கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா


ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் தொடர் அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 37-வது காய் நகர்த்தலின் போது கார்ல்சனை வீழ்த்தினார். கிளாசிக்கல் போட்டியில் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்துவது இதுவே முதன்முறையாகும்.

இதற்கு முன்னர் கிளாசிக்கல் போட்டியில் இருவரும் மோதிய 3 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்திருந்தன. 3 சுற்றுகளின் முடிவில் பிரக்ஞானந்தா 5.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். கார்ல்சன் 3 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மகளிர் பிரிவில் ஆர்.வைஷாலி தனது 3-வது சுற்றில் உக்ரைனின் அன்னா முசிசுக்கிற்கு எதிரான ஆட்டத்தை டிராவில் முடித்தார். இதன் மூலம் அவர் 5.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.