[X] Close

அட! லாரா 375 ரன்களையும் என் பந்துகளில் மட்டுமே அடிக்கலப்பா...! - இதே நாளில் அன்று... நெகிழ்ச்சியுடன் பகிரும் இங்கி. பவுலர் கிறிஸ் லூயிஸ்


375

  • kamadenu
  • Posted: 18 Apr, 2019 16:33 pm
  • அ+ அ-

-இரா.முத்துக்குமார்

1994ம் ஆண்டு இதே தினத்தில் மே.இ.தீவுகளின் மிகப்பெரிய நட்சத்திர வீரர் பிரையன் லாரா தனது அப்போதைய அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரான 375 ரன்களை எடுத்து கேரி சோபர்ஸின் 365 ரன்கள் என்ற அதிகபட்ச ஸ்கோர் உலக சாதனையை முறியடித்தார்.

ஆன்ட்டிகுவாவில் 1994ம் ஆண்டு இதே தினத்தில் பிரையன் லாரா 375 ரன்களைக் குவித்து கேரி சோபர்ஸ் சாதனையை முறியடித்தார்.  மைதானத்துக்குள் கேரி சோபர்ஸ் உட்பட ரசிகர்கள் அனைவரும் புகுந்தனர். உண்மையில் ஒரு லெஜண்டின் மிகப்பெரிய இன்னிங்ஸ். இதற்கு 10 ஆண்டுகள் கழித்து பிரையன் லாரா தன் 375 உலகசாதனையையே முறியடித்து 2004-ல் செயிண்ட் ஜானில் 400 ரன்கள் எடுத்து வீழ்த்தப்பட முடியாமல் நின்றதும் நினைவுக்கு வருகிறது.

கிரிக்கெட் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இந்த 375 ரன்கள் மகா இன்னிங்ஸை பற்றி அப்போது அந்தச் சாதனையை முறியடிக்கும் ரன்களை தன் ஓவரில் கொடுத்த கிறிஸ் லூயிஸ் அப்போதைய உணர்ச்சிகர நிலைமைகளை கண்முன் கொண்டு வருகிறார்:

“சாதனைக்குரிய ரன்னை நான் கொடுத்தேன் என்பதனால் நான் அடிக்கடி என்ன கூற வேண்டியிருந்தது என்றால்... ‘அட! 375 ரன்களையும் நான் மட்டுமே கொடுக்கவில்லையப்பா’ என்பதாகத்தான் இருந்தது” என்றார் நகைச்சுவையாக.

முதல் நாளில் மே.இ.தீவுகள் 12/2 என்று தடுமாறியது.  ஆனால் லாரா 12 மணி நேரம் 46 நிமிடங்கள் பேட் செய்து 1958-ல் கேரி சோபர்ஸ் நிகழ்த்திய சாதனையை முறியடித்தார். கிறிஸ் லூயிஸ் களவியூகத்தைச் சரியாக வைத்து ஷார்ட் பிட்ச் பந்து ஒன்றை வீச பிரையன் லாரா அதனை ஹூக் செய்து பவுண்டரி விளாசிய போது அவரது கால் ஸ்டம்பை மிதிக்க பெய்ல் லேசாக ஆட்டம் கண்டது. ஆனால் கீழே விழவில்லை, பந்து பவுண்டரிக்கு பறக்க சாதனையை முறியடித்தார் லாரா.

இதுபற்றி கிறிஸ் லூயிஸ் கூறும்போது, “அந்த பந்தை நான் தான் பிரையன் லாராவுக்கு வீசினேன் என்பதில் மக்களுக்கு எந்த வித சந்தேகமும் இருந்ததில்லை. அதனால்தான் நான் அடிக்கடி ‘அவர் 375 ரன்களையும் என்னை மட்டுமே அடிக்கவில்லை’ என்று கூற வேண்டியதாயிற்று.

அந்தப் பந்தை வீசும்போது நினைத்தேன், எல்லாம் செய்தாகிவிட்டது, என்னதான் வேறு மாதிரி செய்வது, ஓடிவரும் போது யோசித்து கொஞ்சம் எழும்பும் பந்தை வீசுவோம் என்று முடிவெடுத்தேன்.  ஷாட்டுக்கு பின்னால் 2 பீல்டர்களை நிறுத்தியிருந்தோம்.  பந்தை வீசினேன் லாரா பளார் என்று பவுண்டரிக்கு அனுப்பினார். ஆட்டமே சிறிது நேரம் நின்றுவிட்டது. கேரி சோபர்ஸ் உட்பட ரசிகர்கள் களத்தைப் புடை சூழ்ந்தனர். நாங்கள் பார்வையாளர்களாக்கப்பட்டோம்.

இது நடந்து கொண்டிருக்கும் போதே அப்போதைய விக்கெட் கீப்பர் ஜாக் ரஸல் என்னிடம் வந்தார், லாரா ஹூக் செய்த போது ஸ்டம்பை மிதித்து விட்டார் தெரியுமா உனக்கு என்றார்.. எனக்கு அதுபற்றி ஒன்றும் தெரியவில்லை.

இன்று 25 ஆண்டுகள் ஆகிவிட்டது, நான் நிச்சயமாக பிரையன் லாரா சாதனை உடைப்பை விரும்பவில்லை. குறிப்பாக என் பவுலிங்கில் அவர் செய்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன், எங்கள் அணிக்கு எதிராக செய்து விடக்கூடாது என்பதிலும் தெளிவாக இருந்தேன், ஆனால் நான் லாராவுக்காக மகிழ்ச்சியடைகிறேன். நான் விளையாடியதில் சிறந்த பேட்ஸ்மென் லாராதான். நான் பார்த்ததில் மிகவும் உத்வேகமூட்டக்கூடிய கிரிக்கெட் வீரர் அவர், இந்தச் சாதனைக்கு அவரை விட தகுதியானவர் இருக்க முடியாது” என்றார் லூயிஸ்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close