ளினார். அதிலும் குல்தீப் வீசிய 14-வது ஓவரில் சிக்ஸரும், பவுண்டரியும், 16-வது ஓவரில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் விளாசி குல்தீப் நம்பிக்கையை குலைத்தார் மொயின் அலி. ஆனால், அந்த ஓவரின் கடைசிப்பந்தில் பிரசித் கிருஷ்ணாவிடம் கேட்ச் கொடுத்து மொயின் அலி ஆட்டமிழந்தார்.

ஒட்டுமொத்தமாக 4 ஓவர்கள் வீசிய 59 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒருவிக்கெட்டை வீழ்த்தினார் குல்தீப் யாதவ். ஐபிஎல் வரலாற்றில் சுழற்பந்துவீச்சாளரின் மிகமோசமான பந்துவீச்சாக அமைந்தது.

ali1.jpg 

தன்னுடைய பந்துவச்சு மிக மோசமாகிவிட்டதை உணர்ந்த குல்தீப் யாதவ், நடுவரிடம் இருந்த தனது தொப்பியை கோபத்துடன் பெற்றுக்கொண்டு பவுண்டரி லைனுக்கு திரும்பினார்.

நடந்து செல்லும்போதே கண்கள் கலங்கியவாறு, இறுகிய முகத்துடன் குல்தீப் சென்றார். ஒரு கட்டத்தில் பவுண்டரி லைனில் முழங்காலிட்டு குல்தீப் கண்ணீர்விடத் தொடங்கினர்.அப்போது அங்கிருந்த ரஸல், பிரசித் கிருஷ்ணா, கிறிஸ் லின் ஆகியோர் குல்தீப்பிடம் வந்து அவரை சமாதானப்படுத்தி தண்ணீர் வழங்கி அவரை சமாதானப்படுத்தினார்கள்.

முகத்தை தண்ணீரால் கழுவச் செய்து மீண்டும் அவரை பீல்டிங்குக்கு தயார் செய்தனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன், குல்தீப் யாதவ் முகம் சிவக்க கண்ணீர்விட்டது நெகிழ்ச்சியாகவும், அதேசமயம், ஐபிஎல் போட்டியை சுவாரஸ்யப்படுத்த செய்யப்பட்ட நாடகமாக எனத் தெரியவில்லை.

கடந்த இரு ஐபிஎல் சீசன்களிலும் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசியுள்ளார். கடந்த ஐபிஎல் சீசனில் 17 விக்கெட்டுகளையும், 2017-ம் ஆண்டு சீசனில் 12 விக்கெட்டுகளையும் குல்தீப் வீழ்த்தியுள்ளார். ஆனால், இந்த சீசனில் இதுவரை குல்தீப் 4 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார். உலகக் கோப்பைப் போட்டி நெருங்கும் வேளையில் விக்கெட் வீழ்த்தும் திறமையின்மையோடு இருந்தால், அது தன்னம்பிக்கையை குலைத்துவிடும் என்பதால், குல்தீப் மனவருத்தம் அடைந்ததாக கூறப்படுகிறது.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close