[X] Close
 

சன்ரைசர்ஸ்க்கு 3-வது வெற்றி: கொல்கத்தா ஏமாற்றம்: அன்று பந்துவீச்சு, இன்று பேட்டிங்


sunrisers-bowling-sets-up-third-consecutive-win

அரைசதம் அடித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கேன் வில்லியம்சன்.

  • போத்திராஜ்
  • Posted: 15 Apr, 2018 01:01 am
  • அ+ அ-

கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த 11-வது ஐபில் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 200 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்தும் கொல்கத்தா அணியின் பந்துவீச்சு மட்டமாகஇருந்ததால், தோற்றது. இன்று வீரர்களின் பொறுப்பற்ற, திராணியற்ற பேட்டிங்கால் வலுவான ஸ்கோரை எட்டமுடியாமல் போனது. இது தோல்விக்கு முக்கியக்காரணமாக அமைந்தது. ஒருவேளை இன்னும் 20 ரன்கள் கூடுதலாக சேர்த்திருந்தால், ஆட்டம் கொல்கத்தா பக்கம் திரும்பியிருக்கும்.

அதேசமயம், 3 லீக் ஆட்டங்களில் இதுவரை விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.

டாஸ்வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஆட்டத்தைத் தொங்கியது. இந்த முறை நரேனுக்கு பதிலாக கிறிஸ் லின்னுடன் சேர்ந்து உத்தப்பா களமிறங்கினார்.

புவனேஷ் குமாரின் முதல் ஓவரிலேயே உத்தப்பாவுக்கு படம் காட்டினார். பந்து நன்றாக ஸ்விங் ஆனதால், உத்தப்பாவால் நினைத்த ஷாட்களை அடித்து ஆடமுடியவில்லை. இதனால், முதல் ஓவரில் ஒருரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

ஸ்டான்லேக் வீசிய 2-வது ஓவரில் வழக்கம் போல் கிறிஸ் லின் 2 பவுண்டரிகள் அடித்து ஸ்கோரை வேகப்படுத்தினார். ஆனால், 2-வது ஓவரில் 4-வது பந்தில் கைக்கு கிடைத்த கேட்சை வாய்ப்பை ஸ்டான்லேக் தவறவிட்டார். இதனால், கிறிஸ் லின் ஒரு வாழ்வு பெற்றார்.

3-வது ஓவரில் புவனேஷ் குமாரின் ஸ்விங் பந்துவீச்சுக்கு பயந்து பேட் செய்த உத்தப்பா 3 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராணா, கிறிஸ் லின்னுடன் சேர்ந்து ஓரளவுக்கு அடித்து ஆடினார். அவ்வப்போது பவுண்டரிகளும், சிக்ஸர்களும் அடித்து ரன் வேகத்தை அதிகப்படுத்தினர்.

7-வது ஓவர் முடிவில் மழை குறுக்கிட்டது. ஏறக்குறைய ஒருமணிநேர இடைவெளிக்கு பின் மீ்ண்டும் ஆட்டம் தொடங்கியது. 8-வது ஓவரில் ஸ்டான்லேக் வீசிய பந்தில் பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து 18 ரன்கள் சேர்த்தநிலையில் ராணா பெவிலியன் திரும்பினார்.

கடந்தஇரு போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி பிளந்து கட்டிய நரேன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். ஆனால்,  நரேன் 9 ரன்களில் ஹசன் சுழலில் விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றம் அளித்தார்.

நிலைத்து பேட் செய்து வந்த கிறிஸ்லின் ஒரு ரன்னில் அரைசதத்தை தவறவிட்டு சகில்அல் ஹசன் சுழலில் வீழ்ந்தார். கிறிஸ் லின் 49 ரன்கள்(34 பந்துகள், ஒருசிக்ஸர்,7பவுண்டரி)சேர்த்தார். அடுத்ததாக ரஸல் களமிறங்கினார்.

சென்னை அணிக்கு எதிராக சிக்ஸர் மழை பொழிந்த ரஸல் இந்த போட்டியில் ஏமாற்றம் அளித்தார். ஸ்டான்லேக் பந்துவீச்சில் 9 ரன்களில் ரஸல் ஆட்டமிழந்தார்.

 19வயதுக்குட்பட்டோருக்கான அணி உலகக்கோப்பையில் முக்கிய வீரராக இருந்த சுப்மான் கில் இப்போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டார். ஆனால்,புவனேஷ் ஸ்விங்கில் திணறிய சுப்மான் கில் 3 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 79 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை  இழந்திருந்த கொல்கத்தா 96 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.

