ஈரோடு: சென்னிமலை முருகன் கோயிலில், பங்குனி உத்திர தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய பெருமைக்குரிய, ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த் திருவிழா விமரிசையாக நடைபெறும். நடப்பாண்டு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, நேற்று காலை சென்னிமலை கைலாசநாதர் கோயிலில் இருந்து உற்சவ மூர்த்திகள் மலைக் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, பகல் 12.30 மணியளவில் கோயிலின் முன்புள்ள கம்பத்தில் கொடியேற்றப்பட்டது.
இன்று மாலை 6 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோயிலில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. கிழக்கு ராஜவீதி, தெற்கு ராஜ வீதி மற்றும் மேற்கு ராஜ வீதி வழியாக நடைபெறும் தேரோட்டம் மாலையில் நிலையை அடைகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். விழாவையொட்டி நாளை காலை அடிவாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
வரும் 12-ம் தேதி காலை பரிவேட்டை, இரவு தெப்பத் தேரோட்டம், 13-ம் தேதி காலைமகா தரிசனம் நடைபெறுகிறது. அன்று மாலை மஞ்சள் நீர் உற்சவத்துடன் விழா நிறை வடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் ர.பழனிவேல், கோயில் செயல் அலுவலர் ஏ.கே.சரவணன், கண்காணிப்பாளர் சி.மாணிக்கம் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.