தூத்துக்குடி: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை முருகன் - வள்ளியம்மன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 6 மணிக்கு வள்ளியம்மன் தபசு காட்சி சப்பரத்தில் எழுந்தருளி சன்னதி தெரு வழியாக சிவன் கோயில் வந்து சேருகிறார்.
காலை 10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறு கிறது. தொட்ரந்து சுவாமி குமாரவிட்க பெருமான் தபசு காட்சிக்கு புறப்பாடாகி சிவன் கோயில் வந்து சேருகிறார்.
அங்கு மாலை 4.30 மணிக்கு மேல் வள்ளி அம்மனுக்கு சுவாமி குமாரவிடங்கபெருமான் காட்சி கொடுக்கிறார். பின்பு கீழரத வீதி சந்திப் பில் சுவாமி குமரவிடங்கபெருமானை வள்ளி அம்மன் மூன்று முறை சுற்றி வந்ததும், தோள் மாலை மாற்றும் வைபவம் நடைபெறுகிறது.
சப்பரங்கள் எதிரெதிர் திசையில் நிறுத்தப்பட்டு சுவாமி, அம்மனுக்கு வஸ்திரங்கள், தோள் மாலை மாற்றப்படுகிறது. பின்னர் சுவாமி குமர விடங் பெருமானுக்கும், வள்ளியம்மனுக்கு தீபாராதனை நடைபெறுகிறது. அதன் பின்னர் சுவாமியும், அம்மனும் ரதவீதிகள், உள்மாட வீதிகள் சுற்றி கோயிலை சேருகின்றனர்.
இரவு 10 மணிக்கு 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்கப் பெருமான், வள்ளி அம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.