[X] Close

ஆஸி. அணி என்ற சவப்பெட்டிக்கு ஆணியறைந்தார் புஜாரா: இயன் சாப்பல் புகழாரம்


pujara-ian-chappell-india-australia-series-sydney-test

  • முத்துக்குமார்
  • Posted: 06 Jan, 2019 14:34 pm
  • அ+ அ-

நடப்பு ஆஸ்திரேலியா தொடரில் 3 சதங்களுடன் 521 ரன்களை எடுத்துள்ள புஜாரா 1867 நிமிடங்கள் களத்தில் நின்றுள்ளார், 1258 பந்துகளை எதிர்கொண்டுள்ளார் என்று புகழாரம் சூட்டும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சாப்பல், எந்த ஒரு வேகப்பந்து வீச்சின் கூர்முனையை மழுங்கச் செய்யும் பேட்ஸ்மென் என்றால் அது புஜாராவாக மட்டுமே இருக்க முடியும் என்று ஒரு அரிய புகழாரம் சூட்டியுள்ளார்.

ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ தளத்தில் அவர் எழுதியுள்ள பத்தியிலிருந்து சில வருமாறு:

ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியின் கவனமும் விராட் கோலி மேல் இருக்க அரங்கின் பின்னணியிலிருந்து வெளிப்பட்டு அத்தனை பேர் கவனத்தையும் களவாடிச் சென்றுள்ளார் புஜாரா. 

இந்திய அணிக்கு ஆஸ்திரேலியாவில் முதல் தொடர் வெற்றியைச் சாதிக்க உதவியதுடன் டாப் கிளாஸ் எதிரணி பந்து வீச்சை வெறுப்பேற்றி தன்னிடம் சரணடையச் செய்தார்.  சிட்னியில் கடைசியில் ஆஸ்திரேலிய பந்து வீச்சு அறுந்து நொந்து நூலாகிப்போனதற்குக் காரணம் புஜாரா. இவரால் இந்தத் தொடர் முழுதும் ஷூட்டிங் காலரியில் வாத்துக்களாக இருந்த இந்திய பின்வரிசை வீரர்களும் ரன்கள் குவிக்கத் தொடங்கினர்.

தனிநபராக புஜாரா ஆஸி. பவுலர்களை மண்டியிட வைத்ததோடு, தன் அணியின் சக வீரர்கள் இந்தப் பந்து வீச்சை அடித்து நொறுக்கவும் வகை செய்தார். ரிஷப் பந்த் பெரிய அளவில் திறமையை இந்தத் தொடரில் ஆரம்பத்தில் காட்டினார் ஆனால் கட்டுக்கோப்பு இல்லை, ஆனால் மெல்பர்னில் அவரது அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டது. ஆனால் சிட்னியில் கோலி டிக்ளேர் செய்யும் போது இந்த சக்திமிக்க விக்கெட் கீப்பர் தனது திட்டத்தை நிறைவு செய்திருந்தார்.

புஜாராவின் ஆட்டம் நாம் இந்திய ரசிகராக இல்லாத பட்சத்தில் பார்ப்பதற்கு அவ்வளவு அழகானதாக இருக்காது, அடித்து நொறுக்கி எதிரணி பந்து வீச்சை சரணடைய வைக்கும் இன்றைய உலகில் எதிரணி பந்து வீச்சை முனை மழுங்கச் செய்து களைப்படையச் செய்யும் உலகின் ஒரே வீரர் புஜாராதான். 

அவரிடம் பேட்ஸ்மெனாக 2 பிரமாதமான குணங்கள் உள்ளன: தன்னால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பதை அவர் நன்றாக அறிந்துள்ளார். இந்த அளவுகோல்களுக்கு உறுதுணையாக வரம்பற்ற பொறுமை அவரிடம் உள்ளது.  ஆஸ்திரேலியர்களுக்கு புஜாராவை என்ன செய்வதென்று தெரியவில்லை. 

இங்கிலாந்துக்கு எதிராக புஜாரா இன்னும் கொஞ்சம் வேகமாக ரன் எடுக்க வேண்டும் என்று விரும்பி கோலி அவரை அணியிலிருந்து நீக்கியிருக்கலாம்.  ஆனால் சிட்னி இன்னின்ஸ் முடிந்து அவர் பெவிலியன் திரும்பும்போது நிச்சயம் எந்த ஒரு கேப்டனும் அவரைக் கட்டியணைக்கவே விரும்புவார்கள். இன்னொரு புறம் ஆஸ்திரேலிய ஓய்வறையில் இனி புஜாரா முகத்தில் கூட விழிக்கக் கூடாது என்ற எண்ணமே இருக்கும். 

மற்ற பேட்ஸ்மென்களும் ஆஸ்திரேலியாவில் அதிக சதங்கள் எடுத்திருக்கிறார்கள், அதிக ரன்களைக் குவித்திருக்கிறார்கள், ஆனால் அவர்கள் புஜாரா அளவுக்கு டெஸ்ட் முடிவில் தாக்கம் செலுத்தியிருப்பார்களா என்பது சந்தேகமே. உறுதிக்கும், மூர்க்கத்தனமான பேட்டிங்குக்கும் ஒரு ஹால் ஆஃப் ஃபேம் இருந்தால் அதில் புஜாராவுக்குத்தான் அதிக வாக்குகள் கிடைக்கும். 

இந்திய கிரிக்கெட்டின் கிங் ஆக கோலி இருக்கலாம், ஆனால் புஜாரா அவரது விசுவாசமான கூட்டாளி, இந்த அரசாட்சியில் அவருக்கு சிலபல சலுகைகளும் முன்னுரிமைகளும் கிடைக்க உரித்தானவரே புஜாரா...

இவ்வாறு புகழாரம் சூட்டியுள்ளார் இயன் சாப்பல்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close