குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை நடை திறக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து புல்மேடு வனப்பாதையின் தொடக்கப் பகுதியில் நுழைவாயில் அமைத்து பக்தர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவு, தங்குதல் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைக்காக வெள்ளிக்கிழமை (நவ.15) மாலை நடை திறக்கப்பட உள்ளது. சபரிமலைக்கான முக்கிய வழித்தடமாக தேனி மாவட்டம் அமைந்துள்ளது. இதன்வழியே தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் அதிகளவில் கடந்து செல்வர். தமிழக - கேரள எல்லையான குமுளியில் இருந்து வண்டிப்பெரியாறு, எரிமேலி வழியாக பம்பைக்கு வாகனங்களில் செல்லலாம். மேலும் பாதயாத்திரையாக செல்பவர்கள் வண்டிப்பெரியாறில் இருந்து 14 கி.மீ.தூரம் உள்ள சத்திரத்தை அடைந்து அங்கிருந்து புல்மேடு வனப்பாதை வழியே 12 கி.மீ. நடந்து சென்றும் சன்னிதானத்தை அடையலாம்.
இது வனப்பாதை என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி காலை 7 முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செல்ல வனத்துறையினர் அனுமதிக்கின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக வெள்ளிக்கிழமை நடைதிறக்கப்பட உள்ளதால் இப்பாதையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இங்குள்ள நுழைவுப்பாதையில் பக்தர்கள் வரிசையாக செல்ல கம்புகள் கட்டி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பக்தர்களுக்காக டீ, ஹோட்டல்கள் அமைப்பதற்கான பணிகளும் புதன்கிழமை (நவ.13) நடைபெற்றன. பிற்பகல் 2 மணிக்குப் பிறகு பக்தர்களுக்கு அனுமதியில்லாததால் இந்த பகுதிகளில் தங்க தற்காலிக பந்தல்கள் அதிகளவில் அமைக்கப்பட்டு வருகின்றன.
மேலும் பக்தர்களை வரவேற்கும் விதமாக காட்டு மரங்களின் இலைகளால் அலங்கரிக்கப்பட்ட வரவேற்பு நுழைவுவாயிலும் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் ஸ்பாட் புக்கிங் செய்து கொள்வதற்கான வசதியும், சன்னிதான தகவல்களை தெரிந்து கொள்வதற்கான தகவல் மையமும் இங்கு உள்ளது.
சத்திரம் வனத்துறை பிரிவு அதிகாரி பி.பிரசாந்த் தலைமையில் 17 அலுவலர்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், "இப்பாதை அடர்வனப்பகுதி என்பதுடன் கடுமையான மேடு, பள்ளமாக இருக்கும். ஆகவே இதய பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் உள்ளவர்கள் முடிந்தவரை இப்பாதையை தவிர்ப்பதே நல்லது. 2 கி.மீ. இடைவெளியில் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவச உதவிக்கு பக்தர்கள் 24 மணி நேரமும் 91884 07523 என்ற எண்ணில்தொடர்பு கொள்ளலாம்" என்றனர்