[X] Close

6 தோல்விக்குப்பின் ஆர்சிபிக்கு முதல் வெற்றி: ஃபார்முக்கு திரும்பிய கோலி, டிவில்லியல்ர்ஸ் : ப்ளே-ஆப் சுற்றுக்கு ஓர் அரிதான வாய்ப்பு?


6

  • kamadenu
  • Posted: 14 Apr, 2019 09:12 am
  • அ+ அ-

-போத்திராஜ்

கேப்டன் விராட் கோலியின் பொறுப்பான ஆட்டம், 360 டிகிரி திசையில் விளாசும் டிவில்லியர்ஸ் ஃபார்முக்கு திரும்பியதால், சண்டிகரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 28-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

இந்த ஐபிஎல் சீசனில் தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்து துவண்டு போயிருந்த ஆர்சிபி அணிக்கு கிடைத்த முதல் வெற்றி இதுவாகும். இதன்மூலம் 7 போட்டிகளில் 6 தோல்வி, ஒரு வெற்றி என 2 புள்ளிகள் கணக்கை தொடங்கியுள்ளது.

முதலில் பேட் செய்த கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில்4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்தது. 174 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும்இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 4 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 2 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ப்ளே-ஆப் வாய்ப்பு?

ஆர்சிபி அணியின் ப்ளே-ஆப் கனவு இன்னும் அருகிவிடவில்லை. அதற்கான வாய்ப்புகள் இன்னும் இருக்கின்றன. அடுத்து வரும் 7 லீக் போட்டிகளிலும் ஆர்சிபி அணி வென்று 14 புள்ளிகள் பெற்றால்கூட ப்ளே-ஆப் சுற்றுக்குச் செல்ல முடியும். ஆதலால், ஆர்சிபி அணி ப்ளே-ஆப் சுற்றுக்கான வாய்ப்பு இல்லை என இப்போதே முன்முடிவுக்கு வந்துவிட முடியாது.

கடந்த காலக் கட்டங்களில் அதாவது 2009-ம் ஆண்டில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, 2010-ல் ஆர்சிபி, சிஎஸ்கே, 2014-ல் மும்பை இந்தியன்ஸ், 2018-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் 14 புள்ளிகள் ெபற்று ப்ளே-ஆப் சுற்றுக்கு சென்றுள்ளன. ஆதலால் இந்த உதாரனமாக வைத்து கோலி அணிக்கு வாய்ப்பு இருக்கிறது. அது ஆர்சிபி அணி பெறும் வெற்றிகளையும், மற்ற அணிகளின் தோல்விகளையும் பொறுத்து அமையும்.

இந்த ஆட்டத்தில் வெற்றிக்கு முக்கியக் காரணம், விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகிய இருவரும் முத்தாய்ப்பான பேட்டிங் தவிர வேறு ஏதுமில்லை. இந்த ஐபிஎல் அணிகளிலேயே ஆகச்சிறந்த, உலகத்தரம் வாய்ந்த இரு பேட்ஸ்மேன்கள் விராட் கோலி, டிவில்லியர்ஸ் என்பதில் மறுப்பதற்கில்லை.

இருவரின் பேட்டிங் ஸ்டெயில், ஷாட்களை நேர்த்தியாக ஆடும் விதம், பவுண்டரிகள் அடிப்பது, சிக்ஸர்களை பறக்கவிடுவதில் அழகு ஆகியவை தனித்துவம். இவை அனைத்தையும் இந்த ஆட்டத்தில் காண முடிந்தது. அதிலும் ஷமி வீசிய 19-வது ஓவரில் 360டிகிரி வீரர் டிவில்லியர்ஸ் லெக் திசையில் அடித்த ஒரு சிக்ஸர் வேர்ல்டு கிளாஸ், அழகு… ஆட்ட நாயகன் விருதை டிவில்லியர்ஸ் ெபற்றார்.

