‘டியர் ரோகித், கோலி...’ - இந்திய அணியை அழைத்து பிரதமர் மோடி பாராட்டு


புதுடெல்லி: ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிக்காவை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசியில் அழைத்துப்பேசி பாராட்டினார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய அணியிடம் தொலைப்பேசியில் பேசியதுடன், டி20 உலகக் கோப்பையில் அவர்களின் முன்மாதிரியான வெற்றிக்காக அவர்களை வாழ்த்தினேன். இந்தப் போட்டி முழுவதும் அவர்கள் சிறந்த திறமையையும் ஊக்கத்தினையும் வெளிப்படுத்தினர். ஒவ்வொரு வீரர்களின் அர்ப்பணிப்பும் ஊக்கமளிக்கக்கூடியது." என்று தெரிவித்துள்ளார்.

தொலைப்பேசி உரையாடலின் போது பிரதமர் மோடி, ரோகித் சர்மாவின் சிறப்பான கேப்டன்ஷியையும் அவரது டி20 கேரியரையும் வெகுவாக பாராட்டினார். மேலும், விராட் கோலி எடுத்த சிறப்பான 76 ரன்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பங்களிப்பையும் சிறப்பாக குறிப்பிட்டார். இந்தியாவின் வெற்றியுடன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் ராகுல் டிராவிட்க்கு இந்திய கிரிக்கெட்டுக்கான அவரின் பங்களிப்புக்காக நன்றி தெரிவித்தார்.

ஹர்திக் பாண்டியாவின் கடைசி ஓவரின் அபார ஆட்டத்தையும், தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லரை ஆட்டமிழக்கச் செய்து ஆட்டத்தின் போக்கினை மாற்றிய சூர்ய குமார் யாதவின் கேட்சையும் வெகுவாக பிரதமர் மோடி பாராட்டினார். அதேபோல், டி20 உலகக் கோப்பை மற்றும் இந்திய கிரிக்கெட்டுக்கு ஜஸ்ப்ரிக் பும்ராவின் பங்களிப்பையும் புகழ்ந்தார்.

முன்னதாக சனிக்கிழமை நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணியை வாழ்த்தி பிரதமர் மோடி வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “நம் அணி அவர்களது ஸ்டைலில் டி20 உலகக் கோப்பையை வென்று நாட்டுக்கு கொண்டு வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. இந்திய அணியை எண்ணி பெருமை கொள்கிறோம். இது வரலாற்று சிறப்பு மிக்கது” எனத் தெரிவித்தும், வாழ்த்தி வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, 17 ஆண்டுகள் கழித்து இப்போது 2-வது முறையாக டி20 உலக சாம்பியன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.