ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் குரோஷியாவை 4-2 என்ற விகிதத்தில் வீழ்த்தி யதன் மூலம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பையில் மகுடம் சூடியுள்ளது பிரான்ஸ் அணி. இதற்கு முன் பிரான்ஸ் 1998-ல் சாம்பியன் பட்டம் வென்றது.
1998-ல் உலகக் கோப்பையை வென்றபோதும் சரி, இப்போதும் சரி எதிரணியிடம் ஒரு ஆட்டத்தில்கூட தோற்காமல் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது பிரான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. (டென்மார்க் அணிக்கு எதிரான ஆட்டம் மட்டும் கோல்களின்றி டிராவில் முடிந்தது.)
குரோஷியா அணியின் மகுடம் சூடும் கனவை 2-வது முறையாகக் கலைத் துள்ளது பிரான்ஸ். 1998-ல் நடந்த போட்டிகளில் அரை இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இறுதிப் போட்டியில் மீண்டும் குரோஷியாவைத் துவம்சம் செய்துள்ளது.
இறுதிப் போட்டியில் 62 சதவீதம் குரோஷியா அணியே பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஒன்பது முறை அந்த அணி கோல் அடிக்க முயன்றும் அத்தனையும் பலனின்றி போனது. ஆனால், பிரான்ஸ் அணி 38 சதவீத பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோதும் 6 முறை இலக்கை நோக்கி படையெடுத்தது. இதில், இருமுறை கோல்கள் விழுந்தன. மற்ற இரு கோல்களில் ஒன்று பெனால்டி கிக்கிலும் மற்றொன்று குரோஷியாவின் செல்ஃப் கோலாலும் கிடைத்தது.
பயிற்சியாளராகவும், கேப்டனாகவும் உலகக் கோப்பையைக் கைகளில் ஏந்திய 3-வது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் டெஸ் சாம்ப்ஸ்.