பொறுமை இழந்த தினேஷ் கார்த்திக்கும் 29 ரன்களில் புவனேஷ் குமார் வேகத்தில் ஆட்டமிழந்தார். சிவம் மவி 7 ரன்களில் வெளியேறினார். ஜான்சன் 4 ரன்களுடன் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அணியில் கிறிஸ் லின், கார்த்திக் ஓரளவுக்கு சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

20ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு138 ரன்கள் சேர்த்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணித் தரப்பில் புவனேஷ் குமார் 3விக்கெட்டுகளையும், ஸ்டான்லேக், ஹசன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

139 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்கியது. பேட்டிங்கில் சொதப்பினாலும் பந்துவீச்சில் சுனில் நரேன் முத்திரை பதித்துவிட்டார். சன்ரைசர்ஸ் அணியின் முக்கிய விக்கெட்டுகளை விரைவாக கழற்றி அந்த அணிக்கு நெருக்கடி அளித்தார்.

ஷிகார் தவாண், சாஹா ஆட்டத்தைத் தொடங்கினார்கள். மிட்ஷெல் ஜான்சன் வீசிய முதல் ஓவரில் பவுண்டரி அடித்து விர்திமான் சஹா சவால்விட்டார். ரஸல் வீசிய 2வது ஓவரில் தவாணும், சாஹாவும் ஆளுக்கொரு பவுண்டரி அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார்கள்.

ஜான்சன் வீசிய 3-வது ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்து சாஹா மிரட்டினார். இவர்களைக் கட்டுப்படுத்த நரேன் பந்துவீச அழைக்கப்பட்டார். நரேன் வீசிய 4-வது ஓவரில் கிளீன் போல்டாகி சாஹா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் வில்லியம்சன் களமிறங்கினார்.

தவாண், வில்லியம்சன் கூட்டணியும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. ஒரு பவுண்டரி மட்டும் அடித்த தவாண் 7 ரன்களில் நரேன் சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தார்.  தவாண் விக்கெட் இழந்தது சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.

அடுத்து வந்த மணீஷ் பாண்டேவும் 4 ரன்கள் சேர்த்த நிலையில் குல்தீப் யாதவ் சுழலில் வெளியேறினார்.

கேப்டன் வில்லியம்சுடன் ஜோடி சேர்ந்தார் சஹிப் அல்ஹசன். இருவரும் நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தனர். இதனால், ரன்ரேட் சீராகச் சென்றது. இருவரையும் பிரிக்க பியூஸ் சாவ்லா வரவழைக்கப்பட்டார்.

சாவ்லா வந்ததற்கு பலன் கிடைத்தது. 27 ரன்கள் சேர்த்திருந்த ஹசனை கிளீ்ன் போல்டாக்கி பெவிலியன் அனுப்பினார்  சாவ்லா. அடுத்ததாக தீபக் ஹூடா களமிறங்கினார்.  ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தபோதிலும் வில்லியம்சன் நிதானமாக பேட் செய்து அரைசதம் அடித்தார். ஆனால் அதன்பின் நீண்ட நேரம் நிலைக்கவில்லை வில்லியம்சன்.

ஜான்சன் வீசிய 18 ஓவரில் ரஸலிடம் கேட்ச் கொடுத்து வில்லியம்சன் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து யூசுப் பதான் வந்து ஒரு பவுண்டரி அடித்தார்.

கடைசி இரு ஓவர்களுக்கு 13 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. ரஸல் வீசிய 19-வது ஓவரில் ஒருரன் எடுத்த ஹூடா பதானிடம் கொடுத்தார். டி20 போட்டிகளில் மேட்ச் பினிஷர் எனச் சொல்லப்படும் யூசுப்பதான் கச்சிதமாக பணியைச் செய்தார். இரு சிங்கள் ரன்கள் எடுத்தது போக, ரஸல் ஓவரில் ஒருபவுண்டரி, சிக்ஸர் அடித்து பரபரப்புக்கு யூசுப்பதான் முற்றுள்ளிவைத்தார்.

19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது. யூசுப்பதான் 17 ரன்களிலும், தீபக் ஹூடா 5 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஆட்டநாயகன் விருதை ஸ்டான்லேக் வென்றார். 

 

 

 

 

தொடர்புடைய செய்திகள்

 
 
Kalathin Vasanai - Kindle Edition


[X] Close