[X] Close

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்


sunrisers

  • kamadenu
  • Posted: 19 Mar, 2019 10:21 am
  • அ+ அ-

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த சீசனில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வலுவான பந்து வீச்சால் குறைந்த ரன்கள் சேர்த்த போதிலும் வெற்றியை வசப்படுத்தும் திறன் அந்த அணியிடம் இருந்தது. மும்பை அணிக்கு எதிரான ஆட்டம் ஒன்றில் 118 ரன்களே சேர்த்த போதிலும் வெற்றி பெற்று ஐபிஎல் வரலாற்றில் சாதனை படைத்தது. முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்ததும் அந்த அணிதான். ஆனால் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ஹைதராபாத் ஆட்டம் எடுபடாமல் போனது. இறுதி ஆட்டம் மட்டும் அல்ல அந்த சீசனில் லீக் சுற்றில் இரு ஆட்டங்கள், பிளே ஆஃப் தகுதி சுற்று ஆகியவற்றிலும் சென்னை சூப்ப் கிங்ஸிடம் தோல்வி கண்டிருந்தது ஹைதராபாத் அணி. இந்த சீசனில் டேவிட் வார்னர் அணிக்கு திரும்பியுள்ள நிலையில் மீண்டும் வலுவாக களமிறங்குகிறது.

மொத்த வீரர்கள்: 23

இந்திய வீரர்கள்: 15

வெளிநாட்டு வீரர்கள்: 8

அணிச்சேர்க்கை

தொடக்க வீரர்கள்: டேவிட் வார்னர், மார்ட்டின் கப்தில்.

நடுவரிசை வீரர்கள்: மணீஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், ரிக்கி புயி.

விக்கெட் கீப்பர்கள்: விருத்திமான் சாஹா, ஸ்ரீ வத்ஸ் கோஸ்வாமி, ஜானி பேர்ஸ்டோ.

ரிஸ்ட் ஸ்பின்னர்: ரஷித் கான்

விரல் ஸ்பின்னர்: ஷாபாஷ் நதீம்

ஆல் ரவுண்டர்கள்: ஷகிப் அல் ஹசன், அபிஷேக் சர்மா, விஜய் சங்கர், யூசுப் பதான், தீபக் ஹூடா, மொகமது நபி.

வேகப்பந்து வீச்சாளர்கள்: புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, சித்தார்த் கவுல், பசில் தம்பி, டி.நடராஜன், சந்தீப் சர்மா, பில்லி ஸ்டான்லேக்.

பலம்

இறுதிக்கட்ட பந்து வீச்சு அணியின் அசுரபலமாக உள்ளது. கடந்த சீசனில் மற்ற அணிகளைவிட கடைசி 5 ஓவர்களில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர்கள் குறைந்த ரன்களை (ஓவருக்கு 8.91 ரன்கள்) விட்டுக்கொடுத்திருந்தனர்.

வெளிநாட்டு வீரர்களில் டேவிட் வார்னரை தவிர்த்து வில்லியம்சன், கப்தில், மொகமது நபி, ரஷித் கான் ஆகியோர் சீசன் முழுவதும் விளையாட உள்ளனர்.

அனைத்து விதமான பந்து வீச்சு சேர்க்கையும் அணியில் உள்ளது. வலது கை வேகப்பந்து வீச்சு, இடது கை வேகப்பந்து வீச்சு, லெக் ஸ்பின், ஆஃப் ஸ்பின், மெதுவான வேகம் கொண்ட இடது கை பந்து வீச்சு என பல்வேறு கலவை உள்ளது. இடது கை ரிஸ்ட் ஸ்பின் பந்து வீச்சு மட்டுமே அணியில் இல்லை.

பலவீனம்

நடுகள வரிசை,  பின்கள வரிசையில் நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையிலான ஹிட்டர்கள் இல்லை. கடந்த இரு சீசன்களிலும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பெரும்பாலான ஆட்டங்களில் நடுத்தர வகையிலான இலக்கையே கொடுத்தது. வலுவான பந்து வீச்சை கொண்டே குறைந்த அளவிலான இலக்கை கொடுத்தாலும் வெற்றி பெறும் திறமையை கொண்டிருந்தது. இந்த குறையை நிவர்த்தி செய்வதில் யூசுப் தான், விஜய் சங்கர் உள்ளிட்டோர் முனைப்பு காட்ட வேண்டும்.

