டி 20 தொடரை வென்றது இங்கிலாந்து


லண்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி மற்றும் 4-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து தொடரை 2-0 என கைப்பற்றியது.

லண்டனில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக உஸ்மான் கான் 38, கேப்டன் பாபர் அஸம் 36 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட், ஆதில் ரஷித், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

158 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பில் சால்ட் 24 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 45 ரன்களும் கேப்டன் ஜாஸ் பட்லர் 21 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 39 ரன்களும் விளாசினர். 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 4 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 2-0 என கைப்பற்றி கோப்பையை வென்றது.

முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டிருந்த நிலையில் 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. இரு அணிகள் மோதிய 3-வது ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்பட்டிருந்தது.