இந்திய அணியில் சாய் சுதர்சன் சேர்ப்பு


மும்பை: இந்திய கிரிக்கெட் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 5 டி 20 கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் ஆட்டம் வரும் 6-ம் தேதி ஹராரே நகரில் நடைபெறுகிறது. இந்ததொடருக்கான இந்தியஅணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஷுப்மன் கில் தலைமையிலான அந்த அணியில் சமீபத்தில் முடிவடைந்த டி 20 உலகக் கோப்பையில் இடம் பெற்றிருந்த சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய 3 பேர் மட்டும் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இவர்கள் 3 பேரும் தாயகம் திரும்பி விட்டு அதன் பின்னரே ஹராரே புறப்பட்டுச் செல்வார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் இவர்களுக்கு பதிலாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் இரு டி 20 ஆட்டங்களுக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்தபேட்ஸ்மேன் சாய் சுதர்சன், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.