நீண்ட நாட்களுக்குப் பின் இருவரும் தங்களின் இயல்பான ஆட்டத்துக்கு திரும்பி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். கோலி 53 பந்துகளில் 67 ரன்களும், டிவில்லியர்ஸ் 38 பந்துகளில் 59 ரன்களும் சேர்த்தனர். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்்த்து ஏறக்குறையை வெற்றியை உறுதி செய்தனர். இதுமட்டுமல்லாமல் கடைசி நேரத்தில் ஆல்-ரவுண்டர் ஸ்டோனிஸ் காட்டிய அதிரடி ஆட்டமும் வெற்றியை எளிமையாக்கியது.

ஒருகட்டத்தில் கெயிலின் அதிரடியால் பஞ்சாப் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்துவந்தபோது, அதற்கு ஸ்பீடுபிரேக்கர் அமைத்தவர் யஜுவேந்திர சாஹல், மொயின் அலி, நவ்தீப் சைனி ஆகிய 3 பந்துவீச்சாளர்கள்தான். இந்த மூவரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால், 173 ரன்களாக பஞ்சாப் ஸ்கோர் சுருங்கியது.

அதிலும், கெயில் ஷார்ட் பிட்ச் பந்துகளை ஆடுவதில் பலவீனமானவர் என்பதை தெரிந்து கொண்டு சைனி வீசியது அருமை. சைனியின் வேகப்பந்துவீச்சை ஆடுவதில் கெயில் மிகுந்த சிரமப்பட்டார்.

கிங்ஸ்லெலவன் பஞ்சாப் அணியைப் பொருத்தவரை கெயில் 99 ரன்கள் சேர்த்து சதம் அடிக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டம். இதில் கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோரின் பேட்டிங் முன், கெயின் 99 ரன்கள் என்ற விஷயம் மறக்கடிக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை. பஞ்சாப் அணியில் கெயிலின் ஸ்கோர் தவிர மற்றவீரர்கள் ஒருவரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.

தரமான கிரிக்கெட் தேவை

இந்த ஐபிஎல் போட்டியில் அனைத்து அணிகளும் தரமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்து விலகி எப்படியாவது வெற்றியை பெற வேண்டும் என்ற ரீதியில்தான் இருக்கிறார்கள். இதனால்தான் கேட்சுகளை கோட்டை விடுவது, ரன் அவுட்களை இழப்பது, விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறுவது போன்ற திறனற்ற சம்பவங்கள் நடக்கின்றன. இந்த போட்டியிலும் விராட் கோலி கெயிலுக்கு கேட்சை கோட்டை விட்டார், அதன்பின் அஸ்வின் ரன் அவுட் மிஸ் ஆனது போன்ற நிகழ்வுகள் நடந்தன.

தரமான கிரிக்கெட்டை வீரர்கள் விளையாடும் பட்சத்தில், மன்கட் அவுட் செய்வது, ஓவர் த்ரோவில் ரன்களைக் கேட்டு நடுவரிடம் சண்டையிடுவது, நோபால் தராவிட்டால் நடுவரிடம் வாக்குவாதம் செய்வது போன்ற தரமற்ற நிகழ்வுகள் நடக்க வாய்ப்பில்லை.

கோலி அதிரடி

kohli.jpg 

174 ரன்கள் எனும் இலக்குடன் ஆர்சிபி அணிக்கு கோலி, பார்தீவ் படேல் தொடக்கம் அளித்தனர். ஷமி வீசிய 2-வது ஓவரிலேயே கோலி தனது வழக்கமான ஆட்டத்தை கையாண்டார். கோலி 2 பவுண்டரிகளையும், படேல் ஒருபவுண்டரியும் அடித்தனர். சாம் கரன் வீசிய 3-வது ஓவரில் படேல் 2 பவுண்டரிகளும், கோலி ஒருபவுண்டரியும் விளாசினர்.

