தருமபுரம் ஆதீன திருமடத்தில் உள்ள ஞானபுரீஸ்வரர் கோயில் தேரோட்டம்


மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன திருமடத்தில் நடைபெற்ற ஞானபுரீஸ்வரர் கோயில் தேரோட்டம். (அடுத்தப்படம்) மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தரிசனம் செய்தார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன திருமடத்தில் உள்ள ஞானபுரீஸ்வர் கோயில் குரு பூஜை பெருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது.

தருமபுரம் ஆதீன திருமடத்தில் உள்ள ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோயிலில், ஆண்டு தோறும் ஆண்டுப் பெருவிழா, ஆதீன குரு முதல்வர் குரு ஞானசம்பந்தர் குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு விழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாண உற்சவம் 26-ம் தேதி இரவு நடபெற்றது. தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்றது.

இதையொட்டி காலை ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் ஒரு தேரிலும், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் ஆகிய சுவாமிகள் மற்றொரு தேரிலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

தொடர்ந்து மகா தீபாராதனைக் செய்யப்பட்டு, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் கயிலை ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். ஆதீன திருமடத்தின் 4 வீதிகளை வலம் வந்து தேர்கள் நிலையை அடைந்தன. இதில் ஆதீன தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.