[X] Close

‘கிரேட் பினிஷர்’: விமர்சனங்களுக்கு தோனி பதிலடி: கோலி 39-வது சதம் :இந்தியா அணி வெற்றி


ms-dhoni-star-as-india-beat-australia-to-level-series-1-1

  • போத்திராஜ்
  • Posted: 15 Jan, 2019 17:51 pm
  • அ+ அ-

 

அடிலெய்ட்,

மீண்டும் மேட்ச் வின்னராக, கிரேட் பினிஷராக மாறிய தோனியின் ஆர்ப்பரிப்பான பேட்டிங், விராட் கோலியின் முத்தாய்ப்பான சதம் ஆகியவற்றால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஓருநாள் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

கடைசி ஓவரில் மிகவும் கூலாக சிக்ஸர் அடித்துத் தான் ஒரு கிரேட் பினிஷர் என்பதை தோனி மீண்டும் நிரூபித்துவிட்டார்.

299 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்கைத் துரத்திய இந்திய அணி 4 பந்துகள் மீதிமிருக்கையில், 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியஅணி.

இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா வெற்றியும் சமநிலையில் இருந்து, தொடரை உயிர்ப்புடன் வைத்துள்ளன.

கடந்த 2018-ம் ஆண்டு தோனிக்கு சிறப்பான ஆண்டாக அமையவில்லை என்பது நிதர்சனம். ஆனால், 2019-ம் ஆண்டை தோனி அமர்க்களமாகத் தொடங்கியுள்ளார். முதல் போட்டியில் அரை சதத்தையும், 2-வது போட்டியில் அரைசதத்தையும் அடித்து அணியை வெற்றி பெறவைத்துள்ளார்.

முதலாவது போட்டியில் அரைசதம் அடிக்க 96 பந்துகளை தோனி எடுத்துக்கொண்டார் என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்தன, தோனியின் பேட்டிங் ரசிகர்களுக்கே அலுப்பாக அமைந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், அனைத்து விமர்சனங்களையும் தோனி இன்று தனது பேட்டிங்கால் நொறுக்கிவிட்டார்.

மீண்டும் தனது இயல்பான பேட்டிங் ஃபார்முக்கு வந்த தோனி இரு அமர்க்களமான சிக்ஸர்களை விளாசினார். பந்துகளை வீணாக்காமல் விளையாடிய தோனி ஒற்றை, இரட்டை ரன்களைச் சேர்த்து அணியை பொறுப்புடன் வழிநடத்தினார்.

கோலி ஆட்டமிழந்தபின் அணியை வழிநடத்தி வெற்றிக்கு அழைத்துச் செல்ல வேண்டியதை உணர்ந்து தோனி தனது அனுபவம், நேர்த்தியான பேட்டிங் மூலம் அணிக்கு வெற்றிதேடிக் கொடுத்து தான் கிரேட் பினிஷர் என்பதை நிரூபித்துவிட்டார்.

அதேசமயம், முதல் போட்டியில் ஏமாற்றிய நிலையில், 2-வது போட்டியில் சிறப்பாக ஆடிய கோலி தனது ஒருநாள் அரங்கில் 39-வது சதத்தை நிறைவு செய்தார். கோலியின் பொறுப்பான பேட்டிங், அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகும். ஆட்டநாயகன் விருதைக் கோலி பெற்றார்.

டாஸ்வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் சேர்த்தது.

ஆரோன் பிஞ்ச், அலெக்ஸ் காரே ஆட்டத்தைத் தொடங்கினார்கள். புவனேஷ்குமார் வீசிய 7-வது ஓவரின் கடைசிப் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். பிஞ்ச் 6 ரன்னில் நடையைக் கட்டினார்.

அடுத்த ஓவரை ஷமி வீசினார். ஷமி பந்தை பவுன்ஸராக வீசிய அதை ஹூக் ஷாட் அடிக்க கரே முயன்றார். ஆனால், பந்து ஷிகர் தவணின் கைகளில் தஞ்சமடைந்தது. ஆஸி. 2-வது விக்கெட்டை இழந்தது. காரே 18 ரன்களில் நடையைக் கட்டினார்.

3-வது விக்கெட்டுக்கு கவாஜா, மார்ஷ் ஓரளவுக்கு நிலைத்து ஆடிவந்தனர். 19-வது ஓவரில் கவாஜாவை ‘டைரைட்ஹிட்’ முறையில் ஜடேஜா மூலம் ரன் அவுட் செய்தார். கவாஜா 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஜடேஜா வீசிய 28-வது ஓவரில் தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஹேண்ட்ஸ்கம்ப் 20 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஷமி வீசிய 37-வது ஓவரில் தொடர்ந்து இரு பவுண்டரிகள் அடித்த ஸ்டோனிஸ் 3-வது பவுண்டரி அடிக்க முற்பட்டபோது, தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஸ்டோனிஸ் 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.

