அகில இந்திய கூடைப்பந்து போட்டி: மகளிர் பிரிவில் கேரள மின்வாரியம் சாம்பியன் @ ராஜபாளையம்


ராஜபாளையம்: ராஜபாளையத்தில் நடந்த அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் மகளிர் பிரிவில் கேரள மின்வாரிய அணியும், ஆடவர் பிரிவில் பெங்களூர் பேங்க் ஆஃப் பரோடா அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர கூடைப் பந்து கழகத்தின் 70-ம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு 30-வது அகில இந்திய கூடைப்பந்து போட்டி பி.ஏ.சி.எம் பள்ளி மைதானத்தில் மே.10ம் தேதி தொடங்கியது. இந்நிகழ்வை, ராஜபாளையம் நகர் கூடைப் பந்து கழக தலைவர் ராம்குமார் ராஜா, செயலர் பீம் ஆனந்த், பொருளாளர் ராம் சிங் ஆகியோர் நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை செய்தனர்.

இதில் ஆண்கள் பிரிவில் இந்திய ராணுவம், கப்பற்படை, விமானப்படை, கேரள காவல் துறை, கேரள மின்வாரியம், பெங்களூரு பேங்க் ஆப் பரோடா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி, தமிழ்நாடு அணி உள்ளிட்ட 10 அணிகளும், பெண்கள் பிரிவில் மும்பை மேற்கு ரயில்வே, சென்னை வருமானவரித் துறை, கேரள மின்வாரியம், ரைசிங் ஸ்டார் சென்னை ஆகிய 4 அணிகள் பங்கேற்றன.

லீக் சுற்று மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்திய ராணுவம், கப்பற்படை, பேங்க் ஆப் பரோடா, கேரள மின்வாரிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இதில் கப்பற்படையை 85க்கு- 87 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்ற இந்திய ராணுவ அணியும், கேரள மின்வாரிய அணியை 63க்கு- 71 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்ற பேங்க் ஆப் பரோடா அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

நேற்று இரவு இந்திய ராணுவம் - பேங்க் ஆப் பரோடா அணிகள் மோதிய பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 76 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்த நிலையில், ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் பேங்க் ஆப் பரோடா அணி 2 புள்ளிகள் கூடுதலாக பெற்று 78க்கு- 76 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

பேங்க் ஆப் பரோடா அணிக்கு பி.எஸ் குமாரசாமி ராஜா நினைவு சுழற்கோப்பை உடன் ரூ.60 ஆயிரம் பரிசு தொகையும், இரண்டாம் இடம் பெற்ற இந்தியா ராணுவ அணிக்கு சுழற்கோப்பை உடன் ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகையும், 3ம் இடம் பெற்ற கப்பற்படை அணிக்கு சுழற்கோப்பை உடன் ரூ.30 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

இதேபோல், மகளிர் பிரிவில் லீக் போட்டிகள் அடிப்படையில் புள்ளி பட்டியலில் முதல் இடம் பெற்ற கேரள மின்வாரிய அணிக்கு பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா நினைவு சுழற்கோப்பை உடன் ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகையும், இரண்டாம் இடம் பெற்ற சென்னை வருமான வரித்துறை அணிக்கு சுழற்கோப்பை உடன் ரூ.40 ஆயிரமும், மூன்றாமிடம் பிடித்த ரைசிங் ஸ்டார் சென்னை அணிக்கு சுழற்கோப்பை உடன் ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டது.

அதிக புள்ளிகள், சிறந்த பங்களிப்பு, சிறந்த விளையாட்டு வீரர் என பல்வேறு பிரிவுகளில் வீரர், வீராங்கனைகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், பீமா ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் சுதிர் கபூர் கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினர்.

x