[X] Close

இந்திய பேட்டிங் மேம்படுமா? தோனி வருகிறார்... - இன்னொரு அடி கொடுக்கும் முனைப்பில் நியூஸிலாந்து


dhoni-india-vs-newzealand-cricket-5th-odi-welligton

  • முத்துக்குமார்
  • Posted: 02 Feb, 2019 19:01 pm
  • அ+ அ-

வெலிங்டனில் ஞாயிறன்று  நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தங்கள் பேட்டிங்கை மேம்படுத்துமா என்ற கேள்வியுடன் களமிறங்குகிறது. நியூஸிலான்ந்து அணி  ‘டாப்’ இந்திய அணிக்கு இன்னொரு அடி கொடுக்கத் தயாராகி வருகிறது.

அன்று செடான் பார்க் ஹேமில்டனில் ஊடுருவும் ஸ்விங் பவுலிங் மூலம் இந்திய பேட்டிங் வரிசை என்ற துணியைக் கிழித்தது நியூஸிலாந்து பந்து வீச்சு. நாளை தோனி ஆடுவார் என்று பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறியுள்ளார். இதனால் தினேஷ் கார்த்திக் உட்கார வைக்கப்படலாம் என்று  ‘பட்சி’ கூறுகிறது. 

இவரைக் கொண்டு தொடரை 4-1 என்று முடிக்க ரோஹித் படை நினைத்திருக்கலாம், ஆனால் ஸ்விங், எழுச்சி பிட்ச் போட்டால் இந்திய அணி என்ன செய்யும் என்ற கேள்வியே எஞ்சுகிறது. கடந்த போட்டியில் தோனி இருந்திருந்தாலும் பெரிதாக ஒன்றும் செய்திருக்க முடியாது, இன்னும் கொஞ்சம் டாட் பால்கள், இன்னும் கொஞ்சம் கூடுதல் ரன் எடுத்திருப்போம், சராசரி ஸ்கோருக்குக் கூட செல்ல வாய்ப்பில்லை. அவ்வாறு ஆட தோனி- கபில்தேவ் அல்ல.

இங்கும் நாம் முதலிலேயே கூறியது போல் காற்று நன்றாக வீசும், இதில் ட்ரெண்ட் போல்ட் மீண்டும் தண்ணி காட்டுவார் என்று எதிர்பார்க்கலாம், நியூஸிலாந்து அணியில் மார்டின் கப்தில் காயம் அடைந்திருப்பது அந்த அணிக்கு ஓரு மறைமுக ஆசீர்வாதமே. 

ஹேமில்டன் போட்டி கேதார் ஜாதவ், அம்பாத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், ஷிகர் தவண் போன்றோருக்கு கண் திறப்புப் போட்டியாகும்.  அடுத்து டி20 தொடர் இருக்கிறது, உலகக்கோப்பை வருகிறது. மேலும் இந்தத் தொடருக்குப் பிறகு ஆஸி.க்கு எதிராக இந்தியாவில் ஒருநாள் தொடர், ஐபிஎல், பிறகு உலகக்கோப்பை. உலகக்கோப்பைக்குச் செல்லும் முன் இந்திய டம்மி  பிட்ச்களில் ஆடுகிறார்கள். 

ரோஹித் சர்மா மிக மோசமான பேட்டிங் என்று ஹாமில்டன் போட்டியை வர்ணித்தார், மேலும் அதனை 5வது போட்டியில் ஷிகர் தவணுடன் இன்னொரு அதிரடி கூட்டணி அமைத்து முறியடிப்போம் என்று கூறியுள்ளார், இவர் இப்படி நினைக்கிறார், பிட்சும் போல்ட் விளைவும் என்ன ஏற்படுத்தும் என்று தெரியவில்லை. அன்று பேட்டிங்கில் கொஞ்சமாவது தைரியம் காட்டி ஆடியவர் ஹர்திக் பாண்டியாதான், அவரை தோனிக்கு முன்பாக களமிறக்கிப் பார்க்க வேண்டும். இந்திய அணியில் எளிதான வெற்றி போதை வீரர்களுக்கு ஒருவித மயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, இதனால் திடீரென ஒரு போட்டியில் கண்டபடி சரிவு ஏற்படுகிறது. ஒருவகையில் முன் கணிக்க முடியாத பாகிஸ்தான் போல்தான் இந்திய அணியும் உள்ளது.  மொகமது ஷமி வருகிறாரா என்று பார்க்க வேண்டும். 

முதலில் இந்திய பேட்ஸ்மென்கள் சுயநலத்தன்மையை விட்டுவிட்டு, தங்கள் இடம் உறுதியான வீரர்கள் ஸ்விங் பந்துகளை ஸ்விங் ஆக விடாமல் அடித்து ஆட வேண்டிய கட்டாயம் உள்ளது. ஒரு நல்ல அதிரடி வீரரை இந்திய அணியில் பார்த்து நீண்டகாலமாகிவிட்டது.

ஷுப்மான் கில்லுக்கு இப்போது வாய்ப்பு கொடுத்தது தவறு, கோலி இடத்தில் மயங்க் அகர்வால்தான் ஆடியிருக்க வேண்டும், அல்லது ஷ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஷுப்மான் கில் ஏகப்பட்ட திறமைகள் கொண்ட வீரர், அவரை இத்தகைய கடும் ஸ்விங் தரையில் இறக்கி அவரது தன்னம்பிக்கையை அழித்து விடக்கூடாது என்பதில் கவனம் அவசியம். 

நியூஸிலாந்து அணி எப்படியும் அணியை மாற்றாது, இன்னொரு அடிகொடுப்பதற்கான உத்வேகமும் ஆவியும் அவர்களிடத்தில் இப்போது கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்க வேண்டும்... தெரியவில்லை... ஏனெனில் அந்த அணியும் எதிரெதிரான இருவிதங்களில் நம்ப முடியாத அணியே.

சில புள்ளிவிவரங்கள்: ராஸ் டெய்லர் 110 ரன்கள் எடுத்தால் 8000 ஒருநாள் போட்டி ரன்களை விரைவில் எடுத்த 8வது பேட்ஸ்மனாகத் திகழ்வார். 

பிட்ச்: நல்ல வெயில் அடிக்கும் மாலை ஆக ஆக காற்று அடிக்கும். நிச்சயம் ஸ்விங் ஆதரவு இருக்கும் என்று கூறுகிறது பிட்ச் அறிக்கை.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close