வேகப்பந்துவீச்சை அடித்து நொறுக்குகிறார்கள் எனத் தெரிந்து கொண்டு அஸ்வின் 4வது ஓவரை வீசினார், அதற்கு பலனும் கிடைத்தது. 5-வது பந்தில் லாங்-ஆப் திசையில் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து படேல் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு 43 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து 360டிகிரி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் களமிறங்கி, கோலியுடன் சேர்ந்தார். ஷமி வீசிய 5-வது ஓவரில் டிவில்லியர்ஸ் 2 பவுண்டரிகளை பறக்கவிட்டார். அஸ்வினின் 6-வது ஓவரில் கோலி 2 பவுண்டரிகளை தனக்கே உரிய ஸ்டைலில் அடித்தார். பவர்ப்ளேயில் ஆர்சிபி அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் சேர்த்தது. அதன்பின் இருவரும் அவப்போது பவுண்டரிகள் அடித்து ஸ்கோரை நிதானமாக உயர்த்தினர். பொறுமையாக ஆடிய கோலி 37 பந்துகளில் இந்த சீசனின் 2-வது அரைசதத்தை பதிவு செய்தார்.

ஷமி வீசிய 16-வது ஓவரில் திருப்புமுனை ஏற்பட்டது. 3-வது பந்தை கோலி டீப் மிட்விக்கெட் திசையில் அடிக்க அது அஸ்வினிடம் கேட்ச் ஆனது. கோலி 8 பவுண்டரிகள் உள்ளிட்ட 63 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்டாய்னிஸ் களமிறங்கினார்.

அடுத்த 3 ஓவர்களிலும் டிவில்லியர்ஸ் தனது காட்டடியை வெளிப்படுத்தினார். ஆன்ட்ரூ டை வீசிய 18-வது ஓவரில் ஸ்டாய்னிஸ் இரு பவுண்டரிகளும், டிவில்லியர்ஸ் ஒரு சிக்ஸர் என 18 ரன்கள் சேர்த்தனர். 35 பந்துகளில் டிவில்லியர்ஸ் அரைசதம் அடித்தார்.

கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. ஷமி வீசிய 19-வது ஓவரில் டிவில்லியர்ஸ் ஒரு சிக்ஸரும், ஸ்டாய்னிஸ் ஒருபவுண்டரி என 14 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்டது. கான் வீசிய கடைசி ஓவரில் ஒருபவுண்டரியும், 2 ரன்களும் ஸ்டாய்னிஸ் அடிக்க ஆர்சிபி அணி 4 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி பெற்றது.

டிவில்லியர்ஸ் 59 ரன்களிலும், ஸ்டோனிஸ் 28 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் அணி தரப்பில் அஸ்வின், ஷமி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

கெயில் 99 ரன்கள்

gayle.jpg 

முன்னதாக டாஸ்வென்ற ஆர்சிபி அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி  முதலில் பேட் செய்தது. தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடிய கெயில், முதல் 4 ஓவர்களில் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். அதிலும் சிராஜ் வீசிய 5-வது ஓவரில்  2 சிக்ஸர்கள்,3 பவுண்டரிகள் என 24 ரன்கள் சேர்த்தார் கெயில்.

கெயிலுக்கு துணையாக ஆடிய ராகுல் அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர் அடித்தார். சாஹல் வீசிய 7-வது ஓவரின் முதல்பந்தில் சிக்ஸர் அடித்த ராகுல் 2-வது பந்தில் படேலால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு 18 ரன்களில் ஆட்டமந்தார். அடுத்து அகர்வால் களமிறங்கினார். அதிரடியாக ஆடிய கெயில் 28 பந்துகளில் அரைசதம் அடித்தார். மயங்க் அகர்வால் 15 ரன்கள் சேர்த்தநிலையில் சாஹல் பந்தில் போல்டாகினார். பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்களும், 10 ஓவர்களில் பஞ்சாப் அணி 90 ரன்கள் சேர்த்தது.

அதன்பின்வந்த சர்பிராஸ் கான் 15, சாம் கரன் ஒரு ரன்னிலும் விரைவாக ஆட்டமிழந்தனர். ஆனால், தனது வழக்கமான அதிரடியால் வெளுத்துவாங்கிய  கெயில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் சேர்த்தார். ஒரு ரன்அடிக்காமல் சதத்தை தவறவி்ட்டார். கெயில் 99 ரன்களிலும், மன்தீப் சிங் 18 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்தது பஞ்சாப்.

ஆர்சிபிதரப்பில் சாஹல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close