நாகை: கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், வேளாங்கண்ணி பேராலயத்தில் நேற்று பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நாள்தோறும் சுற்றுலாப் பயணிகளாகவும் யாத்ரிகர்களாகவும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் மார்ச் 5-ம் தேதி சாம்பல் புதனுடன் தொடங்கியது.
தொடர்ந்து, தவக்காலத்தின் இறுதி நாள் நெருங்கும் நிலையில், தற்போது இருந்தே நாடு முழுவதும் இருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வரத் தொடங்கியுள்ளனர். இங்கு வரும் பக்தர்களுக்காக பேராலயம் மற்றும் மாவட்டம் நிர்வாகம் சார்பில் தங்குமிடம், சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பேராலய பங்குத் தந்தை அற்புத ராஜ் தெரிவித்துள்ளார். தற்போது வெயில் காலம் என்பதால் பேராலயம் சார்பில் பக்தர்களுக்கு ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், இளைப்பாறும் பந்தல் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஞாயிறு விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வேளாங்கண்ணியில் குவிந்தனர். அவர்கள் மாதாவுக்கு மாலை அணிவித்து, மெழுகுவத்தி ஏற்றி, சிலுவைப் பாதையில் மண்டியிட்டு நடந்து பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து, கடலில் குளித்து மகிழ்ந்தனர். மேலும், கடைவீதி, முடி இறக்கும் இடம், மெழுகுவத்தி கடைகள், பூக்கடைகள், இனிப்பு கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் வருகை அதிகரிப்பால் வியாபாரம் சிறப்பாக உள்ளது என வணிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மதிய உணவு திட்டம் தொடக்கம்: வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு ஆண்டு முழுவதும் மதிய உணவு வழங்கும் திட்டம் மார்ச் 5-ம் தேதி சாம்பல் புதன் அன்று தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜால் தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து, இத்திட்டத்தின் கீழ் உணவு வழங்கும் நிகழ்வு நேற்று தொடங்கியது. இந்நிகழ்வை பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் பங்குத்தந்தை ஆரோக்கிய ராஜ் புனிதம் செய்து தொடங்கிவைத்தார். தினமும் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வாழை இலையில் சாம்பார், கூட்டு, பொரியல் உடன் மதிய உணவு பரிமாறப்படுகிறது. முதல் நாளான நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மதிய உணவு உண்டு மகிழ்ந்தனர்.