[X] Close

சொதப்பிய இந்திய பேட்ஸ்மென்கள்: மானத்தைக் காப்பாற்றிய புஜாரா சதம்


day-1-match-report-ind-vs-aus

சதமடித்த புஜாரா | படம்: ஏபி

  • kamadenu
  • Posted: 06 Dec, 2018 13:11 pm
  • அ+ அ-

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையே அடிலெய்டில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 250 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் என்ற நிலையில் உள்ளது. இந்திய அணி வீரர் சதேஷ்வர் புஜாரா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். 

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து மோசமான துவக்கத்தைக் கண்டது. கே.எல்.ராகுல் 2, முரளி விஜய் 11, கோலி 3, ரஹானே 13 என சொற்ப ரன்கள் எடுத்த இந்திய பேட்ஸ்மென்கள், களத்துக்கு சென்ற வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர்.

ரோஹித் சர்மா - புஜாரா ஜோடி சற்று ஆறுதல் அளித்தனர். இந்த கட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. உணவு இடைவேளையின்போது இந்திய அணியின் ஸ்கோர் 56/4.

இடைவேளை முடிந்து தொடர்ந்து ஆடிய இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. ஆனால் ரோஹித் சர்மா 37 ரன்கள் எடுத்திருந்த போது லயான் பந்துவீச்சில் தேவையற்ற ஒரு ஷாட் ஆடி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ரிஷப் பந்த் அதிரடியாக ஆட முற்பட்டார். ஆனால் அவரும் நீண்ட நேரம் களத்தில் நிலைக்கவில்லை. 25 ரன்களுக்கு பந்த் ஆட்டமிழக்க அஸ்வின் புஜாராவுடன் களத்தில் இணைந்தார்.

இந்த இணை ஆஸ்திரேலியாவின் பொறுமையை கொஞ்சம் சோதித்தது என்றுதான் சொல்ல வேண்டும். இருவரும் சேர்ந்து 62 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் சேர்த்தனர். இன்றைய ஆட்டத்தில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுவே. இதில் அஸ்வின் 76 பந்துகளில் 25 ரன்களும், புஜாரா 73 பந்துகளில் 37 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்களுக்கு மேல் களத்தில் நின்ற இந்த இணையால், இந்திய அணி கவுரமான ஒரு ஸ்கோரை எட்டியது.

தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 143 ரன்களுக்கு 6 விக்கெட் என்ற நிலையில் இருந்தது. நாளின் கடைசி இடைவெளி முடிந்த அடுத்த ஓவரில் அஸ்வின் 25 ரன்களுக்கு ஆட்டமிழ்ந்தார். அடுத்து வந்த இஷாந்த் சர்மா 4 ரன்களுக்கு வெளியேறினார். 

புஜாரா சதம்

இன்றைய நாளில் இந்திய அணியை தனி ஆளாக காப்பாற்றியது புஜாராவின் ஆட்டமே. ஒரு பக்கம் மளமளவென விக்கெட்டுகள் விழுந்தாலும் புஜாரா தனது ஆட்டத்தில் முதிர்ச்சியான அணுகுமுறையை வெளிப்படுத்தினார். பதட்டமின்றி நிதானமாக ஆடி 231 பந்துகளில் சதம் கடந்தார். ஆனால் அவர் 123 ரன்கள் எடுத்திருந்த போது துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆக இந்திய அணி 250 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் என்ற நிலையில் இன்றைய நாளை முடித்தது. ஷமி 6 ரன்களுடன் களத்தில் உள்ளார். 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close