[X] Close

அன்று ஆஸி. க்கு எதிராக லாரா... இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக குசல் பெரேரா 153 நாட் அவுட்: திகைப்பூட்டும் இன்னிங்ஸில் இலங்கை வரலாற்றுப் புகழ்பெற்ற வெற்றி


kusal-perera-153-not-out-stunning-win-for-srilanka-against-south-africa-in-durban

  • முத்துக்குமார்
  • Posted: 16 Feb, 2019 20:34 pm
  • அ+ அ-

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தன் சொந்தமண்ணில் பிரையன் லாரா 153 நாட் அவுட் என்று ரன்கள் எடுத்து 300 ரன்களுக்கும் மேலான இலக்கை விரட்டி அபாரமான டெஸ்ட் வெற்றியை மே.இ.தீவுகளுக்கு பெற்றுத் தந்ததைப் போல் இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 153 நாட் அவுட் என்று ரன்கள் எடுத்து 304/9 என்று வெற்றி இலக்கை பரபரப்பான டெஸ்ட் போட்டியில் விரட்டி வரலாற்றுப் புகழ்பெற்ற வெற்றியை இலங்கைக்கு தேடித்தந்தார்.

அன்று லாரா செய்தது தன் சொந்த மண்ணில், ஆனால் இன்று குசல் பெரேரா செய்தது அன்னிய மண்ணில், ஆக்ரோஷமும், வீரியமும் நிறைந்த தென் ஆப்பிரிக்க பந்து வீச்சுக்கு எதிராக அவர்கள் மண்ணில் சாதித்த மிகப்புகழ் பெற்ற வெற்றி இதுவாகும். லாரா, கார்ட்னி வால்ஷுடன் கூட்டணி அமைத்து வென்றாலும் குசல் பெரேரா-பெர்ர்னாண்டோ போல் 78 ரன்கள் நீண்ட கூட்டணி அல்ல அது, ஆகவே இந்த குசல் பெரேரா இன்னிங்ஸ் ஒருவிதத்தில் காவிய இன்னிங்ஸ்தான்.

தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி போய் தண்ணி குடித்த நிலையில் ‘அண்டர் டாக்’ என்று கருதப்படும் இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவில் முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்று சாதித்துள்ளது.

304 ரன்கள் இலக்கை விரட்டும் போது குசல் பெரேரா ஒரு முனையில் நிற்க இலங்கை அணி 226/9 என்று இருந்தது, ஆனால் விஷ்வா பெர்னாண்டோ (6) என்ற பவுலர் மிகத்தைரியமாகத் தோள்கொடுக்க 78 ரன்கள் என்ற 10வது விக்கெட் கூட்டணி சாதனை முறியடிப்பு  வெற்றிக்கூட்டணி அமைக்க வரலாறு காணாத வெற்றியைப் பெற்ற இலங்கை முதல் முறையாக தென் ஆப்பிரிக்கத் தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா தொடரை வெல்ல வாய்ப்பில்லை சமன் தான் செய்ய முடியும்.  ஏனெனில் இது 2 டெஸ்ட் கொண்ட தொடர்.  விஷ்வா பெர்னாண்டோ 6 ரன்களையே எடுத்தாலும் 2 இன்னிங்ஸ்களிலும் தன் பந்து வீச்சில் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த வரலாற்று வெற்றியில் பங்களிப்பு செய்துள்ளார்.

முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 235 ரன்கள் எடுக்க இலங்கை அணி 191 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 259 ரன்கள் எடுக்க இலங்கை அணிக்கு வெற்றி பெற 304 ரன்கள் தேவை என்ற நிலையில் 226/9 என்ற நிலையிலிருந்து 304 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

குசல் பெரேரா 200 பந்துகளில் 12 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 153 ரன்களை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2-0 என்று உதை வாங்கிய இலங்கை அணியை தென் ஆப்பிரிக்கா ஒருவேளை ஊதிவிடலாம் என்ற அதீத நம்பிக்கையில் ஆடிவிட்டதோ என்னவோ என்ற ஐயம் எழுகிறது.

தென் ஆப்பிரிக்கா 2வது புதிய பந்தை எடுக்கும் போது இலங்கை அனீ 263/9 என்று இருந்தது. ஆனாலும் பெரேரா பேட் செய்த போது அனைத்து பீல்டர்களையும் பவுண்டரியில் நிற்க வைத்து தவறிழைத்தார் கேப்டன் டுபிளெசிஸ். பெரேரா, டேல் ஸ்டெய்னையும், ரபாடாவின் வேகத்தையும் பொருட்படுத்தாமல் சிக்சர்களுக்குத் தூக்கினார். கடைசியில் ரபாடாவை தேர்ட்மேனில் அடித்து பவுண்டரியுடம் வெற்றியைப் பெற்றார். கிங்ஸ்மீட் டர்பனில் 3வது வெற்றிகரமான விரட்டலாகும் இது. 

