[X] Close

விராட் கோலியின் தவறான டாஸ் முடிவு: வார்னர், பேர்ஸ்டோ காட்டடி சதம்: ஆர்சிபியை முடித்த சன்ரைசர்ஸ்


  • kamadenu
  • Posted: 31 Mar, 2019 20:47 pm
  • அ+ அ-

-போத்திராஜ்

 வார்னர், பேர்ஸ்டோ ஆகியோரின் மிரட்டலான காட்டடி சதத்தால் ஹைதராபாத்தில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் பெங்களூரூ ராயல்சேலஞ்சர்ஸ் அணியை 118. ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது சன்ரைசர்ஸ் அணி.

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் சேர்த்தது. 232 ரன்கள் எனும் இமாலய இலக்கை துரத்திய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 19.5 ஓவர்களில் 113  ரன்னில் ஆட்டமிழந்து படுதோல்வி அடைந்தது.

சன்ரைசர்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி 2-வது வெற்றியையும், ஆர்சிபி அணி 3 போட்டிகளிலும் தோல்வியையும் அடைந்துள்ளது. ஆட்டநாயகன் விருதை பேர்ஸ்டோ பெற்றார்.

kohli.jpg 

ஆர்சிபி அணியின் தோல்விக்கு வார்னர், பேர்ஸ்ட்டோவின் காட்டடி ஒரு காரணம் என்றால், மற்றொரு முக்கியக் காரணம் கோலியின் தவறான கேப்டன்ஷிப்பும், தவறான டாஸ்முடிவும் என்றுதான் கூற முடியும்.

ஏனென்றால், ஹைதராபாத் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரி என்று பிட்ச் ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. டாஸ் வென்ற நிலையில், எந்தவிதமான யோசனையும் இல்லாமல் கோலி பேட்டிங்கை தேர்வு செய்திருக்கலாம். குறைந்த பட்சம் 180 ரன்களுக்கு மேல் அடித்திருந்தாலோ போட்டியை நெருக்கடியாக கொண்டு சென்றிருக்கலாம்.

ஆனால், வந்தவாய்ப்பை சன்ரைசர்ஸ் அணக்கு வாரிக்கொடுத்துவிட்டு, பெங்களூரு அணி மோசமான தோல்வியை அடைந்துள்ளது.

டி20 போன்ற குறுகிய ஓவர்கள் கொண்ட போட்டிகளில் பல்வேறு திறமை நிறைந்த வீரர்கள் விளையாடும்போது, 200 ரன்களுக்கு மேல் சென்றால், சேஸிங் செய்வது என்று பகீரத செயல்.

பேட்ஸ்மேன்களுக்கு ஏற்படும் நெருக்கடியும், மனதீரியான அழுத்தமுமே விக்கெட்டுகளை இழக்கச் செய்துவிடும். 200 ரன்களுக்கு மேலாக இலக்கைப் பார்த்துத்தான் ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை வரிசையாக பறிகொடுத்தார்கள் என்பதுதான் நிதர்சனம்.

கோலி ஒரு மேட்ச்வின்னர் என்பதில் சந்தேகமில்லை, ஆனால், சிறந்த கேப்டனாக ஒளிர்கிறாரா என்று எழும் கேள்விக்கு வெளிச்சம் பாய்ச்சுவது அவசியமாகும்

வார்னரும், பேர்ஸ்டோவும் கடந்த இரு போட்டிகளாக அசுரத் தனமான பேட்டிங் ஃபார்மில் இருந்து வருகின்றனர். அதிலும் இருவரும் கடந்த போட்டிளாக தொடக்க விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்து வருகின்றனர்.

sun riser.jpg 

குறிப்பாக சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக வார்னரின் ஸ்டிரைக் ரேட் 2016-ம் ஆண்டில் இருந்து 287 ரன்கள் சராசாரியாகும். அப்படி இருக்கும் போது தொடக்கத்திலேயே வார்னருக்கு எதிராக சுழற்பந்துவீச்சாளர்களை கோலி பயன்படுத்தியது கேப்டன்ஷிப் தோல்வியாகத்தான் இருக்க முடியும்.

ஆர்சிபி அணியில் வார்னர், பேர்ஸ்டோ ஆகியோரின் ரன்வேட்டைக்கு தடைவிதிக்கும் வகையில் பந்துவீச்சாளர்கள் இல்லை என்பது மிகப்பெரிய குறையாகும். உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் வார்னரை கட்டுப்படுத்தும் அளவுக்கு  பந்துவீச்சும் திறமையானவர்கள் இல்லை.

சுழற்பந்துவீச்சில் சாஹலைத் தவிர மற்றவர்கள் யாரும் முழுநேர பந்துவீச்சாளர்கள் இல்லை.

இதில் புதிதாக அறிமுகமான 16வயது ரே பர்மான் சுழற்பந்துவீச்சாளரை சர்வதேச அளவில் விளையாடிவரும் வார்னருக்கும், பேர்ஸ்டோவுக்கும் எதிராக பந்துவீசச் செய்தது தற்கொலைக்கு சமம். வளர்ந்துவரும் வீரர்  ரே பர்மனின் நம்பிக்கையையும் குலைத்துவிடும், அணியையும் இதுபோன்ற படுமோசமான தோல்விக்கு இட்டுச் செல்லும்.

