ஈரோடு: பண்ணாரி மாரியம்மன் கோயில் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், இன்று காலை முதல் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் தீமிதித்து வழிபாடு நடத்தினார்.
ஈரோடு மாவட்டம் பண்ணாரியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா, ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடந்து வருகிறது. இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி இரவு, பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து சத்தியமங்கலத்தை சுற்றியுள்ள கிராமங்களில் பண்ணாரி மாரியம்மன், சருகு மாரியம்மன் திருவீதி உலா நடந்தது. அம்மன் சப்பரம் கோயிலை அடைந்த நிலையில், ஏப்ரல் 1ம் தேதி இரவு கம்பம் சாட்டுதல் நிகழ்வு நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா இன்று (8ம் தேதி) காலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் காலைமுதல் தீமிதித்து வழிபட்டனர்.
அம்மன் அழைத்தல்: இதனையொட்டி, நேற்று மாலை கோயில் முன்பாக குண்டம் அமைக்கும் பணி சிறப்பு பூஜைக்குப் பின்னர் தொடங்கியது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் மேளதாளத்துடன் பாதயாத்திரையாகவும், பூச்சட்டி ஏந்தியும் பக்தர்கள் பண்ணாரியில் குவிந்தனர். பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய கரும்புகளைக் (விறகுகள்) கொண்டு, குண்டம் அமைக்கப்பட்டு, இன்று அதிகாலை அம்மன் அழைப்பு நிகழ்வு நடந்தது. அதனைத் தொடர்ந்து பூசாரிகள் குண்டம் இறங்கிய பின்னர், வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் குண்டம் இறங்கிய பின்னர், கடைசியாக கால்நடைகள் குண்டம் இறங்க அனுமதிக்கப் படுவது வழக்கம்.
பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் பங்கேற்பதற்காக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். குண்டம் இறங்குவதற்காக அமைக்கப்பட்ட தடுப்புகளில், கடந்த இரு நாட்களாக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். பக்தர்களுக்கு, தனித்தனியாக இட வசதி, குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. குண்டம் திருவிழாவிவையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து பண்ணாரிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
போக்குவரத்தில் மாற்றம்: குண்டம் திருவிழாவை ஒட்டி, சத்தியமங்கலம் - மைசூரு சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பேருந்துகள் மற்றும் வாகனங்கள் நிறுத்த தனி இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பண்ணாரி - திம்பம் சாலையில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பண்ணாரி குண்டம் திருவிழா பாதுகாப்பு பணியில், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக நாளை (9ம் தேதி) புஷ்பரத ஊர்வலமும், 10ம் தேதி மஞ்சள் நீராட்டுவிழாவும், 11ம் தேதி தங்கரத புறப்பாடும் நடக்கிறது. 12ம் தேதி பவுர்ணமி திரு விளக்கு பூஜையும், ஏப்ரல் 24ம் தேதி மறுபூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவடைகிறது.