[X] Close

உலகக்கோப்பையுடன் தோனி ஓய்வு பெறுவாரா? அணித்தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் பேட்டி


dhoni-worldcup-2019-retirement-msk-prasad-cricket-team-india

  • முத்துக்குமார்
  • Posted: 11 Feb, 2019 17:22 pm
  • அ+ அ-

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நிச்சயம் தோனியின் இடம் உறுதியாகிவிட்டதையடுத்து அவரது தற்போதைய பேட்டிங், அணியில் அவரது இடம் குறித்த கேள்விகள், ஐயங்கள் ஆகியவை குறித்து அணித்தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விரிவாகப் பேசியுள்ளார்.

ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்திற்கு எம்.எஸ்.கே. பிரசாத் அளித்த பிரத்யேக நேர்காணலில் அவர் பல்வேறு விஷயங்களைப் பேசியுள்ளார். அதில் குறிப்பாக இந்திய அணியில் நுழைய ஒரு வீரருக்கு என்ன குணாம்சங்கள் தேவை என்ற கேள்விக்கு அவர் அச்சமற்ற தன்மையை முதன்மையாகக் குறிப்பிட்டார். 

இது தவிர முதிர்ச்சி, சமச்சீரான ஒரு மனநிலையுடைய வீரர்களாக இருக்க வேண்டும் என்று கூறிய பிரசாத், “2011 உலகக்கோப்பையில் இளம் மற்றும் மூத்த வீரர்களின் கலவை கனகச்சிதமாக அமைந்தது. அப்போது ஸ்ரீசாந்த் இருந்தார், அப்போது அவர் இளம் வீரர், சச்சின், சேவாக், அனுபவ வீரர்களாக இருந்தனர். 1983 உலகக்கோப்பையைல் வெல்லும் போது கூட நல்ல அனுபவமும் இளமையுமான கலப்பு இருந்தது” என்றார்.

அந்த வகையில் தோனி தற்போது அணிக்கு எப்படி முக்கியம் என்று பேசிய எம்.எஸ்.கே.பிரசாத், “கடந்த இரண்டு தொடர்களில், ஆஸ்திரேலியா, மற்றும் நியூஸிலாந்தில் மாஹி (தோனி) ஆடிய விதம் அவரிடமிருந்து தெளிவான செய்தியை அறிவிப்பது போல் இருந்தது.  அவர் தன் பாணி ஆட்டத்துக்குத் திரும்பியுள்ளார், அதாவது இயல்பான தன் ஆட்டத்துக்குத் தான் திரும்பியதை அவர் அறிவுறுத்தினார். இந்த தோனியைத்தான் நாம் அறிவோம். 

அவர் தனது முந்தைய அச்சமற்ற அதிரடியைக் காட்டினாலே போதும் நாம் மகிழ்ச்சியடைவோம். அவரிடமுள்ள ஆக்ரோஷ சக்தியை அவர் வெளிப்படுத்தினாலே போதும். சில வேளைகளில் ஆட்டத்தின் கால நேரம் போதாமையினால் அவர் ரன்கள் குறைவாக எடுக்கிறார். இப்போது தொடர்ந்து அவர் ஆடும்போது அவர் டச்சை நாம் பார்க்கிறோம். 

முக்கியமாக உலகக்கோப்பைக்கு முன் அவர் ஐபிஎல் தொடரில் ஆடுகிறார். அவர் அதி தீவிரமான ஒரு 14-16 ஐபிஎல் போட்டிகளில் ஆடுகிறார். இது அவர் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் அவர் வென்றெடுத்த பார்மின் விரிவாக்கமாக இருக்கும். (அப்போ! அவர் சர்வதேச கிரிக்கெட்டை ஐபிஎல் தொடருக்கான பயிற்சி ஆட்டமாகப் பார்க்கிறாரோ?) அவர் பேட்டிங்கில் எனக்கு முழு திருப்தி உள்ளது” என்றார் எம்.எஸ்.கே. பிரசாத்.

இவரது இந்தப் பதிலையடுத்து கிரிக்  இன்போ கேட்கும்போது,  ‘லார்ட்ஸ் ஒருநாள் போட்டியில் தோனி மந்தமாக ஆடிய போது ரசிகர்கள் அவரைக் கேலி செய்தனர். அதற்கு பிற்பாடு விளக்கமளித்த விராட் கோலி, ஆட்டத்தை தோனி கடைசி வரை எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது என்று விளக்கமளித்தார். தோனியின் பேட்டிங் அப்பொது சற்றே திணறலாக அமைந்தது, அப்போது அணியின் தோனியின் இடம் குறித்த கவலைகள் இருந்ததா?’ என்று ஒரு கேள்வியைப் போட்டார்.

இதற்குப் பதில் அளித்த பிரசாத், “தோனியைப் பொறுத்தவரை 2 அம்சங்கள் முக்கியம், ஒன்று அவரது விக்கெட் கீப்பிங், இன்னொன்று அவரது பேட்டிங். அவரது விக்கெட் கீப்பிங் குறித்த் எந்த வித ஐயங்களும் எங்களுக்கு இல்லை. பேட்டிங்கைப்பொறுத்தவரை அவரது பார்ம்  குறித்து கவலையடைந்தோம். ஆனால் அதே வேளையில் அவர் அதிகம் ஆடினால் அவர் பார்முக்கு வருவார் என்று நம்பினோம் (இதே அளவுகோல் மற்ற வீரர்களுக்கு உண்டா?). எந்த ஒரு வீரரின் கரியரிலும் இது போன்ற ஏற்றத்தாழ்வுகள் இருக்கவே செய்யும். 

விராட் கோலி கூறியது போல் தோனி மீதான் எதிர்பார்ப்புகள் அதிகம். நாம் எப்போதும் இளம் தோனியைக் கற்பனை செய்து அடித்து நொறுக்குபவர் என்று பார்க்கிறோம். இப்போது அவர் அப்படி ஆடுவதில்லை, அவரது அனிச்சைத் தன்மை சரிவு கண்டிருக்கலாம் என்று சிலர் கூறினர். ஆனால் சமீப தொடரில் அவர் ஆடியது எனக்கு திருப்தியளிக்கிறது.  லெஜண்ட் அந்தஸ்தில் இருக்கும் வீரருக்கு நாம் அறிவுறுத்த வேண்டியதில்லை. 

அவர் இப்போதும் மேட்ச் வின்னர்தான். உலகக்கோப்பையில் அவர்தான் மிக முக்கியமான வீரராக இருப்பார். விக்கெட் கீப்பிங்காகட்டும்., கோலிக்கு ஆலோசனை வழங்குவதிலாகட்டும், களத்தில் இளம் வீரர்களை வழிநடத்துவதிலாகட்டும் அவர் உலகக்கோப்பையில் முக்கியமான வீரர். 

உலகக்கோப்பைதான் அவர் இந்தியாவுக்காக கடைசியாக ஆடும் தொடரா என்று கேட்டால், நாங்கள் அது குறித்து இன்னும் விவாதிக்கவில்லை, சிந்திக்கவில்லை என்றுதான் கூற முடியும்.  உ.கோப்பை போன்ற பெரிய தொடருக்கு முன்னால் இதை இழுத்து கவனச்சிதறல் ஏற்படுத்துவது நல்லதல்ல. ஏனெனில் உலகக்கோப்பைக்காக தயார் செய்து கொள்வதில் அனைத்து ஆற்றல்களும் திருப்பி விடப்பட்டுள்ளன” இவ்வாறு கூறினார் எம்.எஸ்.கே. பிரசாத்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close