6-வது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல் களமிறங்கி, மார்ஷுடன் இணைந்தார். இருவரின் அதிரடி ஆட்டத்தால் ஆட்டத்தின் போக்கே மாறியது. நிதானமாகத் தொடங்கிய மேக்ஸ்வெல் நேரம் செல்ல செல்ல அதிரடிக்கு மாறினார்.

புவனேஷ்குமார் வீசிய 48-வது ஓவரில் இரு விக்கெட்டுகள் வீழ்ந்தன. மேக்ஸ்வெல் டீப் லாங்க்ஆப் திசையில் தினேஷ் கார்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 37 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகள் உள்ளிட்ட 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அடுத்த இரு பந்துகளில் மார்ஷ் லாங்ஆப் திசையில் அடித்த பந்து ஜடேஜாவிடம் கேட்ச் ஆனது. 123 பந்துகளில் 131ரன்கள் சேர்த்த மார்ஷ் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 11 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து வந்த ரிச்சர்ட்ஸன் 2 ரன்னில் ஷமி பந்துவீச்சிலும், சிடில் டக்அவுட்டில் புவனேஷ் வேகத்திலும் வெளியேறினார்கள்.

இந்தியத் தரப்பில் புவனேஷ் குமார் 4 விக்கெட்டுகளையும், ஷமி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

299 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடின இலக்குடன் தவண், ரோஹித் சர்மா களமிறங்கினார்கள். அதிரடியாக ஆடத் தொடங்கிய தவண் அவ்வப்போது பவுண்டரிகள்விளாசி ஸ்கோரை உயர்த்தினார்.

பெஹரன்டார்ப் வீசிய 8-வது ஓவரில் தவண் மிட்ஆப் திசையில் அடிக்க அது கவாஜாவிடம் கேட்சானது. தவண் 5 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் கோலி, ரோஹித்சர்மாவுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர்.

அவ்வப்போது ரோஹித், கோலி பவுண்டரிகளையும், சிக்ஸர்களும் விளாசினர். பீட்டர் சிடில் வீசிய 14-வது ஓவரில் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடித்து ரன் வேகத்தை அதிகப்படுத்தினார்.

ஸ்டோனிஸ் வீசிய 18-வது ஓவரில் ரோஹித் சர்மா 43 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடங்கும். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 54 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து வந்த ராயுடு, கோலியுடன் சேர்ந்தார். நிதானமாக ஆடிய கோலி, 66 பந்துகளில்அரைசதம் அடித்தார். நீண்டநேரம் நிலைக்காத ராயுடு 24 ரன்களில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 59 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

4-வது விக்கெட்டுக்கு தோனியும், கோலியும் சேர்ந்து அணியை பொறுப்பாக வழிநடத்தினார்கள். பெஹரன்டார்ப் வீசிய 35-வது ஓவரில் கோலி ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாசினார். அதன்பின் ஓவருக்கு ஒருபவுண்டரியை கோலி விளாசினார். கோலி அதிரடியாக பேட் செய்த தோனி நிதானம் காட்டினார்.

கோலி சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது 39-வது சதத்தை 108 பந்துகளில் நிறைவு செய்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலி அடிக்கும் 6-வது சதம் இதுவாகும். அதன்பின் நீண்டநேரம் நிலைக்காத கோலி, 104 ரன்களில் ரிச்சர்ட்ஸன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கோலி கணக்கில் 5பவுண்டரி, 2 சிக்ஸர் அடங்கும்.

தோனியுடன், தினேஷ் கார்திக் சேர்ந்தார். 6 ஓவர்களுக்கு 55 ரன்கள் சேர்க்க வேண்டிய நிலை இருந்தது. அதன்பின் தோனியின் இயல்பான ஆட்டம் வெளிப்பட்டது. லயண் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் விளாசினார் தோனி. அதன்பின் அடுத்தடுத்த ஓவர்களில் தினேஷ் கார்த்திக் இரு பவுண்டரிகள் விளாசி ஸ்கோரை உயர்த்தினார்கள்.

ஆனால், பந்துகளை வீணாக்காமல் தோனியும், தினேஷ் கார்த்திக்கும் ஒரு ரன், இரு ரன்களாக ஓடி எடுத்தனர். கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. முடிவு எப்படி இருக்குமோ என்ற பரபரப்புடன் ரசிகர்கள் காத்திருந்தனர்.

ஆனால், தோனி தான் ஒரு கிரேட்பினிஷர் என்பதை நிரூபிக்கும் வகையில், பெஹ்ரன்டார்ப் வீசிய முதல் பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டு அனைவரின் டென்ஷனையும் குறைத்தார். தோனியும் 53 பந்துகளில் அரைசதம் அடித்தார். அடுத்து பந்தில் தோனி ஒருரன் எடுக்க இந்திய ணி வெற்றி பெற்றது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close