விளையாட்டு வீரர்களுக்கு சென்னை ஐஐடி பிடெக் படிப்பில் 2% இடஒதுக்கீடு: முதல்முறையாக இந்த ஆண்டு அறிமுகம் 


சென்னை: சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பிடெக் படிப்பில் 2 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் புதிய நடைமுறையை சென்னை ஐஐடி இந்த ஆண்டு முதல்முறையாக அறிமுகப்படுத்துகிறது.

இதுதொடர்பாக ஐஐடி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: விளையாட்டு வீரர்களுக்கு சேர்க்கை வழங்கும் புதிய நடைமுறை 2024-2025-ம் கல்வி ஆண்டு முதல் தொடங்கப்படுகிறது. அதன்படி ஐஐடியில் வழங்கப்படும் பிடெக் படிப்பில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தலா 2 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்படும். அதில் ஒரு இடம் பெண்களுக்குரியது.

இந்தியாவிலேயே விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் முறை அறிமுகப்படுத்தியுள்ள முதல் ஐஐடி சென்னை ஐஐடி தான். ஜெஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம். விளையாட்டு வீரர் மாணவர் சேர்க்கை, 'ஜோஸா' எனப்படும் இணை இடங்கள் ஒதுக்கீடு ஆணையத்தின் இணையதளம் வாயிலாக இல்லாமல் இதற்காக பிரத்யேகமாக தொடங்கப்பட்டுள்ள தனி இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்படும்.

விளையாட்டுப் பிரிவு இடங்களுக்காக தனி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு அதன்படி மாணவர் சேர்க்கை நடைபெறும். ஐஐடி விளையாட்டு வீரர் மாணவர் சேர்க்கை நடைமுறை தொடர்பான கூடுதல் விவரங்களை https://jeeadv.iitm.ac.in/sea என்ற இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.