கல்பாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் நகரப்பகுதியில் அமைந்துள்ள தலசயன பெருமாள் கோயிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சொர்க்க வாசல் வழியாக சென்று சுவாமியை வழிபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் நகரப்பகுதியில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான பிரசித்திப் பெற்ற தலசயன பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், வைகுண்ட ஏகாதேசியையொட்டி இன்றைய தினம் சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்றதால், கடந்த 2 ஆண்டுகளாக சொர்க்க வாசல் திறப்பு உற்சவம் நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில், கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, மீண்டும் உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. இதன்பேரில், இந்தாண்டு சொர்க்க வாசல் திறப்பு உற்சவம் இன்று நடைபெற்றது. இதில், அதிகாலை 4:30 மணிக்கு ராஜகோபுர நுழைவு வாயில் பகுதியில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
இதன் வழியாக, ‘கோவிந்த கோவிந்த’ என கூறியவாறு சென்ற பக்தர்கள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் தம்பதி சமேதராய் முத்தங்கி சேவையில் அருள்பாலித்த தலசயன பெருாமளை பக்தர்கள் வழிபட்டனர். மேலும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.