மற்ற டி 20 தொடர்களில் மொகமது நபி நடுவரிசையில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். ஆனால் ஐபிஎல் தொடரில் அவரை பேட்டிங்கில் சரியாக பயன்படுத்துவதில்லை. அவரை விட ஷகிப் அல்ஹசனுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

தொடக்க வீரர் ஷிகர் தவண் விலகியுள்ளது அணியின் சமநிலையை பாதிக்கக்கூடும். இந்த இடத்தில் விருத்திமான் சாஹா அல்லது மணீஷ் பாண்டே களமிறக்கப்படக்கூடும். இவர்கள் சிறப்பாக செயல்படவில்லையென்றால் அது அணியின் ஒட்டுமொத்த திறனை பாதிக்கக்கூடும்.

இதுவரை

2013- 4-வது இடம்

2014- லீக் சுற்று

2015- லீக் சுற்று

2016- சாம்பியன்

2017- 4-வது இடம்

2018- 2-வது இடம்

ரஷித் கான்

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ரஷித் கான் கடந்த ஆண்டில் ஒட்டு மொத்த டி 20 ஆட்டங்களிலும் 96 விக்கெட்களை வீழ்த்தி மிரளச் செய்தார். மற்ற எந்த பந்து வீச்சாளர்களுமே அவருக்கு நெருக்கமாக வரவில்லை. ஷகிப் அல்ஹசனுடன் இணைந்து கடந்த சீசனில் தாக்குதல் வகையிலான பந்து வீச்சை கையாண்டிருந்தார் ரஷித் கான். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வெற்றிகளில் இந்த பந்து வீச்சு கூட்டணி பிரதான பங்குவகித்தது. இறுதிக் கட்ட ஓவர்களில் ரஷித் கான் பேட்டிங்கிலும் அதிரடியாக விளையாடி ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் விளாசக்கூடிய திறன் கொண்டவர்.

விக்கெட்கள்: 38

ஸ்டிரைக் ரேட்: 19.26

கேன் வில்லியம்சன்

கடந்த சீசனில் தடை காரணமாக டேவிட் வார்னர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால் கேப்டனாக பொறுப்பேற்றார் வில்லியம்சன். 17 ஆட்டங்களில் 8 அரை சதங்கள் அடித்து சிறந்த பங்களிப்பை செய்து வார்னர் இல்லாத குறையை போக்கியிருந்தார்.

ரன்கள்: 1,146

சராசரி: 42.44

மணீஷ் பாண்டே

கடந்த சீசனில் 3 அரை சதங்கள் அடித்த போதிலும் மணீஷ் பாண்டேவுக்கு அந்தத் தொடர் சிறப்பானதாக அமையவில்லை. எனினும் சமீபத்தில் நடைபெற்ற சையது முஸ்டாக் அலி டி 20 தொடரில் அதிரடி சதம் விளாசிய மணீஷ் பாண்டேவிடம் இருந்து  இம்முறை சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.

ரன்கள்: 2,499

சராசரி: 28.07

புவனேஷ்வர் குமார்

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்தி இருமுறை ஊதா நிற தொப்பியை வென்ற ஒரே வீரர் புவனேஷ்வர் குமார். தொடக்க ஓவர்களிலும், இறுதிக்கட்ட ஓவர்களிலும் எதிரணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்துவதில் சிறந்த வீரர். வேகம் குறைத்து இவர் வீசும் ‘நக்குல்’ வகையிலான பந்து வீச்சு எதிரணி பேட்ஸ்மேன்கள் கணிக்க முடியாததாக உள்ளது.

விக்கெட்கள்: 120

 ஸ்டிரைக் ரேட்: 18.81

மாற்றங்கள்

நியூஸிலாந்து தொடக்க வீரரான மார்ட்டின் கப்தில், இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதே வேளையில் ஷிகர் தவண், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இடம் பெயர்ந்துள்ளார். விஜய் சங்கர், ஷாபாஷ் நதீம், அபிஷேக் வர்மா ஆகியோர் டெல்லி அணியில் இருந்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஏற்கனவே மாறியுள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close