[X] Close

பஞ்சமியில் வாராஹி வழிபாடு பகையைத் தகர்ப்பாள் தேவி!


panjami-vaarahi

  • வி.ராம்ஜி
  • Posted: 21 Mar, 2018 09:37 am
  • அ+ அ-

பஞ்சமி திதியில் வாராஹிதேவியை வழிபட்டால், பகையைத் தகர்ப்பாள். பஞ்சமெல்லாம்  தீர்த்தருள்வாள்.

சப்த கன்னியரில் வாராஹியும் ஒருத்தி. சப்தமாதர்களில் ஒரு தேவதையாகப் போற்றப்படுகிறாள் வாராஹி தேவி. சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில், சப்தமாதர்கள் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். பஞ்சமியில் வாராஹியை வழிபட்டால், பகையைத் தகர்த்தெறிவாள். எதிரிகளை தவிடுபொடியாக்குவாள். இன்னல்கள் தீர்த்து வாழ்வில் நிம்மதியைத் தந்தருள்வாள் என்கின்றனர் பக்தர்கள்.

காலப்போக்கில், சப்தமாதர்கள் சந்நிதியும் குறிப்பாக வாராஹிக்கென்று சந்நிதியும் பெருகிவிட்டன. இன்னும் சொல்லப்போனால், வாராஹிதேவிக்கென தனிக்கோயிலே அமைக்கப்பட்டு, வழிபட்டு வருகின்றனர் பக்தர்கள்.

சப்தமாதர்களின் மகிமையையும் மகோன்னதத்தையும் தேவி மஹாத்மியம் சிலாகித்துச் சொல்கிறது. சப்த என்றால் ஏழு என்று அர்த்தம். ஏழு தேவியரைக் கொண்டதால் சப்தமாதர்கள் என்று பெயர். இவர்களை 700 மந்திரங்களால் விவரித்துச் சொல்லப்பட்டிருப்பதால் அதற்கு சப்த சதீ என்றே சொல்லிப் போற்றுகிறார்கள் ஆச்சார்யர்கள்.

சும்ப - நிசும்ப அரக்கர்களை அழிக்க, ஆதிபராசக்தி முடிவெடுத்தபோது, அவளுக்குத் துணையாக, அவளுக்கு உதவியாக, அவளின் பக்கபலமாக, படையாக உருவெடுத்து வந்தவர்களே சப்தமாதர்கள் என்கிறது புராணம்.

இவர்களில், இந்த ஏழு பேரில், வாராஹி தேவி, மகாசக்தி வாய்ந்தவள். இவளை வணங்கி ஆராதித்து வழிபட்டு வந்தால், சத்ரு பயம் நீங்கும். அதாவது எதிரிகள் பயம் இருக்காது. எதிரிகளைத் தோல்வியுறச் செய்து எதிர்ப்புகளை தவிடுபொடியாக்குவாள் என்பது ஐதீகம்!

பஞ்சமி தினம் வாராஹி தேவிக்கான, அவளை வழிபடுவதற்கான, அவளை ஆராதித்து அருள் பெறுவதற்கான அற்புதமான நாள். இந்த நாளில், அவளுக்கு செந்நிற மலர்கள் அணிவித்து வழிபடுவது மிகுந்த பலனைத் தரும். தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தந்தருள்வாள் வாராஹி தேவி!

நாளைய தினம் 22..3.18 வியாழக்கிழமை பஞ்சமி திதி. சப்தமாதர்களில் ஒருவராகத் திகழும் ஸ்ரீவாராஹி தேவியை கண்ணாரத் தரிசிப்போம். மனதாரப் பிரார்த்திப்போம். எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் ஓடும். இன்னல்கள் எங்கேயோ சென்றுவிடும். மனோபலம் பெருகும். மங்கல காரியங்கள் தடையின்றி நிகழும்.

வஞ்சனையில் இருந்து மீட்டெடுப்பாள். பஞ்சமெல்லாம் போக்கி அருள்வாள் வாராஹிதேவி.

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close