இந்த போட்டியில் ஆர்சிபி அணியின் பந்துவீச்சாளர்கள் 6 பேரும், ஓவர்களுக்கு 10 ரன்களுக்கு குறையாமல் வாரிக் கொடுத்ததை என்னவென்று சொல்வது.

ஒட்டுமொத்தத்தில் ஆர்சிபி அணியின் தோல்விக்கு பந்துவீச்சாளர்கள் இயற்கையான காரணமும், கோலியின் கேப்டன்ஷிப், தவறான முடிவுகள் செயற்கையான காரணம் என்றே காரணமாகக் கூறலாம்.

சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட் செய்தது. வார்னர், பேர்ஸ்டோ களமிறங்கினார்கள். தொடக்கத்தில் இருந்து இருவரும் அதிரடியாக ஆடி ஆர்சிபிஅணியின்  பந்துவீச்சை சிதறடித்து அதிர்ச்சி அளித்தனர். பவர்ப்ளேயில் சன்சைர்ஸ் அணி 59 ரன்கள் சேர்த்தது.

வார்னர் 34 பந்துகளிலும், பேர்ஸ்டோ 28 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். ஆர்சிபி அணியினர் யார் பந்துவீசினாலும்  பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் வார்னரும், பேர்ஸ்டோவும் அனுப்பிக் கொண்டே இருந்தனர். 58 பந்துகளில் 100 ரன்களையும், 13.2 ஓவர்களில் 150 ரன்களையும்  சன்ரைசர்ஸ் அணி எட்டியது.

அரைசதம் அடித்தபின் வார்னர், பேர்ஸ்டோ ரன் குவிப்பதில் வேகம் காட்டினர். இவர்களைப் பிரிக்க முடியாமல் கோலி பல்வேறு பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் முடியாததால், நம்பிக்கை இழந்துவிட்டார்.

28 பந்துகளி்ல் அரைசதம் அடித்த பேர்ஸ்டோ அடுத்த 24 பந்துகளில் 50 ரன்களை எட்டி டி20 போட்டியில் முதல் சதம் அடித்தார். இதற்கு முன், இங்கிலாந்தைச் சேர்ந்த பீட்டர்ஸன், பென் ஸ்டோக்ஸ் மட்டுமே சதம் அடித்திருந்தனர். அவர்களுக்குஅடுத்தாற்போல் 3-வது வீரராக பேர்ஸ்டோ உள்ளார்.

சாஹல் 16-வது ஓவரை வீசியபோது, பேர்ஸ்டோ 114 ரன்கள் சேர்த்தநிலையி்ல் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 7 சிக்ஸர்கள் 12 பவுண்டரிகள் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 185 ரன்கள் சேர்த்தனர்.

waere.jpg 

இதற்கு முன் கடந்த 2017-ம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா அணியின் கம்பீர், கிறிஸ் லின் முதல் விக்கெட்டுக்கு 184 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது. அதை இவர்கள் இருவரும் முறியடித்தனர்.

அடுத்து விஜய் சங்கர் களமிறங்கினார். ஒருசிக்ஸர் அடித்தநிலையில் ஆட்டமிழந்தார். 17.2 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 200 ரன்களை எட்டியது. வார்னர் 54 பந்துகளில் தனது 4-வது  சதத்தை நிறைவு செய்தார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டியில் இரு பேட்ஸ்மேன்கள் சதம் அடிப்பது இது 2-வது முறையாகும்.

இதற்கு முன் கடந்த 2016-ம் ஆண்டு ஆர்சிபி அணியின் கோலி, டீவில்லியர்ஸ் குஜராத் அணிக்கு எதிராக சதம் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு சன்ரைசர்ஸ் அணி 231 ரன்கள் சேர்த்தது. 100 ரன்களுடன்(5சிக்ஸர், 5 பவுண்டரி) வார்னரும், பதான் 6 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆர்சிபி அணியைப் பற்றி என்ன எழுதுவது....

சென்னையில் நடந்த ஆட்டத்தில் 70 ரன்களுக்கு ஆல் அவுட், இன்று 113 ரன்களுக்கு ஆல் அவுட். நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது கோலியின் தலைமை.

232 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் ஆர்சிபி அணி களமிறங்கியது. மனதளவில் உடைந்திருந்த ஆர்சிபி அணியின் பேட்டிங்கும் அதேபோல மோசமாகவே இருந்தது.

முன்னணி பேட்ஸ்மேன்களான பர்தீவ்படேல்(11), ஹெட்மயர்(9), விராட் கோலி(3), டிவில்லியர்ஸ்(1), மொயின் அலி(2) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். பெங்களூரு அணியில்  கிராண்ட்ஹோம்(37), ரே பர்மான்(19), உமேஷ் யாதவ்(14) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்கள்.

19.5 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்து 118 ரன்களில் மோசமான தோல்வியை ஆர்சிபி அணி அடைந்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் முகமது நபி 4 விக்கெட்டுகளையும், சந்தீப் சர்மா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close