வெற்றி பெற 13 ரன்கள் தேவை என்ற போது டேல் ஸ்டெய்ன் பந்தை மிட்விக்கெட் மேல் தூக்கி சிக்சர் அடித்தார் பெரேரா, பிறகுதான் ரபாடாவை (1/97) பவுண்டரி விளாசினார். 

இன்று 12 ரன்களுடன் குசல் பெரேராவும் 28 ரன்களுடன் ஒஷாதா பெர்னாண்டோவும் தொடங்க 83/3 என்ற நிலையிலிருந்து ஸ்கோரை 110க்குக் கொண்டு சென்றனர். அப்போது டேல் ஸ்டெய்ன் பவுலிங்கில் பெர்னாண்டோ (37) 2வது ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். இதே ஓவரில் நிரோஷன் டிக்வெல்லா அருமையான டேல் ஸ்டெய்ன் கேட்சுக்கு டக் அவுட் ஆனார். வெர்னன் பிலாண்டர் இல்லாத பவுலிங்கை பெரேராவும் தனஞ்ஜய டிசில்வாவும் (48) நோகடித்து ஸ்கோரை 110/5 லிருந்து 206 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். 

தனஞ்ஜயாவை கேசவ் மஹராஜ் எல்.பி.ஆக்கினார். அடுத்த பந்தே சுரங்க லக்மல் ஸ்லிப்பில் ஆட்டமிழந்தார்.  பிறகு லஷித் அம்புல்தேனியா (4) டுவான் ஆலிவியர் (2/35) பவுன்சரில் வெளியேறினார்.  பிறகு கசுன் ரஜிதாவை மஹராஜ் எல்.பி. செய்ய தென் ஆப்பிரிக்கா 226/9 என்று ஆனது. 

விஸ்வா பெர்னாண்டோ கடைசி நம்பிக்கையாக குசல் பெரேராவுடன் இணையும் போது அவர் 86 ரன்களில் இருந்தார். பெர்னாண்டொ 22 பந்துகள் டொக் வைத்து பிறகுதான் முதல் ரன்னை எடுத்தார், குசல் பெரேரா, மஹராஜை ஒரு சிக்ஸ் விளாசி 90 ரன்களுக்குள் நுழைந்தார். பிறகு ஒரு ரிவர்ஸ் ஸ்வீப் அடித்து 99 ரன்களுக்கு வந்தார் குசல். பிறகு ஒரு அருமையான சிங்கிள் மூலம் சதம் அடித்தார் குசல் பெரேரா. அந்தத் தருணத்திலும் இலங்கை வெற்றிக்கு 64 ரன்கள் தேவைப்பட்டது.  பிறகு ஆலிவியரை பிரமாதமான ஒரு அரக்க ஷாட்டில் சிக்ஸ் விளாசினார் குசல் பெரேரா. விஷ்வா ஸ்ட்ரைக்குக்கு வரும்போது தென் ஆப்பிரிக்கா 2வது புதிய பந்தை எடுத்தது. ஆனால் ஸ்டெய்ன் அவரை வீழ்த்த முடியவில்லை. 

தென் ஆப்பிரிக்கா தள்ளித்தள்ளி பீல்டிங்கை நிறுத்தினாலும் ஸ்டெய்னை ஒரு அரக்க சிக்சரும், பிறகு ரபாடாவை ஒரு டாப் எட்ஜ் சிக்சரும் விளாசினார் குசல் பெரேரா. 5வது சிக்சரை ஸ்டெய்னை அவர் அடித்த போது வெற்றிக்கு 7 ரன்களே தேவைப்பட்டது. குசல் பெரேரா தன் பதற்றங்களை அருமையாகக் கையாண்டு தேர்ட் மேன் திசையில் அடித்து வெற்றி தேடித் தந்தார். இதற்கு முன்னர் கொழும்புவில் இதே போன்று 352 ரன்கள் இலக்கை 1 விக்கெட்டில் வென்றது இலங்கை. இப்போது மீண்டும் ஒரு விக்கெட்டில் வெற்றி.  ஆட்ட நாயகனும் இவரே.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close