திருநெல்வேலி: சீவலப்பேரியில் உள்ள காசிவிஸ்வநாத சுவாமி கோயிலில் 45 ஆண்டுகளுக்குப் பின் தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
சீவலப்பேரியில் 800 ஆண்டுகள் பழமையான விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இருந்த தேர் பழுதடைந்தததால் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக தேரோட்டம் நடைபெறவில்லை.
புதிய தேர் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறையின் முயற்சியில் பொது மக்கள் பங்களிப்புடன் ரூ.35 லட்சம் மதிப்பில் 12 அடி அகலம், 32 அடி உயரத்தில் தேர் செய்யும் பணி நடைபெற்றது. புதிய தேர் திருப்பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து பங்குனி திருவிழாவையொட்டி தேரோட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதன்படி பங்குனி திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. அன்று காலை 10 மணிக்கு புதிய தேர் வெள்ளோ ட்டம் நடத்தப்பட்டது. விழா நாட்களில் சிறப்பு பூஜை, அபிஷேகம், வேத பாராயணம், இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. சீவலப்பேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்து தேரை இழுத்தனர். திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் சிலம்பரசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பங்குனி திருவிழாவில் இன்று காலை 9 மணிக்கு மேல் தீர்த்தவாரி நடைபெறுகிறது.