[X] Close

சேப்பாக்கம் ஆடுகளத்தால் தோனி, கோலி அதிருப்தி


  • kamadenu
  • Posted: 25 Mar, 2019 07:43 am
  • அ+ அ-

-பெ.மாரிமுத்து,

ரன்கள் சேர்க்க கடினமாக அமைந்த சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தின் ஆடுகளத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலியும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஐபிஎல் தொடரின் தொடக்க ஆட்டத்தில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 17.1 ஓவர்களில் 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

எளிதான இலக்குடன் பேட் செய்த போதிலும் சென்னை அணி 17.4 ஓவரில்தான் வெற்றி பெற முடிந்தது.

ஆட்டம் முடிவடைந்ததும் ஆடுகளம் குறித்து தோனி கூறியதாவது:இதுபோன்ற ஆடுகளத்தை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. பந்துகள் மெதுவாகவே வந்தன.

ஆடுகளம் மெதுவாக செயல்பட்டதை பார்த்து நாங்கள் உண்மையிலேயே ஆச்சர்யம் அடைந்தோம். 2011-ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கான ஆடுகளத்தையே இது நினைவூட்டியது.

இந்த ஆடுகளத்தில் 150 ரன்கள் வரை குறைந்தபட்சம் எதிர்பார்த்தோம். ஆனால் 80, 90, 100 அல்லது 120 ரன்கள் சேர்ப்பது என்பது மிகவும் குறைவானது. தரமான சுழற்பந்து வீச்சாளர்களை நீங்கள் கொண்டிருந்தால் எதிரணிக்கு அதிக தொல்லைகள் கொடுக்கலாம். இதுபோன்ற ஆடுகளத்தில் ரன்கள் சேர்ப்பது மிகவும் கடினம்.

தற்போது உள்ளதைவிட ஆடுகளம் மேலும் சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டும். அதிக ரன்கள்குவிக்கக்கூடிய ஆடுகளமாக இருக்கவேண்டியதும் அவசியம். மற்ற அணிகளிலும் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். நாங்கள் எதிர்பார்க்கும் ஆடுகளம் இத்தகையது இல்லை. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஆடுகளத்தை பற்றி எங்களுக்கு உறுதியாக தெரியவில்லை.

இந்த ஆடுகளத்தில்தான் பயிற்சி ஆட்டத்தில் விளையாடினோம். அப்போது பந்துகள் அதிகம் சுழலவில்லை. அந்த ஆட்டத்தில் சற்று அதிகமான ஸ்கோரே சேர்த்தோம். இதனால் அதில் இருந்து 30 ரன்கள் கூடுதலாக சேர்க்க முடியும் என்றே நினைத்திருந்தோம்.

இவ்வாறு தோனி கூறினார்.

விராட் கோலி கூறுகையில், “ஆடுகளம் இதுபோன்று செயல்படும் என யாருமே கருதவில்லை. 140 முதல் 150 ரன்கள் வரை சேர்த்தாலே சிறப்பானதாக இருக்கும் என கருதினோம். ஏனெனில் 2-வது பேட்டிங்கின் போது பனிப்பொழிவு பாதிப்பு இருக்கும். இதுபோன்று துரதிருஷ்டவசமான வகையில் யாரும் தொடரை தொடங்க விரும்ப மாட்டார்கள். அதேவேளையில் இதுபோன்ற ஆடுகளத்தில் இருந்து வேறு என்ன பெற முடியும்.

இத்தகைய ஆடுகளத்தில் எந்த அணியுமே முதலில் பேட்டிங் செய்யும் போது தடுமாறவே செய்யும். எந்த ஒரு அணியும் இதுபோன்ற ஆடுகளத்தால் மகிழ்ச்சியடையாது. அதிலும் குறிப்பாக டி 20 ஆட்டங்களில் பெரிய அளவில் ரன் குவிக்கவே விரும்புவார்கள். அல்லது பெரிய அளவிலான இலக்கை வெற்றிகரமாக துரத்தவே விரும்புவார்கள்.

தொடரின் முக்கியமான கட்டத்தில் இதுபோன்று தோல்வியடைவதை விட தொடக்கத்திலேயே இதுபோன்ற தோல்வியை சந்திப்பது நல்லதுதான். எங்களது பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. மேலும் பேட்டிங் செய்வதற்கு ஆடுகளம் எளிதாகவும் இல்லை. 100 முதல் 110 ரன்கள் வரை சேர்த்திருந்தால் ஆட்டத்தை மேலும் நெருக்கமாக கொண்டு சென்றிருக்கலாம்” என்றார்.

ஹர்பஜன் சிங் வருத்தம்

ஆட்ட நாயகனாக தேர்வான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறுகையில், “ சேப்பாக்கம் ஆடுகளம் பேட் செய்வதற்கு கடினமாகவே இருந்தது. ஆனால் விளையாட முடியாத அளவுக்கு இல்லை. 170 முதல் 180 ரன்கள் வரை குவிக்கப்படும் போது ஆடுகளம் குறித்து ஒருவர் கூட புகார் கூறுவதில்லை. ஆனால் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கோ அல்லது வேகப்பந்து வீச்சுக்கோ ஒத்துழைத்துவிட்டால் அனைவருக்கும் பிரச்சினை எழுகிறது. இது ஏன் நடக்கிறது? ரன்கள் அதிகளவில் குவிக்கப்படும் போது யாருக்கும் பிரச்சினை ஏற்படுவதில்லை. கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்களுக்கும் பணி உள்ளது என்பதை மக்கள் மறந்துவிடுகிறார்கள். பேட்ஸ்மேன்கள் தடுமாறுகிறார்கள் என்றால் அந்த சூழ்நிலையில் மட்டைக்கும் பந்துக்கும் இடையே போராட்டம் நடைபெறுகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

சில இடங்களில் பெங்களூரு வீரர்கள் மோசமான ஷாட் விளையாடினார்கள். சேப்பாக்கம் 70 ரன்கள் சேர்க்கக்கூடிய ஆடுகளம் அல்ல. ஆட்டத்தை சரியாக கொண்டு சென்றிருந்தால் குறைந்தது 120 ரன்கள் வரை சேர்த்திருக்க முடியும். உண்மையை கூற வேண்டுமெனில் ஆடுகளத்தில் பந்துகள் இந்த அளவுக்கு அதிகம் சுழலும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்றார்.

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 38 வயதான ஹர்பஜன் சிங் 4 ஓவர்களை வீசி 20 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். அதிலும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக விராட்கோலி, டி வில்லியர்ஸ், மொயின் அலி ஆகியோரை விரைவிலேயே வெளியேற்றி அந்த அணியை குறைந்த ரன்களில் சுருட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close