[X] Close

இசை குரு முத்துசுவாமி தீட்சிதர்! குரு வார நாளில் ஆராதனை


muthuswamy-dhitchidhar-aaradhanai

  • வி.ராம்ஜி
  • Posted: 21 Mar, 2018 11:13 am
  • அ+ அ-

பங்குனி மாதம் கார்த்திகை நட்சத்திர நன்னாளில், 1776ம் வருடத்தில் பிறந்தார் முத்துசுவாமி தீட்சிதர். அப்பா ராமசுவாமி தீட்சிதர். அம்மா சுப்புலட்சுமி. வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள முருகப்பெருமானின் திருநாமம் முத்துக்குமார சுவாமி. மிகுந்த வரப்பிரசாதி. அவரின் அருளால் பிறந்த குழந்தை என்பதால், முத்துசுவாமி என்றே பெயரிட்டனர். குழந்தை முத்துசுவாமி, அன்புடனும் வாஞ்சையுடனும் குறிப்பாக இசையுடனும் வளர்ந்தார். அப்பாவே இவருக்குக் குருவானார். அவரிடம் தெலுங்கு, சம்ஸ்கிருதம், இசை முதலான கலைகளைப் பயின்றார்.

அப்பாவைப் போலவே வேதங்களிலும் மந்திர ஜபங்களிலும் சாஸ்திரங்களிலும் பாண்டித்யத்துடன் திகழ்ந்தார். இனிமையாகப் பாடுவதிலும் வீணை வாசிப்பதிலும் தனித்த திறமையுடன் விளங்கினார். சிதம்பரநாத யோகி என்பவரிடம் ஸ்ரீவித்யா மகாமந்திரத்தை தீட்சையாகப் பெற்று, தினமும் உச்சாடனம் செய்து வந்தார். பிறகு அவருடன் காசியம்பதிக்குச் சென்றார். விசாலாட்சி சமேத விஸ்வநாதரை தரிசித்தார்.

அங்கே, காசியில் கர்நாடக சங்கீதத்துடன் இந்துஸ்தானி சங்கீதமும் கற்றறிந்தார். அதையடுத்து குருவின் அருள்வாக்கின்படி, திருத்தணி முருகப்பெருமானைத் தரிசித்தார். அப்படி மலையேறும் போது ஒரு கிழவர் எதிரில் வந்தார். ‘முத்துசுவாமி வாயைத் திற’ என்றார். கற்கண்டை ஊட்டிவிட்டு ஆசி வழங்கி சட்டென்று மறைந்தார். அந்தத் தருணத்தில், மயிலின் மீதேறிச் செல்லும் முருகப்பெருமானைத் தரிசித்தார் முத்துசுவாமி தீட்சிதர். இதன் பின்னர், மாயா மாளவ கெளளையில் முதல் கிருதியை இயற்றினார். தன் ஒவ்வொரு பாடலிலும் குருகுஹ எனும் சொல்லாடலைக் கையாண்டார்.

திருத்தணியில் இருந்து அப்படியே காஞ்சியம்பதிக்கு வந்தார். காமாட்சி அன்னையின் கனிவிலும் கருணையிலும் மெய்சிலிர்த்தார். ஏகாம்பரேஸ்வரரின் தரிசனத்தில் மெய்யுருகிப் போனார்.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் தரிசனம் செய்து, சிதம்பரம், சீர்காழி என பல தலங்களைத் தரிசித்துவிட்டு, ஆரூர் எனப்படும் திருவாரூருக்கு வந்தார். ஆரூர்க் கோயிலும் கமலாலயக் குளமும் அவரை என்னவோ செய்தன. அங்கிருக்கும் தெய்வங்களுக்கு தனித்தனியே கிருதிகளை இயற்றினார். அவரின் பாடல்களைக் கேட்கக் கேட்க, உருகிப் போனார்கள் மக்கள்.

பஞ்சலிங்க ஸ்தலக கிருதி, கமலாம்பா நவா வர்ணம், அபயாம்பா நவா வர்ணம், சிவ நவா வர்ணம், நவக்கிரகக் கிருதிகள் என இயற்றிய பாடல்கள் அனைத்தும் இன்றைக்கும் இவரின் சாந்நித்தியத்தையும் தெய்வ கடாக்ஷத்தையும் உணர்த்துகின்றன.

குகனின் அருளாலும் சிவனின் பேரருளாலும் இன்றைக்கும் அழியாப் புகழுடன் மும்மூர்த்திகளில் ஒருவராகப் போற்றி வணங்கப்படுகிறார் முத்துசுவாமி தீட்சிதர். 1835ம் வருடம், ஓர் தீபாவளித் திருநாளின் போது, தன் சகோதரர் மற்றும் சிஷ்யர்களை ‘மீனலோசனி பாப மோசனி’ எனும் கிருதியைப் பாடச் சொன்னார். அவர்கள் பாடப் பாட, கண் செருகி, கேட்டுக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் தன் இரண்டு கைகளையும் சிரசின் மேல் வைத்து குவித்து வணங்கியபடியே இருந்தார். ‘சிவே பாஹி... சிவே பாஹி... ஓம் சிவே...’ என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அப்போது அவரின் ஆத்மா, அவரின் உடலிலிருந்து ஒளியாக, ஜோதியாக வானை நோக்கிச் சென்றது என்கிறது அவரின் சரிதம்.

இவரின் அந்திமக்காலம் எட்டயபுரம் பகுதியில் கழிந்ததாகச் சொல்வர். இவரின் திருச்சமாதி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ளது. இவரின் திருநட்சத்திரம் கார்த்திகை. பங்குனிக் கார்த்திகை. நாளைய தினம் 22.3.18 வியாழக்கிழமை, கிருத்திகை நட்சத்திரம். பங்குனிக் கிருத்திகை. முத்துசுவாமி அவதரித்த நன்னாள்.

தியாகப் பிரம்மம், ஸ்யாமா சாஸ்திரிகள், முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோர், இசை மும்மூர்த்திகள் என்று இன்றைக்கும் போற்றப்படுகின்றனர். முத்துசுவாமி அமைத்துக் கொடுத்த இசைதான், இன்றைக்கு எத்தனையோ பேரை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. இவரின் இசை, எத்தனனயெத்தனை மக்களின் மனங்களை ஊடுருவி, லேசாக்கியிருக்கிறது. இன்றளவும் லேசாக்கி வருகிறது.

இசை மும்மூர்த்திகள், இசை பயில்வோருக்கும் இசையைக் கேட்போருக்கும் குரு. ஆச்சார்யர். வியாழக்கிழமை என்பது குருவாரம். குருவை வணங்குவதற்கு உரிய அற்புதமான நாளில், முத்துசுவாமி தீட்சிதரின் ஆராதனையும் ஒருசேர வந்திருப்பது, இறையருள்; குரு கிருபை. இசைப் ப்ரியர்கள் செய்த பாக்கியம்.

இந்த நாளில்... முத்துசுவாமி தீட்சிதர் எனும் இசை மகானை போற்றி வணங்குவோம்!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close