ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம்!


விருதுநகர்: ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இன்று (ஏப். 11) ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதையொட்டி திருப்பதியில் இருந்து பட்டு வஸ்திரம் நேற்று ஶ்ரீவில்லிபுத்தூர் கொண்டு வரப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வாரின் மகளாக அவதரித்த ஆண்டாள், பெருமாளை மணமுடிக்க எண்ணி மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து பங்குனி உத்திரம் நாளில் ஶ்ரீரங்கம் ரெங்கமன்னாரை மணம் புரிந்தார் என்பது கோயில் வரலாறு.

திருப்பதி பிரம்மோற்சவம், மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சித்திரை தேரோட்டம் ஆகியவற்றில்ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, பட்டு வஸ்திரம் ஆகியவற்றை அணிந்து பெருமாள் காட்சியளிக்கிறார்.

அதேபோல், ஆடிப்பூரத் தேரோட்டத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர், மதுரை கள்ளழகர் உடுத்தி களைந்த பட்டு வஸ்திரமும், திருக்கல்யாணத்தின் போது திருப்பதி பெருமாள் உடுத்தி களைந்த பட்டு வஸ்திரமும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஶ்ரீவில்லிபுத்தூரில் இன்று (ஏப்.11) காலை 7 மணிக்கு செப்புத் தேரோட்டமும், மாலை 5.30 முதல் 6.30 மணிக்குள் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக் கல்யாணமும் நடைபெறுகிறது. திருக்கல்யாண வைபவத்தின் போது ஆண்டாளுக்கு சாற்றுவதற்காக திருப்பதி பெருமாள் சூடிய பட்டு வஸ்திரம், மாலை உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டுவரப்பட்டன.

x