[X] Close

ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மோதல்; கொல்கத்தாவை மீண்டும் பதம்பார்க்குமா சிஎஸ்கே?- காயத்தால் அவதிப்படும் ஆந்த்ரே ரஸ்ஸல் களம் இறங்குவது சந்தேகம்


  • kamadenu
  • Posted: 14 Apr, 2019 08:47 am
  • அ+ அ-

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்ற நிலையில் அடுத்தடுத்த இரு தோல்விகளால் சற்று துவண்டுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியிடம் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட கொல்கத்தா அணி, கடைசியாக நேற்று முன்தினம் தனது சொந்த மண்ணில் டெல்லி அணியிடம் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

அடுத்தடுத்து இரு தோல்விகளால் அழுத்தத்தை சந்தித்துள்ள கொல்கத்தா அணி தனது சொந்த மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் தோனி தலைமையிலான சென்னை அணியை சந்திக்கிறது. கொல்கத்தா அணி தோல்வியடைந்த இரு ஆட்டங்களின் வாயிலாக அந்த அணி ஆந்த்ரே ரஸ்ஸலின் அதிரடி ஆட்டத்தை பெரிதும் சார்ந்திருப்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

‘பவர் ஹிட்டரான’ ஆந்த்ரே ரஸ்ஸலை பெரிய அளவில் ரன் சேர்க்கவிடாமல் கட்டுப்படுத்திவிட்டால் கொல்கத்தா அணியை சராசரி ஸ்கோருக்கும் கீழ் மட்டுப்படுத்திவிடலாம் என்ற நிலை உருவாகி உள்ளது. இது கடந்த இரு ஆட்டத்திலும் நன்கு புலப்பட்டது. இதற்கிடையே ஆந்த்ரே ரஸ்ஸல் மணிக்கட்டு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.

சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தின் போது காயம் அடைந்த அவர், நேற்று முன்தினம் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் வலியையும் பொருட்படுத்தாமல் விளையாடினார்.

எனினும் பந்து வீச்சின் போது ரஸ்ஸல் முழுமையாக 4 ஓவர்களை வீசவில்லை. மேலும் ஆட்டம் முடிவடைந்த பிறகு நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும் ரஸ்ஸலை காணமுடியவில்லை. இதனால் அவர், இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

ஆந்த்ரே ரஸ்ஸல் இந்த சீசனில் கொல்கத்தா அணிக்கு எதிராக 6 முறை 40 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் அவர், களமிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அது கொல்கத்தா அணியின் செயல்திறனை வெகுவாக பாதிக்கக்கூடும்.

டெல்லி அணிக்கு எதிராக தொடக்க வீரராக களமிறக்கப்பட்ட இளம் வீரரான சுப்மான் கில் 39 பந்துகளில், 65 ரன்கள் சேர்த்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். தொடக்க ஆட்டங்களில் சிறப்பாக விளையாடிய நித்திஷ் ராணாவிடம் இருந்து அதன் பின் பெரிய அளவிலான இன்னிங்ஸ் வெளிப்படவில்லை.

இதேபோல் தினேஷ் கார்த்திக்கின் பேட்டிங்கும் கவலை அளிப்பதாக உள்ளது. கடந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்த தினேஷ் கார்த்திக், இந்த சீசனில் இதுவரை 15.33 சராசரியுடன் 93 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இதனால் ஒரு கேப்டனாக பேட்டிங்கில் அணியை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கட்டத்தில் உள்ளார் தினேஷ் கார்த்திக்.

பந்து வீச்சை பொறுத்தவரையில் சுனில் நரேன், குல்தீப் யாதவ், பியூஸ் சாவ்லா, நித்திஷ் ராணா என வலுவான சுழற்பந்து வீச்ச கூட்டணி உள்ள போதிலும் ஈடன் கார்டன் மைதானம் சுழலுக்கு சாதகமாக இல்லாததால் இவர்களால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

அதேவேளையில் பிரஷித் கிருஷ்ணா, லூக்கி பெர்குசன், ஹாரி குர்னே உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்களிடம் இருந்தும் எதிரணிக்கு சவால் கொடுக்கும் திறன் வெளிப்படவில்லை. இதனால் பந்து வீச்சை பலப்படுத்துவதில் கொல்கத்தா அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

7 ஆட்டங்களில், 6-ல் வெற்றி கண்டுள்ள தோனி தலைமை யிலான சென்னை அணி மீண்டும் ஒருமுறை கொல்கத்தா அணியை பந்தாடும் முனைப்பில் இன் றைய ஆட்டத்தை சந்திக்கிறது. ராஜஸ் தான் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில், கடைசி கட்டத்தில் நடுவர் நோ-பால் வழங்கி விட்டு அதன் பின்னர் அந்த முடிவை திரும்பப் பெற்றதும், இதற்கு விளக்கம் கேட்பதற்காக ஆட்ட மிழந்த பிறகும் தோனி களத் துக்கு உள்ளே வந்து நடுவர் களிடம் வாக்குவாதம் செய்தது சர்ச்சையை உருவாக்கியது.

இந்த விவகாரத்தில் தோனிக்கு போட்டியின் ஊதியத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. 3 முறை ஐபிஎல் சாம்பியன், இரு முறை இந்திய அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்த ஒரு கேப்டன் இது போன்று தவறான முன்னுதார ணத்தை ஏற்படுத்தலாமா? என முன்னாள் வீரர்கள் பலரும் கேள்வி கணைகளை தொடுத் தனர். இந்த சர்ச்சைகளை கடந்து இன்றைய ஆட்டத்தில் மீண்டும் ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் சென்னை அணிகவனம் செலுத்தும் என கருதப்படுகிறது.

ஹர்பஜனும் இல்லை

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கழுத்து வலி காரணமாக ஹர்பஜன் சிங் களமிறங்கவில்லை. இந்நிலையில் அவரது மனைவி மற்றும் குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் ஹர்பஜன் சிங் தற்போது மும்பையில் குடும்பத்தினருடன் தங்கியுள்ளார். இதனால் கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்திலும் ஹர்பஜன் சிங் களமிறங்கமாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close