சென்னை: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழநி முருகன் கோயிலில் ஏப்ரல் 10, 11, 12-ம் தேதிகளில் கட்டண தரிசன முறை ரத்து செய்யப்படுகிறது என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி நேற்று கேள்வி நேரத்தில் பேசும்போது, “பங்குனி உத்திரத்தில் முருகனை தரிசிக்க பல லட்சம் பக்தர்கள் குவிகின்றனர். தைப்பூச நாளில் பழநி ஆண்டவர் கோயிலில் 3 நாட்களுக்கு கட்டணமில்லா தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதேபோல, பங்குனி உத்திரத்துக்கும் முருக பக்தர்களுக்கு கட்டணமில்லா தரிசனம் ஏற்பாடு செய்யப்படுமா?” என்றார்.
இதற்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதில் அளித்து பேசும்போது, “சட்டப்பேரவை உறுப்பினர் கோரிக்கை உடனடியாக ஏற்கப்படுகிறது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஏப்ரல் 10, 11 மற்றும் 12-ம் தேதிகளில் தரிசனம் செய்வதற்கு கட்டண முறை ரத்து செய்யப்படுகிறது’’ என்று தெரிவித்தார்.