[X] Close

என்னிடம் கேப்டன்சி கொடுக்கப்பட்ட போது தரவரிசையில் அணி 6ம் இடமோ 7ம்இடமோ... இன்று..: தோனி கேப்டன்சி காலத்தை விமர்சித்த கோலி


kohli-speech-about-dhoni

சிட்னி டெஸ்ட் போட்டி: செய்தியாளர்கள் சந்திப்பில் கோலி. | ஏ.எப்.பி.

  • kamadenu
  • Posted: 02 Jan, 2019 15:37 pm
  • அ+ அ-

எம்.எஸ்.தோனி 2014-ம் ஆண்டு டெஸ்ட் தொடரில் திடீரென டெஸ்ட் கேப்டன்சியை பாதி தொடரில் கைவிட தன்னிடம் இந்திய அணி கேப்டன்சி வந்த போது இந்திய அணி ஐசிசி தரவரிசையில் 6-7-ம் இடத்தில் இருந்தது, இன்று நம்பர் 1 ஆகவே இங்குதான் இந்திய அணியின் மாறும் காலக்கட்டம் தொடங்கியது என்று விராட் கோலி தெரிவித்தார்.

சிட்னி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது, இதில் வென்றாலோ அல்லது ட்ரா செய்தாலோ 2-1 என்று ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றும், இது நடந்தா அது ஒரு மகா சாதனை என்று விராட் கோலி கூறியுள்ளார்.

சிட்னி டெஸ்ட் போட்டிக்கு முன்னதான வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

நான் கேப்டனாகி 4 ஆண்டுகள் ஓடி விட்டன. தொடரை வென்றால் அது ஒரு மகா சாதனையே. ஏனெனில் நான் இங்கு 3வது முறையாக டெஸ்ட் அணியில் பங்கேற்று ஆடிவருகிறேன். இங்கு வெல்வது எவ்வளவு கடினம் என்பதை நான் அறிவேன்.

சில வேளைகளில் ஆஸ்திரேலியாவில் திறம்பட ஆடுவோம் ஆனால் ஒரு அணியாக வெற்றி பெறுவது என்பது மிகப்பெரிய சவாலாகவே எங்களுக்கு இருந்து வந்துள்ளது. தனி நபர் சாதனைகள் என்றால் நேர்மையாகக் கூற வேண்டுமெஇல் கடந்த 2 தொடர்களில் நான் நினைவில் கூட வைத்து கொள்வதில்லை.

தனிப்பட்ட சாதனைகளுக்காக நம் பெயர் சாதனைப் பெயர்ப்பலகையில் இடம்பெறலாம், ஆனால் அணி வெற்றி பெறவில்லை எனில் அது ஒரு விஷயமேயாகாது.  இது வரை இது நிச்சயமாக பெரிய, மிகப்பெரிய தொடர் வெற்றியாகும். எனக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த அணிக்குமே, ஏனெனில் இங்குதான் உண்மையில் அணியின் மாற்றம் குறித்த காலக்கட்டம் தொடங்கியது.

இதே மைதானத்தில் (சிட்னி) எம்.எஸ்.தோனி கேப்டன்சியைத் துறந்த போது (2014), நம்மிடம் மொத்தமாக இளம் அணியினர் இருந்தனர், டெஸ்ட் தரவரிசையில் ஆறோ, ஏழோ என்ற இடத்தில்தான் தொடங்கினோம் ஆனால் இப்போது உலகின் நம்பர் 1 அணியாக ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளோம், இந்த வழிமுறையை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம். (“At this particular venue when MS Dhoni gave up captaincy (2014) and we had a totally young side starting at six or seven (Test ranking) in the world. We have come back here as the number one side in the world, and we want to take that legacy forward.”)

2018-ம் ஆண்டு நமக்கு நல்ல நிலையில் முடிந்தது 2019 தொடக்கமும் நன்றாக அமைய வேண்டுமென்பதில் தீவிரமாக இருக்கிறோம்.  இந்த டெஸ்ட் போட்டியை ஒரேயொரு தனித்துவ டெஸ்ட் போட்டியாக எடுத்துக் கொள்கிறோம், ஆகவே விட மாட்டோம், முழு தீவிரமும், முயற்சியும், திறமையையும் காட்டுவோம். கடந்த காலங்களில் பார்த்திருக்கிறோம் சிட்ன் பிட்ச் முதல் 2-3 நாட்களுக்கு பேட்டிங்குக்குச் சாதகமாக இருக்கும். அதன் பிறகு ரிவர்ஸ் ஸ்விங், ஸ்பின் எடுக்கும்.  நல்ல வெயில் அடிக்கும் என்பதா பிட்ச் தன் உண்மைத்தன்மையை அதிகம் இழக்காது.

கடந்த டெஸ்ட் போட்டியில் கடைசி விக்கெட் விழுந்தவுடன் ஒவ்வொருவரின் உணர்ச்சியையும் நீங்கள் பார்த்தீர்கள் என்றால், அமைதியின் உருவமாக இருப்பவர்களும் உணர்ச்சித் ததும்பினர்.  ஒரு அணியாக ஒற்றை இலக்கை நோக்கிச் சென்றால் அனைத்தும் நன்றாகவே நடக்கும். வெற்றி பெறுவது என்பது ஒரு பீடிப்பாக வேண்டும்.

வெற்றி பீடிப்பு மனநிலையாக மாறும்போது அது ஒன்றிரண்டு போட்டிகளுடன் நின்று விடாது. வெற்றி என்பது வெறும் இலக்காக இருக்கும் போதுதான் ஒன்று இரண்டு போட்டிகளுடன் நின்று போகும்.

வரலாறு பற்றி பிரச்சினையில்லை, இந்தக் கணத்தில் வாழ்ந்து என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்துவதே முக்கியம் என்பேன் நான்.

இங்கு வந்து ஆடுவது எவ்வளவு கடினம் என்று எங்களுக்குப் புரிகிறது, அதனால்தான் இந்த டெஸ்ட்டையும் வென்று தொடரையும் வெல்ல வேண்டி போராடுகிறோம்.  எந்த அணிக்கு எதிராக ஆடுகிறோம் என்பது மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடும்தான்.

கடந்த காலத்தில் செய்ய முடியாததை நாங்கள் செய்து காட்டிவிட்டோம் என்று நிரூபிப்பதற்காக உண்மையில் ஆடவில்லை. எந்த அணி இங்கு வந்து ஆடிய போதும் வெற்றி பெறவே விரும்பினோம். இதே தீவிரம் நோக்கம் அவர்களுக்கும்  இருந்திருக்கும், ஆனால் வரலாற்றை மாற்ற வேண்டும் என்ற உத்வேகம் இல்லை.

அதற்காக வரலாற்றை மாற்றுகிறோம் என்பதை நிரூபிக்கும் அவசியம் மட்டுமல்ல, தடையைக் கடந்து இந்த நிலையில், மட்டத்தில் நாம் இருக்கிறோம் என்பது பற்றி நமக்கே ஒரு நம்பிக்கை வேண்டுமல்லவா.. அதாவது எந்த அணியையும் உலகில் எங்கு வேண்டுமானாலும் வீழ்த்தும் நம்பிக்கை வேண்டுமல்லவா..

மெல்போர்ன், அடிலெய்ட் டெஸ்ட் போன்ற வெற்றிகள்தான் அணியின் நம்பிக்கையை திடப்படுத்தும்.  அணியாக சரியான பாதையில் பயணிக்கிறோம் என்ற உணர்வைக் கொடுக்கும்.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close