[X] Close

ஜெய்ப்பூரில் ராஜஸ்தானுடன் இன்று மோதல்: 6-வது வெற்றியை பெறும் முனைப்பில் சிஎஸ்கே


6

  • kamadenu
  • Posted: 11 Apr, 2019 09:19 am
  • அ+ அ-

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று ஜெய்ப்பூர் சவாய் மான் சிங் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சிறந்த பார்மில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), தடுமாறி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது.

அஜிங்க்ய ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி 5 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 4 தோல்விகளுடன் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் சொந்த மைதான சாதகங்களுடன் நடப்பு சாம்பியனான சென்னை அணியை இன்று எதிர்கொள்கிறது.

இரு அணிகளும் இந்த சீசனில் 2-வது முறையாக மோதுகின்றன. கடந்த மாதம் 31-ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியிடம் ராஜஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. தோனி தலைமையிலான சென்னை அணி 6 ஆட்டங்களில் 5-ல் வெற்றி கண்டு 10 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கடைசியாக நேற்று முன்தினம் சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை பந்தாடியிருந்தது. தோனியின் புத்திசாலித்தனமான கேப்டன்ஷிப்பால் எந்தவிதமான ஆடுகளத்திலும், எல்லா சூழ்நிலைகளுக்கும் தகுந்தபடி சிறப்பாக செயல்படுவதற்கான சமநிலையான அணியாக உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

அதேவேளையில் ராஜஸ்தான் அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவற்கான வழிகளை இன்னும் தேடிய வண்ணம் உள்ளது. தொடக்க ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டியசூழ்நிலைகளில் இருந்த போதிலும் அந்த வாய்ப்புகளை ராஜஸ்தான் அணி சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறியது. கடைசியாக கொல்கத்தா அணிக்கு எதிராக சொந்த மைதானத்தில் விளையாடிய போதிலும் பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியாமல் ராஜஸ்தான் அணி தடுமாறியது.

8 அணிகள் கலந்துகொண்டுள்ள தொடரில் தற்போது 7-வது இடம் வகிக்கும் ராஜஸ்தான் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பெற வேண்டுமானால் இனிமேல் எஞ்சியுள்ள அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிபெற வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த சீசனில் முதல் சதம் விளாசி அனைவரையும் கவர்ந்த சஞ்சு சாம்சன் இன்னும் காயத்தில் இருந்து குணமடையவில்லை.

இரு ஆட்டங்களில் மட்டையை சுழற்றிய ஜாஸ் பட்லரிடம் இருந்து அதன் பின்னர் பெரிய அளவிலான ரன் குவிப்பு இல்லாததும் அணியின் திறனை வெகுவாக பாதித்துள்ளது. ரஹானே, ராகுல் திரிபாதி, பென் ஸ்டோக்ஸ் ஆகியோரிடம் இருந்தும் பெரிய அளவிலான பங்களிப்பு இல்லை.

ஸ்டீவ் ஸ்மித் கடந்த ஆட்டத்தில் 73 ரன்கள் சேர்த்த போதிலும் படுமந்தமாக விளையாடினார். டி 20 வடிவத்துக்கு தகுந்த அளவில் அவர், அதிரடியாக விளையாடுவது அவசியம். இறுதிக்கட்ட ஓவர்களில் மட்டையை சுழற்றக்கூடிய வீரர்கள் அணியில் இல்லாததும் பலவீனமாக உள்ளது.

பந்து வீச்சை பொறுத்தவரையில் பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர்,ஜெயதேவ் உனத்கட், ஸ்ரேயஸ் கோபால், கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோர் சிறந்த பார்மில் உள்ள சென்னை அணியின் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

சென்னை அணியில் டாப் ஆர்டரில் ஷேன் வாட்சன், டு பிளெஸ்ஸிஸ் ஆகியோரும் நடு வரிசையில் சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், தோனி ஆகியோரும் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். பந்து வீச்சை பொறுத்தவரையில் தீபக் ஷகார், ஸ்காட் குக்கேலீன் ஆகியோருடன் சுழலில் ஹர்பஜன் சிங், இம்ரன் தகிர், ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் வலுசேர்த்து வருகின்றனர்.

இன்றைய ஆட்டம் நடைபெறும் ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கக்கூடும் என்பதால் சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர்களும் அசத்தக்கூடும்.

ஹர்பஜன், இம்ரன் தகிர் ‘ஓல்டு வைன்’

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணியை தீபக் ஷகார், ஹர்பஜன் சிங், இம்ரன் தகிர் ஆகியோர் தங்களது அற்புதமான பந்து வீச்சில் 108 ரன்களுக்குள் மட்டுப்படுத்தியிருந்தனர். 38 வயதான ஹர்பஜன் சிங் 2 விக்கெட்களையும், 40 வயதான இம்ரன் தகிர் 2 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தனர். ஆட்டம் முடிவடைந்ததும் சென்னை அணியின் கேப்டன் தோனி கூறுகையில்,“ஹர்பஜனுக்கும், இம்ரன் தகிருக்கும் வயதாகிவிட்டது என்பதை மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் நாட்பட்ட திராட்சை ரசம் (ஓல்டு வைன்) போன்றவர்கள். வயது முதிர்ச்சி அடைந்தாலும் தங்கள் பங்களிப்பை சிறப்பாகச் செய்கிறார்கள். குறிப்பாக ஹர்பஜன் சிங், தான் பங்கேற்கும் அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாக பந்துவீசுகிறார். அணிக்கு எப்போதெல்லாம் விக்கெட் வீழ்த்தும் கட்டாயம் இருக்கிறதோ அப்போது இம்ரன் தகிரை அழைத்தால், சிறப்பாகச் செயல்பட்டு விக்கெட்டை வீழ்த்திக் கொடுப்பார்” என்றார்.

நேரம்: இரவு 8 நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close