திருவள்ளூர்: தை அமாவாசையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் குவிந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர்.
திருவள்ளூரில் உள்ள பழமையான வீரராகவப் பெருமாள் கோயில், அஹோபில மடத்தின் பராமரிப்பில் இருந்து வருகிறது. இக்கோயிலுக்கு, தமிழகம், ஆந்திர பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமாவாசைக்கு முதல் நாள் இரவே வருகை தந்து தங்கி, அமாவாசையன்று கோயில் தெப்பக் குளத்தில் நீராடி, முன்னோருக்கு தர்ப்பணம் செய்து, வீரராகவப் பெருமாளை வழிப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இன்று தை அமாவாசை என்பதால் நேற்று இரவே சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்கள், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநில பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவள்ளூர் பகுதிகளில் குவிந்து தங்கினர். தொடர்ந்து, இன்று அதிகாலை முதல், பக்தர்கள், வீரராகவப் பெருமாள் கோயில் தெப்பக்குள படிக்கட்டுகள் மற்றும் குளக்கரை பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தவர்கள் வீரராகவப் பெருமாள் கோயிலில் நீண்ட வரிசையில், சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து, தை அமாவாசையையொட்டி, கண்ணாடி மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் ரத்னாங்கி சேவையில் காட்சியளிக்கும் வீரராகவப் பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.