[X] Close
 

பேட்டிங் மறந்த டெல்லி: தூள் கிளப்பிய ராணா, ரஸல்: கொல்கத்தா அபாரம்: தினேஷ் கார்த்திக் புதிய மைல்கல்


kkr-beat-dd-by-71-runs

அரை சதம் அடித்து ஆட்டநாயகன் விருது வென்ற நிதிஷ் ராணா

  • போத்திராஜ்
  • Posted: 17 Apr, 2018 00:53 am
  • அ+ அ-

கொல்கத்தாவில் நேற்று நடந்த 11-வது சீசன் ஐபில் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 71 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரேடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன்கள், ராணா, ரஸல் ஆகியோரின் விளாசல், ரன் குவிப்புக்கும், வெற்றிக்கும், குறிப்பாக எதிரிணியின் மிரட்சிக்கும் காரணமாக அமைந்தது. ஆட்டநாயகன் விருதை ராணா பெற்றார்.

இதையடுத்து, 4 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி என்று புள்ளிப்பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளது.

கவுதம் கம்பீர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி 3 தோல்விகள் ஒரு வெற்றியுடன்7-வது இடத்தில் உள்ளது

கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று ஐபிஎல் போட்டியில் 13-வது லீக் ஆட்டம் நடந்தது. டாஸ்வென்ற கம்பீர் பீல்டிங் செய்யத் தீர்மானித்தார்.முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் சேர்த்தது. 201 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 14.2 ஓவர்களில் 129 ரன்களுக்கு ஆட்டமிழந்து 71ரன்களில் தோல்வி அடைந்தது.

கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கடந்த போட்டிகளைப் போல் பேட்டிங் வரிசையில் எந்தவிதமான சோதனை முயற்சிகளையும் இந்த முறை செய்யவில்லை.

கிறிஸ் லின், நரேன் களமிறங்கினார்கள். ஆனால், நரேன் ஒரு ரன்னில் போல்ட் பந்துவீச்சில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த உத்தப்பா, லின்னுடன் இணைந்து நிதானமாக பேட் செய்தார். கடந்த 3 போட்டிகளிலும் சொதப்பலாக பேட் செய்த உத்தப்பா இந்த போட்டியில் நிதானமாக விளையாடினார். இதனால், ரன்ரேட்டும் உயர்ந்தது. அதிரடியாக 19 பந்துகளில் 35 ரன்கள்(3சிக்ஸர்,2பவுண்டரி) சேர்த்த உத்தப்பா நதீம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

லின் 31 ரன்களிலும்,கேப்டன் தினேஷ் கார்த்திக் 19 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். இந்த போட்டியில் கார்த்திக் முக்கிய மைல்கல்லை எட்டினார். இந்த போட்டியில் 19 ரன்கள் சேர்த்த நிலையில், ஐபில் போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களைக் கடந்த 12-வது வீரர் எனும் பெருமையை கார்த்திக் பெற்றார்.

ரஸல், ராணா கூட்டணிதான் அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக்காரணமாக அமைந்தது. கார்த்திக் ஆட்டமிழந்தபோது14 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்திருந்தது கொல்கத்தா. ஆனால், அடுத்த 6 ஓவர்களில் 83 ரன்கள் சேர்த்தது கொல்கத்தா.

ராணாவும், ரஸலும் டெல்லி அணியின் பந்துவீச்சை நொறுக்கி எடுத்து விட்டனர்  சிக்ஸர்களுக்கும், பவுண்டரிகளுக்கும் பந்துகள் பறந்தன. அதிலும் முகமது ஷமி வீசிய இரு ஓவர்களில் தலா 3 சிக்ஸர்கள் என 6 சிக்ஸர்கள் பறக்கவிட்டார் ரஸல். 30 பந்துகளில் ராணா அரைசதம் அடித்தார்.

இவருக்கு போட்டியாக பேட் செய்த ரஸல், 12 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 6 சிக்ஸர்கள் அடங்கும். ராணா 59ரன்களில் வெளியேறினார். இதில் 4 சிக்ஸர்கள், 5பவுண்டரிகள் அடங்கும்.

கடைசி வரிசையில் இறங்கிய சுப்மான் கில் 6 ரன்களும், குரன் 2 ரன்களிலும்,சாவ்லா டக்அவுட்டிலும் ஆட்டமிழந்தனர். 19வயதுக்குட்பட்டோருக்கான அணியில் சிறப்பாகச் செயல்பட்டவர் சுப்மான் கில், எதற்காக அவரை 7-வது வீரராக கார்த்திக் களமிறக்குகினார் என்பது இந்த போட்டியிலும் தெரியவில்லை.

20ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா அணி 200 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணித் தரப்பில் டிவேசியா 3 விக்கெட்டுகளையும், மோரிஸ், போல்ட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

201 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்கை துரத்தியது டெல்லி டேர்டெவில்ஸ் அணி. மிகப்பெரிய இலக்கை நினைத்து திகைத்துவிட்டார்களோ எனத் தெரியவில்லை, தொடக்கத்தில் இருந்தே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தனர்.

 அந்த அணியில் ரிஸ்பா பந்த் 43 ரன்கள், மேக்ஸ்வெல் 47ரன்கள் ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்றவீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் பேட்டிங் மறந்ததுபோல் பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்தனர். டெல்லி அணிக்கும் தங்களுக்கும் தொடர்பே இல்லாதது போன்று பேட் செய்தனர். விக்கெட்டுகளுக்கு இடையே நிலைத்து ஆடி ஸ்கோர் செய்யாமல் விரைவா வெளியேறினார்கள்

கேப்டன் கம்பீர் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி ஒருபோட்டியில் கூட நிலைத்து ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வீரர் விஜய் சங்கரும் கடந்த 3 போட்டிகளில் களமிறங்கி பேட்டிங்கில் ஏமாற்றத்தையே அளித்துள்ளார்.

97 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த டெல்லி அணி, அடுத்த 32 ரன்களில் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் பரிதாபமாக இழந்தது.

ஒட்டுமொத்தத்தில் 14.2 ஓவர்களில் 129 ரன்களுக்கு டெல்லி அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கொல்கத்தா அணித் தரப்பில் நரேன், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.

 

 

 

 

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


[X] Close